search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலி துப்பறியும் நிறுவனம்"

    • ஆரம்பத்தில் போனை எடுத்துப் பேசிய டிடெக்டிவ் ஏஜென்சியினர் ஒரு கட்டத்தில் தொடர்பை கண்டுகொள்ளவில்லை.
    • ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கிறிஸ்டோபர் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் முசிறி பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்டோபர். இவரது அண்ணன் மனைவி கடந்த சில தினங்களுக்கு முன்பு கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இதையடுத்து அண்ணன் கேட்டுக்கொண்டதன் பேரில் கிறிஸ்டோபர் கூகுளில் சென்று தனியார் துப்பறியும் நிறுவனத்தின் விவரத்தை பார்த்தார்.

    அப்போது திருச்சி டிடெக்டிவ் ஏஜென்சி என்ற பெயரில் ஒரு துப்பறியும் நிறுவனம் அவரின் கண்ணுக்கு தென்பட்டது. அதனை தொடர்பு கொண்டு பல்வேறு விபரங்களை அவர் கேட்டறிந்தார். பின்னர் பல தவணையாக ரூ.21 ஆயிரம் வரை அண்ணன் மனைவியை கண்காணிக்க கொடுத்தார்.

    ஆரம்பத்தில் போனை எடுத்துப் பேசிய டிடெக்டிவ் ஏஜென்சியினர் ஒரு கட்டத்தில் தொடர்பை கண்டுகொள்ளவில்லை. இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கிறிஸ்டோபர் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வன், சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் குமார் மற்றும் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் திருச்சி செந்தண்ணீர்புரம் மற்றும் எடமலைப்பட்டிபுதூர் ஆகிய இடங்களில் மேற்கண்ட போலி நிறுவனம் செயல்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த போலி துப்பறியும் நிறுவனத்தை நடத்தி வந்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 31). பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரி மற்றும் வசந்த் (24), பி.எஸ்சி. பட்டதாரி ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர்.

    பின்னர் அவர்களிடமிருந்த 3 செல்போன்களை சோதனை செய்தபோது மேலும் பலர் சிக்கி, பல லட்சம் பணத்தை இழந்த அதிர்ச்சி தகவல் கிடைத்தது. கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்பவர் அமெரிக்காவில் வேலை செய்து வருகிறார்.

    இவர் ஊரில் இருக்கும் தனது மனைவியின் நடத்தையை கண்காணிக்க மேற்கண்ட மோசடி பேர் வழிகளிடம் ரூ.1 லட்சத்து 19 ஆயிரம் கொடுத்து ஏமாந்திருக்கும் தகவல் கிடைத்தது. இவர் திருச்சி சைபர் கிரைம் போலீசில் ஆன்லைன் மூலமாக புகார் அளித்துள்ளார்.

    மேலும் திருச்சி மாநகர போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் ஒருவரது மனைவி ஆஸ்திரேலியாவில் இருக்கிறார். இவர் கணவரின் நடத்தையை கண்காணிக்க ரூ.1 லட்சம் கொடுத்து ஏமாந்திருக்கும் தகவலை பார்த்து போலீசார் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

    பின்னர் அந்த பெண்மணியை தொடர்பு கொண்டு கடுமையாக திட்டினர். இதேபோன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சார்ந்தவர்கள் ரூ.10 லட்சம் வரை மோசடி பேர்வழிகளின் வங்கி கணக்குக்கு அனுப்பி ஏமாந்துள்ளனர்.

    இதுபற்றி விசாரணை அதிகாரி அன்புசெல்வன் கூறும்போது, போலி டிடெக்டிவ் ஏஜென்சி நடத்திய சதீஷ்குமார் மற்றும் வசந்துக்கு பாண்டிச்சேரியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் மூளையாக இருந்து செயல்பட்டுள்ளார். அவர் தனியாக பாண்டிச்சேரியில் இதேபோன்று நிறுவனம் நடத்தி வருவதாகவும், கிளை நிறுவனம் போன்று இவர்கள் திருச்சியில் நடத்தி வந்ததும் தெரிய வந்தது.

    இந்த நெட்வொர்க்கில் சேலம் மற்றும் சென்னை சேர்ந்த இருவருக்கு தொடர்புள்ளது. அவர்களைப் பிடித்தால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

    இதுபோன்று தனியார் டிடெக்டிவ் ஏஜென்சி நடத்துபவர்கள் கலெக்டர் மற்றும் அந்த மாவட்ட காவல்துறை உயர் அதிகாரியிடம் லைசன்ஸ் பெற வேண்டும். புகாரின் விவரங்கள், கண்காணிக்கப்படுபவரின் விவரம் போன்றவற்றை ஆவணப்படுத்த வேண்டும். இவர்கள் எந்த லைசன்சும் பெறவில்லை. மேற்படி நபர்களின் டிடெக்டிவ் ஏஜென்சி முடக்கப்பட்டுள்ளது.

    ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை கண்காணிக்க யாருக்கும் உரிமை இல்லை. இதுபோன்று பணம் கொடுத்து ஏமாறுபவர்கள் அவமானம் என நினைத்து புகார் கொடுக்க விரும்புவதில்லை. இதுவே மோசடி செய்பவர்களுக்கு சாதகமாக இருக்கிறது. பொதுமக்கள் விழித்துக் கொள்ளாத வரை இதுபோன்ற தவறுகள் நடப்பதை யாராலும் தடுக்க முடியாது என்றார்.

    ×