search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் பாதிப்பு"

    • வளர்மதிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நன்றாக செயல்பட்டு வந்த கைகளும் கால்களும் முதுகு தண்டுவடமும் திடீரென செயலிழந்தன.
    • ரூ.10 லட்சத்துக்கும் மேல் செலவு செய்ததால் குடும்பமே வறுமையில் சிக்கியது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியத்துக்கு உட்பட்ட உப்புத்துறை கிராமத்தை சேர்ந்த ராஜசேகரன் அவரது மனைவி வளர்மதி.

    இவர்களுக்கு 7-ம் வகுப்பு படிக்கும் 13 வயது மகாலட்சுமி என்ற மகளும், 4-ம் வகுப்பு படிக்கும் சக்திவேல் என்ற 9 வயது மகனும் உள்ளனர்.

    சிறிய அளவிலான விவசாய நிலம், 2 மாடுகளை வளர்த்துக் கொண்டு கூலி வேலைக்கு சென்று மகிழ்ச்சியாக இருந்து வந்த இந்த குடும்பத்தினருக்கு வளர்மதியின் உடல் நலக்குறைவால் நிலைமை தலைகீழாக மாறியது.

    வளர்மதிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நன்றாக செயல்பட்டு வந்த கைகளும் கால்களும் முதுகு தண்டுவடமும் திடீரென செயலிழந்தன.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜசேகரன் உள்ளூர் மற்றும் தேனி, மதுரை உள்ளிட்ட பல்வேறு தனியார் ஆஸ்பத்திரியில் தனது மனைவி வளர்மதியை அழைத்துச் சென்று பெரும் செலவு செய்து சிகிச்சை பார்த்தார்.

    பரிசோதனை செய்து பார்த்தபோது அபூர்வ வகை நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. மேலும் தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டு வந்தால் குணமாகும் என்று கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் கடந்த 1½ ஆண்டு காலமாக இந்த நோய் குணமாகவில்லை.

    இதையடுத்து பெங்களூருக்கு சென்று அங்கும் சிகிச்சை பார்த்தும் குணமாகவில்லை என்றும் வேதனை தெரிவிக்கின்றனர். தொடர் சிகிச்சை காரணமாக குடும்ப வருமானம் பாதித்தது. மேலும் மருத்துவச் செலவிற்கு வீட்டை அடமானம் வைத்தும் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கடன் பெற்றனர். ரூ.10 லட்சத்துக்கும் மேல் செலவு செய்ததால் குடும்பமே வறுமையில் சிக்கியது.

    தொடர்ந்து சிகிச்சை பெற வழி இல்லாததால் அவர்கள் செய்வது அறியாது வேதனையில் தவித்து வருகின்றனர். குடும்ப சூழ்நிலை அறிந்து அவரது மகள் மகாலட்சுமி தானே வீட்டு வேலைகளையும் சமையல் வேலைகளையும் செய்து தாயை பராமரித்து விட்டு அவ்வப்போது பள்ளிக்கு சென்று வருகிறார்.

    அதேபோல சக்திவேலும் மாட்டையும் ஒரு கன்று குட்டியையும் தானே தீவனம் போட்டு பராமரித்து வளர்த்து பணிகளை முடித்து பள்ளிக்கு சென்று வருகிறார்.

    மேற்கொண்டு சிகிச்சை பெற வழி இல்லாமல் வேதனையில் தவிக்கும் குடும்பத்தினர் தங்களுக்கு உதவ தமிழக முதலமைச்சரும் தமிழக அரசும் முன் வரவேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×