search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர் உடல் மீட்பு"

    • நேற்று இருசக்கர வாகனத்தில் அஞ்செட்டி கோவிலுக்கு சென்றனர்.
    • ஒருவரை ஒருவர் காப்பாற்ற முயன்ற போது முடியவில்லை.

    ஒகேனக்கல்,

    தருமபுரி மாவட்டம், இண்டூர் அருகே உள்ள நாகர்கோவில் ஆற்று கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் பாலகிருஷ்ணன் (வயது21) பாலக்கோடு அரசு கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவரது நண்பர் அதியமான் கோட்டை அடுத்த ஆத்துகொட்டாய் பகுதியைச் சேர்ந்த முல்லைவேந்தன் மகன் தனுஷ் (19), இவர் ஆட்டுக்காரம்பட்டி தனியார் கல்லூரியில் படித்து வந்தார். மற்றொருவர் சாமுவேல் ஆகிய மூன்று பேரும் நேற்று இருசக்கர வாகனத்தில் அஞ்செட்டி கோவிலுக்கு சென்றனர்.

    பின்னர் வீட்டிற்கு திரும்பிய போது ஒகேனக்கல் வந்துள்ளனர். அங்கு பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்தனர். பின்னர் ஆலம்பாடி, புளியந்தோப்பு காவிரி ஆற்றில் குளித்தனர்.

    அப்போது பாலகிருஷ்ணன், தனுஷ் ஆகியோர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். ஒருவரை ஒருவர் காப்பாற்ற முயன்ற போது முடியவில்லை. இதை பார்த்து அருகில் இருந்தவர்கள் சத்தம் போட்டனர்.

    இதுதொடர்பாக மற்றொரு நண்பர் சாமுவேல் ஒகேனக்கல் போலீசுக்கு தகவல் அளித்தார். அந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த ஒகேனக்கல் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பாலகிருஷ்ணன் மற்றும் தனுஷ் ஆகியவரை தேடினர். அப்போது பாலகிருஷ்ணனின் உடலை மட்டும் மீட்டனர். தனுஷின் உடல் கிடைக்காததால் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கல்லூரி மாணவர்கள் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சுமார் 30 அடி ஆழம் வரை உள்ள பகுதிக்கு சென்றபோது 4 பேரும் திடீரென்று தண்ணீரில் மூழ்கினர்.
    • கோபாலகிருஷ்ணன் மட்டும் ஒருவழியாக தப்பி கரையேறினார்.

    திருச்சி:

    திருச்சி ஸ்ரீரங்கம் பட்டர் தோப்பு பகுதியில் பட்டர் குலம் என்ற பெயரில் வேதபாடசாலை இயங்கி வருகிறது. இதனை ஆடிட்டர் பத்ரிநாராயணன் என்பவர் நிர்வகித்து வருகிறார்.

    இங்கு 50-க்கும் மேற்பட்டோர் வேதம் பயின்றனர். நேற்று முன்தினத்துடன் இந்த கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் நிறைவடைந்தன. இதையடுத்து பெரும்பாலான பெற்றோர் ஸ்ரீரங்கம் வந்து தங்களது மகன்களை சொந்த ஊருக்கு அழைத்து சென்றனர்.

    அவர்கள் தவிர திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த விஷ்ணு பிரசாத் (வயது 13), ஹரி பிரசாத் (13), ஈரோட்டை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (12) மற்றும் ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த அபிராம் (13) ஆகிய 4 பேர் மட்டும் தங்கியிருந்தனர்.

    அவர்கள் இன்று (திங்கட்கிழமை) ஊருக்கு செல்ல முடிவெடுத்து இருந்தனர். இதற்கிடையே நேற்று காலை 6 மணியளவில் யாத்ரி நிவாஸ் அருகிலுள்ள கொள்ளிடம் ஆற்றில் குளிப்பதற்காக வேத பாடசாலையில் அனுமதி பெற்று 4 பேரும் சென்றனர்.

    சுமார் 30 அடி ஆழம் வரை உள்ள அந்த பகுதிக்கு சென்றபோது 4 பேரும் திடீரென்று தண்ணீரில் மூழ்கினர். இதில் கோபாலகிருஷ்ணன் மட்டும் ஒருவழியாக தப்பி கரையேறினார். மற்ற 3 பேரையும் காப்பாற்றுமாறு கூச்சல் போட்டார்.

    ஆனால் அங்கு யாரும் இல்லாததால் ஓடிச்சென்று வேதபாடசாலையில் தெரிவித்தார். அதன்பேரில் பாடசாலை நிர்வாகிகள் உடனடியாக ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    ஆனால் அதற்குள் தண்ணீரில் மூழ்கிய 3 பேரும் என்ன ஆனார்கள் என்பது தெரியாமல் போனது. இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 25 பேர் ஆற்றுக்குள் இறங்கியும், பைபர் படகுகள் மூலம் அந்த பகுதி முழுவதும் தேடினர். அப்போது விஷ்ணு பிரசாத் என்ற மாணவர் மட்டும் பிணமாக மீட்கப்பட்டார். மற்ற 2 பேரை கண்டுபிடிக்க முடியவில்லை. மாலை வரை தேடியும் பலனின்றி போனது.

    அதே சமயம் இரவு நேரம் வந்ததால் தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இன்று காலை 2-வது நாளாக ஆற்றில் மூழ்கி மாயமான 2 மாணவர்களை தேடும் பணிகள் தொடங்கின.

    முன்னதாக முக்கொம்பு தடுப்பணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் பாசனத்திற்காக 1,903 கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்தது. மாணவர்களை தேடும் பணிக்காக கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது.

    கடந்த சில வாரங்களாக கம்பரசம்பேட்டையை அடுத்த மூலத்தோப்பு அகிலாண்டேஸ்வரி கார்டன் பகுதியில் காவிரி கூட்டுகுடிநீர் திட்டப்பணிகளுக்காக கிணறுகள் தோண்டப்பட்டு கொள்ளிடம் ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது.

    அதனை அறியாமல் மாணவர்கள் ஆற்றின் நடுப்பகுதிக்கு சென்றதால் சிக்கிக்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கிடையே தங்கள் மகன்கள் உயிருடன் கிடைத்து விடுவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் அவர்களது பெற்றோர் கொள்ளிடம் ஆற்றின் கரையில் சோகத்துடன் காத்திருக்கிறார்கள். மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி 30 மணி நேரத்தை கடந்துவிட்டதால் அவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று கூறப்பட்டது.

    இருப்பினும் உடல்களை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தொடர் தேடுதல் பணியில் ஹரிபிரசாத் என்பவரது உடல் இன்று மதியம் மீட்கப்பட்டுள்ளது.

    கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவில் நாணல் புற்கள் வளர்ந்துள்ளதால் அதற்கிடையே மேலும் ஒரு மாணவரின் உடல்கள் சிக்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    ×