search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பின்னலாடை நிறுவனங்கள்"

    • பருத்தி பஞ்சு விலை ஒரு கேண்டி 65 ஆயிரம் ரூபாயாக இருந்தது. மாதக்கடைசியில், 70 ஆயிரம் ரூபாயை கடந்தது.
    • வார்ப்' நூல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. வடமாநில விவசாயிகள் பருத்திக்கு கிலோ 80 ரூபாய் கிடைத்தால் மட்டுமே விற்கின்றனர்.

    திருப்பூர்:

    பருத்தி சீசன் துவங்கியுள்ள நிலையில் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இருந்தே பருத்தி வரத்து துவங்கியது. துவக்கத்தில் பருத்தி பஞ்சு விலை ஒரு கேண்டி 65 ஆயிரம் ரூபாயாக இருந்தது. மாதக்கடைசியில், 70 ஆயிரம் ரூபாயை கடந்தது.

    வரத்து அதிகரித்த பின்னரும் பஞ்சு விலை சீரற்ற நிலையில் இருக்கின்றன. இதனால் நூற்பாலைகள் பஞ்சு கொள்முதல் செய்ய தயக்கம் காட்டுகின்றன. கடந்த ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு பஞ்சு விலை உயர்ந்ததால், இந்தாண்டும் விலை உயருமோ என விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

    ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள், ஆர்டர் விசாரணையை முடித்துள்ளன. பல்வேறு நாடுகளின் வர்த்தகர்களுடன் தொடர்ந்து விசாரணை நடத்தியும் வருகின்றனர். விலை குறைவாக இருக்கும் போதே, நூல் கொள்முதல் ஆர்டர் கொடுக்கவும் துவங்கிவிட்டன.

    இதுகுறித்து நூற்பாலை தரப்பினர் கூறியதாவது:-

    நூல் வர்த்தக விசாரணை, கடந்த அக்டோபர் மாதத்தை காட்டிலும், இம்மாதம் நன்றாக இருக்கிறது. விசாரணை மட்டுமல்லாது, கொள்முதல் ஆர்டர்களும் கிடைக்கின்றன. பஞ்சு விலை நிலையில்லாமல் இருப்பதால், இனியும் நூல் விலை குறைய வாய்ப்பில்லை.

    'வார்ப்' நூல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. வடமாநில விவசாயிகள் பருத்திக்கு கிலோ 80 ரூபாய் கிடைத்தால் மட்டுமே விற்கின்றனர். இதனால் பஞ்சு விலை இனியும் குறையாது. பருத்தி விற்பனை வேகமெடுக்காமல் இருப்பதால், 'ஜின்னிங்' பேக்டரிகளில் இருந்து பஞ்சு வரத்தும் வேகமெடுக்கவில்லை.

    ஒரு கிலோ பருத்தியில் 33 சதவீதம் மட்டுமே பஞ்சு கிடைக்கும். மீதி பருத்திக்கொட்டையுடன் கழிக்கப்படும். இதனால் ஜின்னிங் பாக்டரியில் பஞ்சு உற்பத்தியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த சில மாதங்களாக ஈடுபாடு காட்டாமல் இருந்த பின்னலாடை நிறுவனங்கள் பஞ்சு கொள்முதலில் கவனம் செலுத்த துவங்கியுள்ளன.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க (சைமா) தலைவர் ஈஸ்வரன் கூறுகையில், பஞ்சு விலை கடந்த சில நாட்களாக நிலையில்லாமல் ஏற்றத்தாழ்வாக இருக்கிறது. காரணமே இல்லாமல் பஞ்சு விலை ஒரு கேண்டி 72 ஆயிரம் ரூபாயை தாண்டிவிடுகிறது. கடந்த ஆண்டில் உருவான குழப்பம் மீண்டும் வந்துவிடக்கூடாது. மத்திய அரசும், இந்திய பருத்தி கழகமும் பருத்தி சீசன் துவங்கிய பின் 6 மாதங்கள் வரை பஞ்சு விலை சீராக இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த அனைத்து வர்த்தகமும் நின்றுபோனது.
    • பெரிய கப்பல்களில் ஏற்றப்படுவதற்கு இரண்டு வாரத்துக்கு மேலாகிறது.

    திருப்பூர்:

    திருப்பூரில் இருந்து பின்னலாடைகள் ஆண்டு ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் கோடி அளவுக்கு மேல் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கொரோனா தொற்று காலத்தை தவிர்த்து மற்ற ஆண்டுகளில் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி மூலம் பல ஆயிரம் கோடி அந்நிய செலாவணி ஈட்டி தரும் நகராக உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பின்னலாடைகள் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த 2020 கொரோனா தொற்றின் போது உலகம் முழுவதும் போக்குவரத்து முடக்கப்பட்டு ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த அனைத்து வர்த்தகமும் நின்றுபோனது. இந்நிலையில், கொரோனா தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்து கப்பல் மூலம் சரக்குகள் அனுப்பும் நிலை வந்த போது கப்பல் நிறுவனங்கள் குறைந்த அளவு கப்பல்களை மட்டுமே இயக்கின. மேலும் சரக்கு பெட்டக பற்றாக்குறையும் ஏற்பட்டது .இந்நிலை தற்போது வரை தொடர்கிறது.

    தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கு பின்னலாடைகளை ஏற்றுமதி செய்ய சீசனை பொறுத்து ஒரு கண்டெய்னருக்கு 6 ஆயிரம் டாலர் முதல் 8 ஆயிரம் டாலர் வரை கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளது. இது அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு 12 ஆயிரம் டாலர் முதல் 15 ஆயிரம் டாலர் வரை உள்ளதாகவும், கொரோனா தொற்றுக்கு பின் விலை சற்று குறைந்திருந்தாலும் சரக்கு பெட்டக தட்டுப்பாடு உள்ளதாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் கிடைக்கும் குறைந்த லாபத்தில் பெரும் பகுதி சரக்கு பெட்டக கட்டணமே சென்று விடுவதாகவும், உலக அளவில் வர்த்தக சரக்கு கப்பல் நிறுவனங்கள் கொரோனா தொற்றுக்கு பின் புதிய உத்தியை கையாளத் தொடங்கியுள்ளன. அதாவது குறைந்த அளவு கப்பல்களை மட்டுமே இயக்கி வருகின்றன. இதன் காரணமாகவும் விலை ஏற்றம் உள்ளது‌.

    அதே நேரத்தில் சீனா உலகின் பெரிய ஏற்றுமதியாளராக உள்ளதால், அந்நாட்டுக்கு அதிக கண்டெய்னர்கள் தேவைப்படுவதால் காலி கண்டெய்னர்கள் எடுத்து வரும் கப்பல்களுக்கு கண்டெய்னர் ஒன்றுக்கு 400 முதல் 500 டாலர் வரை கட்டணமாக கொடுப்பதால், உலக அளவில் வர்த்தக கப்பல்களில் கையாளப்படும் கண்டெய்னர்களில் பெரும்பகுதி சீனாவுக்கு சென்று விடுவதால், மற்ற வளரும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய சரக்கு பெட்டகம் கிடைக்காமல் தடுமாறி வருகின்றன.

    இதன் காரணமாக தட்டுப்பாடு ஏற்பட்டு கடுமையாக விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி சரக்கு பெட்டகங்களை ஏற்றிச் செல்லும் வர்த்தக கப்பல் நிறுவனங்கள், தங்களிடம் உள்ள வர்த்தக கப்பல்களில் பாதியளவு கூட இயக்காமல் நிறுத்தி வைத்து குறைவான கப்பல்களை மட்டும் இயக்கி அதிக லாபம் பார்த்து வருவதாக ஏற்றுமதியாளர்கள் கூறுகின்றனர்‌.

    திருப்பூரின் ஏற்றுமதி முழுவதும் கப்பல்களை மட்டுமே சார்ந்து உள்ளது. குறிப்பாக தூத்துக்குடி, சென்னை, கொச்சின் துறைமுகங்களை சார்ந்து உள்ள நிலையில், தற்போது நிலவும் கண்டெய்னர் தட்டுப்பாடு ஏற்றுமதியை பாதிக்கும் நிலை உள்ளது. அதே நேரத்தில் குறித்த காலத்தில் சரக்குகளை அனுப்ப வேண்டிய தேவை இருப்பதால் ஏற்றுமதியாளர்களும் என்ன விலை கொடுத்தேனும் கண்டெய்னர்கள் புக் செய்ய வேண்டிய நிலையால், கப்பல் கம்பெனிகள் கொள்ளை லாபம் ஈட்டி வருகிறது.

    உலக பொருளாதாரத்தில் தான் ஒரு அசைக்க முடியாத சக்தியாக திகழ முற்படும் சீனாவும் தன் பங்குக்கு காலி சரக்கு பெட்டகங்களை கபளீகரம் செய்து தன் நாட்டுக்கு வரும்படி செய்வதால் இங்கு கண்டெய்னர் தட்டுப்பாடு நிலவுவதாக திருப்பூர் பின்னலாடை துறையினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இந்த நிலை நீடிக்கும் பட்சத்தில் ஏற்றுமதி குறைந்து போகும் சூழலால் நாட்டுக்கு வரும் அந்நிய செலாவணி குறையும் அபாயம் இருப்பதால், மத்திய அரசு இதில் உரிய கவனம் செலுத்தி சரக்கு பெட்டகங்கள் எளிதாக குறைந்த விலையில் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே திருப்பூர் பின்னலாடை துறையினர் வேண்டுகோளாக உள்ளது‌.

    திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்கள், பின்னலாடை ரகங்களை வெளிநாடுகளுக்கு கடல் வழியே ஏற்றுமதி செய்கின்றன. இதற்கு தூத்துக்குடி மற்றும் கொச்சி துறைமுகங்களையே திருப்பூர் நிறுவனங்கள் அதிகம் பயன்படுத்தி வந்தன.தூத்துக்குடி துறைமுகத்துக்கு அனுப்பப்படும் சரக்குகள், சிறிய கப்பல்களில் (பீடர் வெசல்) ஏற்றப்பட்டு, கொழும்பு சென்று அங்கு பெரிய கப்பலுக்கு (மதர் வெசல்) மாற்றப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.

    கொரோனாவுக்குப்பின் கொழும்பு துறைமுக செயல்பாடுகள் மந்தமாகியுள்ளன. இதனால் சரக்குகள் வெளிநாடுகளை சென்றடைய தாமதமாகிறது. இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறியதாவது:-

    தூத்துக்குடி துறைமுகத்துக்கு அனுப்பும் சரக்குகள், கொழும்புவை அடைந்து பெரிய கப்பல்களில் ஏற்றப்படுவதற்கு இரண்டு வாரத்துக்கு மேலாகிறது. சீசனுக்காக தயாரிக்கப்படும் ஆடைகள் குறிப்பிட்ட நாட்களுக்குள் வெளிநாட்டைச் சென்றடைவது அவசியம். தாமதத்தை வெளிநாட்டு வர்த்தகர்கள் விரும்புவதில்லை.திருப்பூரின் 90 சதவீத சரக்கு போக்குவரத்துக்கு கைகொடுத்துவந்த தூத்துக்குடி துறைமுகத்தை புறக்கணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.சென்னையில் போதுமான சரக்கு ஏற்றப்பட்டால் பல பெரிய கப்பல்கள் கொச்சி துறைமுகத்தை புறக்கணித்து விடுகின்றன. திருப்பூரிலிருந்து 250 கி.மீ., தூரத்தில் கொச்சி, 330 கி.மீ.,ல் தூத்துக்குடி துறைமுகங்கள் இருந்தாலும், இந்த துறைமுகங்களை பயன்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளன.

    விரைவில் சரக்கை அனுப்ப 500 கி.மீ., தொலைவில் உள்ள சென்னை துறைமுகத்தை நாட வேண்டியுள்ளது. செலவும் அதிகரிக்கிறது.திருப்பூரிலிருந்து 70 சதவீத பின்னலாடைகள், சென்னை துறைமுகம் வாயிலாகவே அனுப்ப வேண்டியுள்ளது. தூத்துக்குடி துறைமுக அதிகாரிகளின் அலட்சியமும், தொலைநோக்கு பார்வையில்லாததும், தமிழக ஏற்றுமதி, இறக்குமதியாளர்களை பாதிக்க செய்கிறது.எனவே, துறைமுக கடல் பகுதியை ஆழப்படுத்தி, தூத்துக்குடிக்கு பெரிய கப்பல்கள் நேரடியாக வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். கொழும்பு துறைமுக சார்பு நிலை தொடர்ந்தால், தூத்துக்குடி துறைமுக வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

    ×