search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பைனான்ஸ்"

    • கவரிங் நகைகளை அடகு வைத்து லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து வந்தனர்.
    • மற்ற பைனான்ஸ் உரிமையாளர்களும் ஏமாந்து விட கூடாது என நினைத்து வாட்ஸ் ஆப் குரூப்பில் நகை படத்துடன் வெளியிட்டார்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் அருகே செட்டிகுளம் பகுதியை சேர்ந்தவர் ஜேசுராஜா (வயது 48).

    இவர், மார்தாண்டம் பகுதியை சேர்ந்த அனுஷா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து செட்டி குளத்தில் வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து சொகுசு காரில் சென்று குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கவரிங் நகைகளை அடகு வைத்து லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து வந்தனர்.

    கடந்த 6-ந்தேதி கருங்கல் பகுதியில் உள்ள ஒரு பைனான்சிற்கு இருவரும் காரில் சென்றனர். அங்கு கணவர் காரில் அமர்ந்து கொள்ள மனைவி மட்டும் நிறுவனத்திற்கு சென்றுள்ளார். அங்கு 9 கிராம் எடை யுள்ள இரண்டு காப்புகளை அடமானம் வைத்து ரூ.60 ஆயிரம் வாங்கியுள்ளார்.

    இந்நிலையில் பைனான்ஸ் கடை உரிமையாளருக்கு நகைமீது சந்தேகம் வரவே நகையை உரசி பார்த்துள்ளார். மேலும் நகை பரிசோதனை செய்யும் மெஷினில் பரிசோதனை செய்து பார்த்த போது 916 ஹால்மார்க் காட்டியுள்ளது. இருந்தும் திருப்தி அடையாத கடை உரிமையாளர் நகையை வெட்டி பார்த்தபோது அதன் மேல் பகுதியில் தங்கமும் உள்பகுதியில் செம்பும் கலந்துள்ளது தெரிந்தது.

    அதிர்ச்சி அடைந்த பைனான்ஸ் உரிமையாளர் தான் ஏமாற்றம் அடைந்தது போல மற்ற பைனான்ஸ் உரிமையாளர்களும் ஏமாந்து விட கூடாது என நினைத்து பைனான்ஸ் உரிமையாளர் வாட்ஸ் ஆப் குரூப்பில் நகை படத்துடன் வெளியிட்டார்.

    இதனை கண்ட தேங்காய்பட்டணம், பைங்குளம் பகுதியில் உள்ள பைனான்ஸ் உரிமை யாளர்கள் இதேபோல் தாங்களும் ஏமாற்ற பட்டதாக கூறி கருங்கல் மற்றும் புதுக்கடை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்கள்.

    இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு தக்கலை அருகே சித்திரங்கோட்டில் சுரேஷ் என்பவருக்கு சொந்த மான பைனான்ஸ் அலுவலகத்தில் பெண் ஒருவர்10 கிராம் எடையுள்ள ஒரு காப்பினை அடமானம் வைத்தார்.

    பைனான்ஸ் உரிமையாளர் நகையை சோதனை செய்து பார்த்த போது கவரிங் நகை என தெரிந்தது.

    மேலும் இவரது பைனான்ஸ் அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை பரிசோதனை செய்து பார்த்தபோது ரோட்டில் சொகுசு கார் வந்து நிற்பதும் அதில் இருந்து ஒரு பெண் இறங்கி வந்து நகையை அடமானம் வைப்பதும் தெரிந்தது.மேலும் காரின் எண்ணும் பதிவாகி இருந்தது. இதனை குறிப்பிட்டு அவர் கொற்றிகோடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    உடனே போலீசார் உஷார் அடைந்து வேர்கிளம்பி மற்றும் மேக்காமண்டபம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.அப்போது வேர்கிளம்பி வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை நடத்தினர். இதில் காரில் ஜேசுராஜா மற்றும் அவரது மனைவியும் இருந்தனர்.

    அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் இருவரும் போலி நகைகளை அடகு வைத்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    கைதான தம்பதியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. அனுஷாவும், ஜேசுராஜாவும் நிதி நிறுவனங்களில் போலி நகைகளை அடகு வைத்து கிடைத்த பணத்தில் சொகுசு வாழ்க்கை நடத்திஉள்ளனர்.

    இவர்களுக்கு ஒரே மாதிரியான தங்க காப்புகளை தயாரித்து கொடுத்தவர்கள் பற்றிய தகவலையும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். மேலும் மாவட்டம் முழுவதும் இதுபோல இவர்கள் மீது புகார்கள் பதிவாகி உள்ளதா? என்பது பற்றியும் போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர்.

    ×