search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போப் பிரான்சிஸ்"

    • போப் பிரான்சிஸ் 6 நாள் பயணமாக கனடா சென்றுள்ளார்.
    • போப் பிரான்சிஸ் பழங்குடியின மக்கள் மற்றும் முன்னாள் மாணவா்கள் மத்தியில் உரையாற்றினாா்.

    ஒட்டாவா :

    கனடாவில் 1900-ம் ஆண்டு முதல் 1970-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த சிறுவர்கள் அவர்களின் குடும்பத்தினரிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு, கத்தோலிக்க தேவாலயங்களால் நடத்தப்பட்ட பள்ளிகளில் தங்கி கல்வி பயில கட்டாயப்படுத்தப்பட்டனா்.

    அப்படி தேவாலய பள்ளிகளில் படித்த பல்லாயிரக்கணக்கான பழங்குடியின மாணவர்கள் உடல் ரீதியிலும், பாலியல் ரீதியிலும் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கனடாவின் தற்போதைய அரசு இதை ஒப்புக்கொண்டு, அதற்காக மன்னிப்பும் கோரியது.

    இந்த நிலையில், கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் 6 நாள் பயணமாக கனடா சென்றுள்ளார். தனது சுற்றுப்பயணத்தின் முதல் நிகழ்வாக அல்பெர்டா மாகாணத்தின் தலைநகர் எட்மான்டனில் 19-ம் நூற்றாண்டில் தேவாலய பள்ளிக்கூடமாக இருந்த மிகவும் பாழடைந்த கட்டிடத்துக்கு சென்று அங்கு கூடியிருந்த பழங்குடியின மக்கள் மற்றும் முன்னாள் மாணவா்கள் மத்தியில் உரையாற்றினாா்.

    அப்போது 19-ம் நூற்றாண்டில் கத்தோலிக்க தேவாலயங்களால் நடத்தப்பட்ட பள்ளிக்கூடங்களில் பழங்குடியின மாணவர்கள் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதற்காக போப் பிரான்சிஸ் மன்னிப்பு கோரினார்.

    • வாடிகனின் நிர்வாகத் துறைகளில் பெண்களுக்கு முக்கிய பங்கு அளிக்கப்பட்டு வருகிறது.
    • வாடிகனில் கடந்த மாதம் அமலுக்கு வந்த புதிய அரசியல் சாசனம் குறித்து விளக்கம் அளித்தார்.

    வாடிகன் :

    போப் பிரான்சிஸ், ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், வாடிகன் நிர்வாகத்தில் பெண்களுக்கு முக்கிய பொறுப்புகளை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

    பிஷப்களை தேர்வு செய்யும் குழுவில் தற்போது ஆண்கள் மட்டுமே இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இக்குழுவில் பெண்களுக்கு வாய்ப்பளிக்க விரும்புவதாகத் தெரிவித்தார்.

    விரைவில் இக்குழுவில் 2 பெண்கள் இடம் பெறுவார்கள் என்றும் இதன்மூலம் இந்த பாதையில் வழிகள் கொஞ்சம் திறக்கப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். எனினும், இதற்கான முடிவு இன்னும் அதிகாரப்பூர்வமாக எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    வாடிகனின் நிர்வாகத் துறைகளில் பெண்களுக்கு முக்கிய பங்கு அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த போப் பிரான்சிஸ், வாடிகனின் நீதி மற்றும் அமைதிக்கான துறையின் 2ம் நிலை தலைவராக சகோதரி அலீஸ்ஸாந்தரா ஸ்மெரில்லி கடந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். வாடிகனில் கடந்த மாதம் அமலுக்கு வந்த புதிய அரசியல் சாசனம் குறித்து விளக்கம் அளித்தார்.

    • கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிசுக்கு 85 வயதாகிறது.
    • போப் பிரான்சிஸ் ஒரு மாதத்துக்கும் மேலாக சக்கர நாற்காலியை பயன்படுத்தி வருகிறார்.

    ரோம் :

    கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் சமீபகாலமாக மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகிறார். மூட்டு தசைநார் வீக்கமடைந்த நிலையில் அவர் ஒரு மாதத்துக்கும் மேலாக சக்கர நாற்காலியை பயன்படுத்தி வருகிறார். இந்த நிலையில் 85 வயதாகும் போப் பிரான்சிஸ் வயது மூப்பு மற்றும் உடல்நிலை பிரச்சினைகள் காரணமாக எந்த நேரத்திலும் பதவி விலகலாம் என தகவல்கள் பரவி வருகின்றன.

    குறிப்பாக கோடை காலத்தின் இறுதியில் அவர் பதவி விலகும் முடிவை அறிவிக்கலாம் என செய்திகள் வலம் வருகின்றன. இந்த நிலையில் போப் பிரான்சிஸ் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் பிரபல பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், "கோடை இறுதியில் பதவி விலகலை அறிவிக்கும் எண்ணம் எனது மனதில் நுழையவே இல்லை" என்றார்.

    மேலும் அவர் இந்த பேட்டியின்போது, இந்த மாதம் 24-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை கனடாவில் பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், அந்த பயணத்தின்போது போர் நடந்து வரும் உக்ரைனுக்கு செல்வேன் என தான் நம்புவதாகவும் கூறினார்.

    கத்தோலிக்க பாதிரியார்கள் மீது தொடர்ச்சியாக பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்ததையொட்டி புதிய ஆணை ஒன்றை போப் பிரான்சிஸ் வெளியிட்டு உள்ளார்.
    வாடிகன் சிட்டி :

    ஆஸ்திரேலியா, சிலி, ஜெர்மனி மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள கத்தோலிக்க பாதிரியார்கள் மீது தொடர்ச்சியாக பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் உலக அளவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் பாதிரியார்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது போப் ஆண்டவருக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது.

    எனவே பாதிரியார்களின் இத்தகைய பாலியல் குற்றங்களை விசாரிக்கும் வகையில் புதிய ஆணை ஒன்றை போப் பிரான்சிஸ் வெளியிட்டு உள்ளார். அதன்படி உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க மறைமாவட்டங்கள் ஒவ்வொன்றிலும், பாதிரியார்களின் பாலியல் குற்றங்களை விசாரிக்கும் வழிமுறை ஒன்றை அடுத்த ஆண்டு (2020) ஜூன் மாதத்துக்குள் உருவாக்க வேண்டும்.

    மேலும் பாதிரியார்களின் பாலியல் சுரண்டல் குறித்து யாரும் அறிந்தாலோ அல்லது சந்தேகம் ஏற்பட்டாலோ உடனடியாக அவருக்கு உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்களிடம் புகார் செய்ய வேண்டும் எனவும் போப் பிரான்சிஸ் தனது ஆணையில் குறிப்பிட்டு உள்ளார். கடந்த கால கசப்பான அனுபவங்களில் இருந்து பாடம் கற்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.
    கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை மதகுருவான போப் பதவியில் இருந்து பிரான்சிஸ் பதவி விலக வேண்டும் என வாட்டிகன் அரண்மனையின் முன்னாள் அதிகாரி வலியுறுத்தியுள்ளார். #Vaticanofficial #Popetoresign #abusecrisis
    டப்ளின்:

    கத்தோலிக்கத் திருச்சபையில் சிறார் பாலியல் முறைகேடுகள் குறித்த விவகாரங்களில் அருள்பணியாளர்களுக்குக் கடைப்பிடிக்கப்படும் அதே விதிமுறைகள், ஆயர்கள் அல்லது கர்தினால்களுக்கும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று, திருச்சபையின் உயர் அதிகாரியான சீன் ஓ’மல்லே சமீபத்தில் வலியுறுத்தியுள்ளார்.

    அமெரிக்க ஐக்கிய நாட்டின் வாஷிங்டன் முன்னாள் பேராயர் கர்தினால் தியோடர் மெக்காரிக் என்பவருக்கு எதிராக, பல, பாலியல் முறைகேடு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதையடுத்து அறிக்கை வெளியிட்டுள்ள, பாஸ்டன் பேராயரும், சிறார் பாதுகாப்பு குறித்த திருப்பீட குழுவின் தலைவருமான கர்தினால் சீன் ஓ’மல்லே இவ்வாறு கூறினார்.

    இவ்விவகாரங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மன்னிப்புக் கேட்பதைவிட, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும், கத்தோலிக்கச் சமுதாயத்தின் நேர்மையான கோபத்திற்குப் போதுமான அளவில் பதிலும் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    சிறார் மற்றும் வயதுவந்தோரிடம் பாலியல் முறையில் தவறாக நடந்துகொண்டு, கன்னிமை வார்த்தைப்பாட்டை மீறுகின்ற ஆயர்கள் விவகாரத்தில், உறுதியான மற்றும் தெளிவான கொள்கைகள்  திருச்சபைக்குத் தேவைப்படுகின்றன.

    பாலியல் முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் மீது நியாயமான மற்றும் விரைவான விசாரணை நடத்துதல், எல்லா நிலைகளிலும், குறிப்பாக, ஆயர்களைப் பொறுத்தவரை, திருச்சபையின் நிலைப்பாடு மற்றும் கொள்கைகளில் போதுமான மதிப்பீடு செய்தல்,  ஆயர்கள் மற்றும் கர்தினால்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் கையாளப்படும் நடைமுறைகள் குறித்து, விசுவாசிகளுக்கு மிகத் தெளிவாக அறிவித்தல் ஆகிய மூன்று செயல்திட்டங்கள் அவசியம் எனவும் அவர்  வலியுறுத்தினார்.

    இதற்கிடையில், அயர்லாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள போப் பிரான்சிஸ் அங்கு பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்ததுடன் இந்த பாவச்செயல் புரிந்தோரை மன்னிக்கும்படி கடவுளிடம் இன்று பிரார்த்தனை செய்தார்.

    இந்நிலையில், கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை மதகுருவான போப் பதவியில் இருந்து பிரான்சிஸ் பதவி விலக வேண்டும் என வாட்டிகன் அரண்மனையின் முன்னாள் அதிகாரியான கார்லோ மரியோ விகானோ என்பவர் வலியுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக, 11 பக்கங்களை கொண்ட அறிக்கையை வெளியிட்டுள்ள ஆர்ச் பிஷப் கார்லோ மரியா விகானோ, அமெரிக்காவில் பாதிரியார் மெக்காரிக் நடத்திய பாலியல் லீலைகளை கடந்த 2013-ம் ஆண்டு அவர் போப் ஆக பதவியேற்ற காலத்தில் நான் பிரான்சிஸிடம் தெரிவித்தேன். 

    ஆனால், போப் பிரான்சிஸிடம் நான் மெக்காரிக்கை பற்றி நேரடியாக புகார் அளித்தும் அவர் மீது 5 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காமல் இருந்த காரணத்துக்காக அவரது போப் பதவியை பிரான்சிஸ் ராஜினாமா செய்ய வேண்டும்.

    தேவாலயங்களில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என போப் பிரான்சிஸ் அடிக்கடி கூறி வந்துள்ளார்.
    சர்வதேச தேவாலயம் தற்போது சந்தித்துள்ள நெருக்கடியான நிலையில் தனது தவறுகளை அவர் உணர வேண்டும். 

    அதற்கு முன்னர் மெக்காரிக்-கின் நடவடிக்கைகள் தொடர்பாக கடந்த 2006-ம் ஆண்டிலேயே வாட்டிகன் அதிகாரிகளிடம் புகார் அளித்தேன். 

    கடந்த 1981-ம் ஆண்டில் இருந்து 2001-ம் ஆண்டுவரை அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரில் உள்ள இரு திருச்சபைகளில் பணியாற்றியபோது அங்கு திருமறை பயில வந்த ஆண்களிடம் ஓரினச்சேர்க்கைக்கு இணங்குமாறு வற்புறுத்தி, மெக்காரிக் தகாத முறையில் நடந்து கொள்வதாக எனது புகாரில் குறிப்பிட்டிருந்தேன். ஆனால், எனது புகார் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனக்கு பதிலும் கிடைக்கவில்லை.

    சகித்து கொள்ளவே முடியாது என்று அவர் எதைப்பற்றி அடிக்கடி கூறிவந்தாரோ, அதை நினைவில் வைத்து, மெக்காரிக் காரிக்கின் தவறுகளை மறைத்த இதர கர்டினால்கள் மற்றும் பிஷப்புகளுடன் சேர்ந்து போப் பிரான்சிஸ் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என தனது அறிக்கையில் கார்லோ மரியோ விகானோ வலியுறுத்தியுள்ளார்.

    போப் பிரான்சிஸ் ராஜினாமா செய்ய வேண்டும் என தற்போது போர்கொடி தூக்கியுள்ள ஆர்ச் பிஷப் கார்லோ மரியா விகானோ, கடந்த 2001-2006 ஆண்டுகளுக்கிடையில் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள வாட்டிகன் அரண்மனை தூதராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    #Vaticanofficial  #Popetoresign #abusecrisis
    ×