search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரங்கள் நடவு"

    • பனை, ஆலமரங்கள் வெட்டுவதை தவிர்க்க வேண்டுகோள்
    • பசுமைக் குழு கூட்டம் நடந்தது

    வேலூர்:

    வேலூர் மாவட்ட பசுமைக் குழு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைப்பெற்றது.

    வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட உள்ள திட்டப் பணிகள் காரணமாக அகற்றப்பட வேண்டிய மரங்கள் குறித்த விவரம் பசுமை குழு ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

    இதில் கலெக்டர் பேசியதாவது:-

    பனைமரம் மற்றும் ஆலமரம் போன்ற பல வருடங்களுக்கு பயன் தரக்கூடிய மர வகைகளை அகற்றுவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.

    வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் விதிமுறை களின்படி ஒரு மரத்தை அகற்றினால் அதற்கு ஈடாக 10 மரங்கள் நடவு செய்ய வேண்டும் என்கின்ற நிலையை பின்பற்றும் பொழுது ஒவ்வொரு இடத்திலும் அந்த மண்வளத்திற்கு ஏற்ற நம்முடைய பாரம்பரிய மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும்.

    புதிய மரங்களை நடவு செய்த பின்னர் பாதுகாப்பு கம்பி வேலிகள் அமைத்து முறையாக பராமரிக்க வேண்டும். குறிப்பாக நெடுஞ்சாலைகளில் மரங்களை நடவு செய்யும் பொழுது உயரம் குறைவாக உள்ள மரக்கன்றுகளை தவிர்த்து குறைந்தது 6 அடி முதல் 8 அடி வரை உள்ள மர வகைகளை நடவு செய்ய வேண்டும்.

    ஆலமரம் மற்றும் அரச மரங்களின் கிளைகளை வெட்டி நடவு செய்தாலே நல்ல நிலையில் வளர்ந்து வரும். நம்முடைய மண்வளத்திற்கு ஏற்ற மரவகையில் குறித்த ஆலோசனைகளை மாவட்ட வனத்துறை யிடமிருந்து பெற்று நடவு செய்யலாம்.

    பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் சார்பில் நம்முடைய வேலூர் மாவட்டத்திற்கு இந்த ஆண்டு 18 லட்சம் மரங்கள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    மாவட்ட வனத்துறையில் 10 லட்சம் மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளன. சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கினை வருகின்ற அக்டோபர் மாதம் 15-ந் தேதிக்குள் அதாவது பருவமழை தொடங்கு வதற்குள் நடவு செய்ய முனைப்புடன் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் கலாநிதி, மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, துணை கலெக்டர் (பயிற்சி) பிரியா உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×