search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாமன்னர் ராஜராஜன்"

    • யானை மீது திருமுறை நூல் வைக்கப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க, திருமுறை வீதி உலா பெரிய கோவிலில் இருந்து புறப்பட்டு நகரின் 4 ராஜவீதிகளில் வலம் வந்தது.
    • தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் சதய விழாவில் கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    சோழ சாம்ராஜ்யத்தின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவர் மாமன்னர் ராஜராஜசோழன். இவர் கட்டிய தஞ்சை பெரிய கோவில் சிறந்த கட்டிடக்கலைக்கு எடுத்துகாட்டாகவும், உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. தனது ஆட்சி காலத்தில் கட்டிடக்கலை மட்டுமின்றி நீர் மேலாண்மை உள்பட பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

    இந்நிலையில் மாமன்னர் ராஜராஜசோழன் முடி சூட்டிய நாளை அவர் பிறந்த நட்சத்திரமான ஐப்பசி சதய நாளன்று சதய விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று 1038-வது சதய விழா அரசு விழாவாக தொடங்கி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சதய விழா ஆண்டை குறிக்கும் வகையில் மாலையில் 1038 பரத நாட்டிய கலைஞர்களின் சிறப்பு நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

    ராஜராஜ சோழன் பிறந்த சதய நட்சத்திரமான இன்று 2-ம் நாள் விழா தஞ்சை பெரிய கோவிலில் நடைபெற்றது. முதலில் காலை 6.30 மணிக்கு அரண்மனை தேவஸ்தானம் நிஷாந்தி மற்றும் ஆறுமுகம் குழுவினரின் மங்கள இசையுடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

    இதையடுத்து கோவில் பணியாளர்களுக்கு புத்தாடைகளை தருமபுரம் ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வழங்கினார்.

    இதையடுத்து பெரிய கோவிலுக்கு வெளியே உள்ள மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

    யானை மீது திருமுறைகள் வைத்து வீதி உலா நடைபெற்றது.

    யானை மீது திருமுறைகள் வைத்து வீதி உலா நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து யானை மீது திருமுறை நூல் வைக்கப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க, திருமுறை வீதி உலா பெரிய கோவிலில் இருந்து புறப்பட்டு நகரின் 4 ராஜவீதிகளில் வலம் வந்தது.

    அடியார்கள், ஓதுவார்கள் திருமுறை பாராயணம் பாடியப்படி திருவீதி உலா வந்தனர். அப்போது பழங்கால கொம்பு உள்ளிட்ட பல்வேறு அரிய இசைக்கருவிகள் இசைக்கப்பட்டன. இதில் பெரியகோவில் உருவம் பொறித்த பிரமாண்ட மாதிரி அரங்கம் வாகனத்தில் வைக்கப்பட்டு வீதி உலாவில் பின்தொடர்ந்து வந்தது.

    தொடர்ந்து பெரிய கோவிலில் பெருவுடையாருக்கு பால், மஞ்சள், தயிர், தேன், எலுமிச்சை சாறு, இளநீர், சந்தனம் உள்ளிட்ட 48 வகையான பொருட்களால் பேரபிஷேகம் செய்யப்பட்டது. தருமபுரம் ஆதீனம் தலைமையில் நடந்த இந்த பேரபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். மதியம் பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பெருந்தீப வழிபாடு நடைபெற்றது.

    இதையடுத்து மங்கள இசை, நடனம், தேவார இன்னிசை நிகழ்ச்சிகள் நடந்தன.

    சதய விழாவையொட்டி இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டது. தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் சதய விழாவில் கலந்து கொண்டனர். இதனால் மாநகர் விழாக்கோலம் பூண்டது. பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    • நாடு முழுவதும், நிலத்தை அளந்து கணக்கெடுக்கும் முறையை முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர், மன்னர் ராஜராஜன்.
    • மன்னர்களின் வெற்றி வரலாற்றைத் தெரிவிக்கும் மெய்க்கீர்த்தி என்ற வாசகத்தை அறிமுகப்படுத்திய பெருமை மன்னர் ராஜராஜனுக்கே சேரும்.

    ஐப்பசி மாதம் சதயம் நட்சத்திர நாளான இன்று, மாமன்னர் ராஜராஜ சோழனின் 1,038-வது பிறந்தநாள்.

    சோழ சாம்ராஜ்யத்தின் ஒப்புமை இல்லா சக்கரவர்த்தி ராஜராஜனின் கீர்த்திகள் அளவிடற்கரியவை.

    கடல் தாண்டி படைகளை அழைத்துச் சென்று, அந்நிய தேசத்தில் வெற்றிக்கொடி நாட்டிய முதல் இந்திய மன்னர் ராஜராஜனின் புகழ், இன்னும் கடல் தாண்டாமல் இருக்கிறது என்பதோடு, தமிழகத்துக்கு வெளிப்புறம்கூட முழுமையாகச் சென்று சேரவில்லை என்பது வேதனையான நிதர்சனம்.

    சுந்தர சோழன் - வானவன் மாதேவி ஆகியோரின் இரண்டாவது மகனாகப் பிறந்து, கி.பி.985-ம் ஆண்டு சோழ தேச மன்னராக முடிசூட்டப்பட்ட ராஜராஜன், தனது 29 ஆண்டுகால ஆட்சியில் செய்த சாதனைகள் மலைக்க வைக்கின்றன.

    ராஜராஜன்

    நாடு பிடிக்க வேண்டும் என்ற மண் ஆசையால் அல்ல, நாட்டு மக்களின் நலனுக்காக அவர் நடத்திய அத்தனைப் போர்களிலும் வெற்றி பெற்றார்.

    தோல்வியையே சந்திக்காத 6 மாமன்னர்களில் ஒருவர் என்ற பெருமையை ராஜராஜன் பெற்றார்.

    முதல் போராக அவர் களம் கண்டது, காந்தளூர்ச் சாலைப் போர்.

    தனது நாட்டுத் தூதரை சேர மன்னர் பாஸ்கர ரவிவர்மன் சிறை பிடித்தான் என்ற காரணத்தாலோ, தனது அண்ணன் ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்கள் பயிற்சி பெற்ற இடம் என்பதாலோ, தற்போதைய கேரளாவில் இருக்கும் காந்தளூர்ச் சாலை என்ற போர்ப்பயிற்சி தளத்தை, நிர்மூலம் ஆக்கினார், ராஜராஜன்.

    நாட்டின் எல்லையை நிலைப்படுத்தும் விதமாக, கீழைச்சாளுக்கியத்தின் வேங்கை நாடு (தற்போதைய ஆந்திரா), கங்கபாடி (மைசூரு பகுதி), தடிகைபாடி, நுளம்பபாடி (பெங்களூரு, பெல்லாரி), கலிங்கம் (ஒடிசா), இரட்டபாடி (வட கர்நாடகம்) ஆகிய இடங்களில் நடைபெற்ற போர்களில் வெற்றிவாகை சூடினார்.

    சாளுக்கியர்களுடனான போரில், ராஜராஜன் தனி ஆளாக குதிரை மீது சென்று, சத்யாச்சரியனுடன் நேரடியாகப் போர் நடத்தி, அவனை விரட்டியடித்ததும், சாளுக்கிய படைத் தளபதி கேசவன் என்பவனை கைது செய்ததும் அவரது வீரத்துக்கு எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன.

    கப்பல் படையின் முக்கியத்துவத்தை உணர்ந்த ராஜராஜன், அந்தப் படையை விரிவுபடுத்தினார்.

    மக்களின் அன்பை பெற்றார்

    அந்தக் காலத்தில், இந்தியாவில் வேறு எந்த மன்னரும் செய்திராத சாதனையாக, கப்பல் படையை முதல் முறையாக கடல் கடந்து அழைத்துச் சென்று, இலங்கை, மாலத்தீவு, லட்சத்தீவு ஆகிய நாடுகளில் நடந்த போர்களில் வெற்றி பெற்றார்.

    தான் நடத்திய அத்தனை போர்களில் வென்ற இடங்களை, சோழ தேசத்துடன் இணைக்காமல், அங்கு இருந்தவர்களையே ஆட்சி செய்யும்படி ஏற்பாடு செய்தார். அந்த நாட்டு மக்களை நல்ல முறையில் நடத்தியதால் அவர்களின் அன்பையும் பெற்றார். இந்த அபூர்வ நடவடிக்கை, எந்த மன்னரும் செய்யத் துணியாத செயல்.

    நாடு முழுவதும், நிலத்தை அளந்து கணக்கெடுக்கும் முறையை முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர், மன்னர் ராஜராஜன்.

    பதினாறு சாண் நீளமுடைய 'உலகளந்தான் கோல்' என்ற கோல் மூலம், விவசாயம் செய்யும் நிலம், விவசாயம் செய்ய முடியாத நிலம், இறையிலி நிலம் என நிலத்தின் வகையைப் பிரித்து, அவற்றுக்கு ஏற்றபடி வரி வசூலிக்கும் முறையைக் கொண்டு வந்தார்.

    ஆட்சி நிர்வாக வசதிக்காக நாட்டை மண்டலம், கூற்றம், வளநாடு எனப் பிரித்து, ஒவ்வொரு பகுதிக்கும் அதிகாரிகளை நியமித்தார்.

    அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் விதமாகவும், கிராம மக்களின் நலன்களைக் கவனிக்கவும், ஏரி, குளம், கிணறு ஆகியவற்றைப் பராமரிக்கவும், நிலவாரியம், நீர்வாரியம், தோட்டவாரியம், பஞ்சவாரியம், சம்வுத்சரவாரியம் போன்ற வாரியங்களை ஏற்படுத்தினார். நீர்மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

    216 அடி உயர விமானம்

    தஞ்சை நகரில் 216 அடி உயர விமானம் கொண்ட கோவிலை மன்னர் ராஜராஜன் கட்டி இருப்பது அவரது சாதனைகளின் சிகரம்.

    புவியீர்ப்பு மையத்தைக் கண்டறிந்து, 5 அடி மட்டுமே என்ற அடித்தளத்தில், பிரமிக்கத்தக்க கோவிலை கருங்கற்களால் எழுப்பியது, மன்னர் ராஜராஜனின் தொழில்நுட்ப அறிவைப் பறைசாற்றுகிறது.

    ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த பின்னரும் அழியாமல் இருக்கும் வண்ண ஓவியங்களை, கோவிலின் முதல் தளத்தில் தீட்டியது, பரத முனிவர் குறிப்பிட்ட பரதக் கலையின் 108 கரணங்களை சிவனே ஆடிக் காட்டுவது போன்ற சிற்பத் தொகுதியை (81 சிற்பங்கள் மட்டும் நிறைவு பெற்றுள்ளன) உருவாக்கியது ஆகியவை மன்னர் ராஜராஜனின் கலை ஆர்வத்தை வெளிப்படுத்துகின்றன.

    கோவிலுக்கு நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட அனைத்து நகை பற்றிய துல்லியமான அளவையும், கொடுத்தவர்களின் பெயர் விவரங்களையும் கோவில் சுவரில் கல்வெட்டாகப் பதிவு செய்தது மன்னர் ராஜராஜனின் பெருந்தன்மைக்கு அடையாளமாக இருக்கிறது.

    தஞ்சைக் கோவிலை, இறை வழிபாட்டுத் தலம் என்பதையும் தாண்டி, மக்களுக்கு வாழ்வளிக்கும் பொருளாதார மையமாகவும், வங்கி போலவும் பயன்படுத்தினார் என்பது ஆச்சரியம் அளிக்கிறது.

    இலவசம்

    இதற்காக அவர் கொண்டுவந்த 'சாவா மூவா பேராடு' என்ற அற்புதமான திட்டம் எந்த மன்னரின் மனதிலும் தோன்றாத அம்சம் ஆகும். அதாவது, கோவிலில் உள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆடுகள், ஏழைகளுக்கு இலவசமாக வழங்கப்படும். அதனைக் கொண்டு அவர்கள் ஆடுகளை வளர்த்துப் பெருக்கி அதன் மூலம் வாழ்க்கை நடத்தி, இறுதியில் அதே அளவிலான ஆடுகளை கோவிலுக்கு திரும்ப வழங்கும் திட்டம், இக்கால பொருளாதார நிபுணர்களையே ஆச்சரியப்பட வைக்கிறது.

    இந்தக் கோவிலுக்குத் தேவைப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் உரிய தொகை முதலீடு செய்யப்பட்டு, அதில் கிடைக்கும் வட்டி மூலம் அந்தப் பொருள்கள் வாங்கப்பட்ட பொருளாதார திட்டம் வேறு எந்தக் கோவிலிலும் காணாதது ஆகும்.

    கல்வெட்டுகளில், தமிழ் வட்டெழுத்து முறையை அறிமுகப்படுத்தியவர் மன்னர் ராஜராஜன்தான்.

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் பல ஆண்டுகளாக மறைந்து கிடந்த தேவாரப் பாடல்களை மீட்டுக் கொண்டு வந்தது, மன்னர் ராஜராஜன் தமிழக்குச் செய்த மகத்தான தொண்டு.

    தேவாரப் பாடல்

    தமிழைப் போற்றும் வகையில், மூவர் பாடிய தேவாரப் பாடல்களை கோவிலில் இசையுடன் நாள்தோறும் பாடுவதற்காக, தேவாரம் ஓதுபவர்கள், இசைக் கலைஞர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்களை நியமித்து, அவர்கள் பெயர் விவரம், அவர்களுக்கான சன்மானம் ஆகிய விவரங்களை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் கல்வெட்டாக எழுதி வைத்தார்.

    அதேபோல கோவிலில் பணியாற்றிய 402 நாட்டியப் பெண்களின் பெயர், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டின் எண், அவர்களுக்கான சன்மான தொகை ஆகியவற்றையும் கல்வெட்டாக எழுதி வைத்தார்.

    சிவன் மீதுள்ள பற்று காரணமாக மன்னர் ராஜராஜன், தஞ்சையில் பெரிய கோவிலைக் கட்டினார் என்றாலும், பெங்களூரு அருகே விஷ்ணு கோவிலையும், நாகப்பட்டினத்தில் புத்த விகாரையும் கட்டிக் கொடுத்தார் என்பது அவரது மத சகிப்புத் தன்மையை எடுத்துக் காட்டுகிறது.

    மன்னர்களின் வெற்றி வரலாற்றைத் தெரிவிக்கும் மெய்க்கீர்த்தி என்ற வாசகத்தை அறிமுகப்படுத்திய பெருமையும் மன்னர் ராஜராஜனுக்கே சேரும்.

    சாதனை

    அவரைப் பின்பற்றி மற்ற மன்னர்களும் வெளியிட்ட மெய்க்கீர்த்திகள், தமிழகத்தை ஆட்சி செய்த மன்னர்களின் வரலாற்றை அறிந்து கொள்ள பேருதவியாக இருக்கின்றன.

    71 வயது வரை வாழ்ந்த மாமன்னர் ராஜராஜன் செய்த சாதனைகளை இதுவரை எவரும் முறியடிக்கவில்லை.

    அந்த மன்னரின் பிறந்தநாள் விழா, ஆண்டுதோறும் அரசு சார்பாகக் கொண்டாடப்படுவது வரவேற்கத்தக்கது.

    கும்பகோணம் அருகே உடையாளூர் என்ற இடத்தில் மன்னர் ராஜராஜன் உயிர் துறந்ததாகக் கூறப்படுகிறது.

    அதன் நம்பகத் தன்மையைக் கண்டறிந்து, உரிய இடத்தில் அவருக்கு பிரமாண்ட நினைவுச் சின்னம் அமைப்பதே மன்னர் ராஜராஜனுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.

    ×