search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேராசிரியர்கள் கோரிக்கை"

    அண்ணா பல்கலைக்கழகத்தில் 64 மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதையடுத்து பேராசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் விசாரணை நடத்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #Annauniversity
    சென்னை:

    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள்கள் மறு மதிப்பீட்டில் நடந்த முறைகேடுகள் சமீபத்தில் பூதாகரமாக வெடித்தது.

    தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களிடம் பல ஆயிரம் ரூபாய் லஞ்சமாகப் பெற்றுக் கொண்டு கூடுதல் மதிப்பெண் வழங்கி இருப்பதாக அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு முன்னாள் அதிகாரி உமா மற்றும் பேராசிரியர்கள் உள்பட 10 பேர் மீது புகார் கூறப்பட்டது.

    அதன் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அலுவலகம், வீடுகளில் சோதனை நடத்தினர். இதில் கோடிக்கணக்கில் லஞ்சப் பணம் கைமாறி இருப்பதும் தெரிய வந்தது.

    இந்த முறைகேடுகள் அனைத்துக்கும் பல்கலைக்கழக பதிவாளர் கணேசன் தான் காரணம் என்று பல்கலைக்கழக ஆசிரியர் கூட்டமைப்பு குற்றம் சாட்டியது.

    அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கவர்னர் மற்றும் துணைவேந்தருக்கு கடிதம் எழுதினர். இதையடுத்து பல்கலைக்கழக பதிவாளர் கணேசன் மாற்றப்பட்டு புதிய பதிவாளரை நியமித்து துணைவேந்தர் சூரப்பா உத்தரவிட்டார்.

    இதற்கிடையே அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடந்து இருப்பதாக புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் விசாரணை நடத்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    2017-2018-ம் ஆண்டுக்கான மருத்துவ கவுன்சிலிங் நடைபெறுவதற்கு முன்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி என்ஜினீயரிங் கல்லூரியில் 1,183 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். மருத்துவ கவுன்சிலிங் முடிந்ததும் முன்னணி என்ஜினீயரிங் கல்லூரிகளில் இடம் கிடைத்திருந்தும் 167 மாணவர்கள் சேராமல் மருத்துவ படிப்பில் சேர்ந்தனர். சில மாணவர்கள் வேளாண்மை கல்லூரிகளிலும், கால்நடை மருத்துவ கல்லூரிகளிலும் சேர்த்தனர். இவ்வாறு மொத்தம் 997 மாணவர்கள் பல்வேறு துறைகளுக்கு மாறி இருப்பதாக கூறப்பட்டது.

    ஆனால் இதை ஆய்வு செய்தபோது 64 மாணவர்கள் கிண்டி என்ஜினீயரிங் கல்லூரியில் கூடுதலாக சேர்ந்து இருப்பது தெரிய வந்ததாக பேராசிரியர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 3-வது செமஸ்டர் கால கட்டத்திலான வருகைப் பதிவேட்டை ஆய்வு செய்தபோது 13 மாணவர்கள் எலக்ட்ரானிக் என்ஜினீயரிங் பிரிவிலும், 8 மாணவர்கள் உற்பத்தி துறையிலும், 4 மாணவர்கள் மைனிங் துறையிலும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்று முடிந்த பின்பு தான் என்ஜினீயரிங் கல்லூரியில் இவ்வாறு கூடுதல் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது என்றும் பணம் வாங்கிக் கொண்டு மாணவர்கள் சேர்க்கப்பட்டு இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

    ஆனால் இந்த குற்றச்சாட்டை கிண்டி என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் டி.வி.கீதா மறுத்துள்ளார். 3-வது செமஸ்டரின் போது தமிழ்நாடு என்ஜினீயரிங் அட்மி‌ஷன் வழியாகத்தான் காலியிடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடந்தது.

    என்.ஆர்.ஐ. ஒதுக்கீடு, தொழில்துறை, அரபுநாடுகள் ஆகிய ஒதுக்கீடுகளில்தான் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. இவ்வாறு பல்கலைக்கழகமானது 20 சதவீத மாணவர்களை 4 துறையிலும் சேர்க்க அனுமதித்துள்ளது. ஆனால் 5 சதவீத அளவுக்குத்தான் தமிழ்நாட்டில் என்ஜினீயரிங் அட்மி‌ஷன் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    இதே போல் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவும், கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கையில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் கடந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை விவரங்களை தனிப்பட்ட முறையில் நான் ஆய்வு செய்தேன். அதில் எந்த முறைகேடும் காணப்படவில்லை.

    மாணவர் சேர்க்கை தொடர்பான அனைத்து விவரங்களையும் வெளியிடுவதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அனைத்து நடைமுறைகளும் வெளிப்படைத்தன்மையுடன் தான் நடைபெற்றுள்ளது என்றார். #Annauniversity
    ×