search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாக்தாதி"

    அமெரிக்கா மற்றும் ஈராக் அரசுகளால் பலமுறை கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத் தலைவன் பாக்தாதி இலங்கை குண்டுவெடிப்பு பற்றி பேசிய வீடியோ வெளியாகியுள்ளது. #ISchief #AbuBakralBaghdadi
    பாக்தாத்:

    ஒசாமா பின்லேடன் தலைமையிலான அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தில் இருந்து பிரிந்துவந்த அபூபக்கர் அல் பாக்தாதி தலைமையில் சிரியா மற்றும் ஈராக்கில் அரசுப் படைகளை எதிர்த்து தாக்குதல் நடத்திய பயங்கரவாவாதிகள் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பெயரில் அழைக்கப்பட்டனர். ஐ.எஸ்.ஐ.எஸ். என்பது ‘இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அன்ட் சிரியா’ (சிரியா மற்றும் ஈராக்கில் நாடு கடந்த இஸ்லாமிய ஆட்சி) என்ற ஆங்கில வார்த்தையின் சுருக்கம் ஆகும்.

    ஈராக்கையும், சிரியாவின் ஒரு பகுதி மற்றும் துருக்கியின் ஒரு பகுதி ஆகியவற்றையும் இணைத்து தனி இஸ்லாமிய நாட்டை உருவாக்குவது இவர்களது திட்டமாகும். இதுமட்டுமல்லாமல் எதிர்காலத்தில் பக்கத்து நாடான லெபனான், பாலஸ்தீனம், இஸ்ரேல், ஜோர்டான், துருக்கி ஆகிய நாடுகளையும் ஒன்றிணைத்து பெரிய அளவிலான இஸ்லாமிய தேசத்தை உருவாக்கவும் திட்டமிட்டனர்.

    இதன் முதல்கட்டமாக, மூன்றாண்டுகளுக்கு முன்னர் சிரியாவின் எல்லையோரம் உள்ள ஈராக்கின் மொசூல் நகரை கைப்பற்றிய இப்படையினர் அங்கிருக்கும் கிறிஸ்தவர்கள், யாஸிதிகள் மற்றும் குர்த் இன மக்களை ஊரை விட்டு அடித்து விரட்டி விட்டு இஸ்லாமிய அரசை அமைத்து விட்டதாக அறிவித்தனர்.

    அங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க நூரி மசூதியை தங்களது தலைமையிடமாக்கி ஈராக் மற்றும் சிரியா நாடுகளின் எல்லையோரத்தில் உள்ள சில இடங்களை அடுத்தடுத்து கைப்பற்றினர்.

    பல இடங்களில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கிறிஸ்துவ தேவாலயங்களை இடித்து தரைமட்டமாக்கினர். அப்பகுதியில் வசித்த கிருஸ்தவர்களையும் ஊரை விட்டே விரட்டியடித்ததுடன், அங்கு வாழும் முஸ்லிம் பெண்களின் மீதும் மதக் கட்டளை என்ற பெயரில் பெண்ணுறுப்பை சிதைத்தல் உள்பட ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்து அட்டூழியம் செய்தனர்.



    சிரியாவின் ரக்கா நகரை ஏற்கனவே கைப்பற்றி தங்களது தலைமை பீடமாக அமைத்துக் கொண்டுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள்  வடக்கு மற்றும் கிழக்கு சிரியாவின் பல பகுதிகளையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். கடந்த 29-6-2014 அன்று அந்த அராஜக ஆட்சியின் மன்னனாக ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் தலைவன் அபூபக்கர் அல் பாக்தாதி தன்னை பிரகடணப்படுத்தி கொண்டான்.  

    இவர்களின் பிடியில் உள்ள நகரங்களில் வசிக்கும் அனைவரும் இஸ்லாம் மதத்தை தழுவ வேண்டும் என்றும் கட்டளையிடப்பட்டுள்ளது. இவர்களின் ஆவேசத்தை கண்டு அஞ்சி நடுங்கிய குர்திஷ் மற்றும் யாஸிதி இனத்தை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்பட சுமார் 50 ஆயிரம் மக்கள் ஊரை விட்டு விரட்டப்பட்டனர். மலை உச்சிகளில் தஞ்சமடைந்து, குடிக்க நீரின்றியும், உண்ண உணவின்றியும் அவர்கள் தவித்தனர்.

    ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகளின் கட்டளைக்கு அடிபணிய மறுப்பு தெரிவித்த பெண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கானவர்களை தலையில் சுட்டுக் கொன்ற ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள், அவர்களின் பிணங்களின் மீது ஏறி நின்று ஆவேசக் கூச்சலிடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கோடிக்கணக்கான மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    தங்களது எண்ணத்தின்படி, மோசூல் நகரில் ஒரு தலைமையிடத்தை ஆட்சிபீடமாக அமைத்த பின்னர் ஐ.எஸ்.ஐ.எஸ். என்னும் தங்களது அமைப்பின் பெயரை ஐ.எஸ். (இஸ்லாமிக் ஸ்டேட்) என்று சுருக்கி அமைத்துக் கொண்டனர். பின்னர், ஈராக் மற்றும் சிரியாவில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் அனைவரும் ஒழிக்கப்பட்டதாக அந்நாடுகளின் அரசுகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தன.

    பதுங்கி வாழ்ந்த பாக்தாதி அமெரிக்கா மற்றும் பன்னாட்டு விமானப்படைகள் நடத்திய விமான தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக பலமுறை பல்வேறு காலக்கட்டங்களில் செய்திகள் வெளியாகின.

    கடைசி முறையாக கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் மோசூல் நகரில் உள்ள மசூதியில் மக்களின் பார்வைக்கு காட்சியளித்த பாக்தாதி அதன் பின்னர் பொதுவெளியில் தென்படாததால் அவன் இறந்து விட்டதாகவே பரவலாக கருதப்பட்டது.

    இந்நிலையில், கொல்லப்பட்டதாக சொல்லப்பட்ட பாக்தாதி தற்போது வீடியோவில் தோன்றி இலங்கை தொடர் குண்டுவெடிப்பு மற்றும் ஈராக் நாட்டின் பகோவ்ஸ் மாகாணத்தில் அரசுப் படைகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் சமீபத்தில் நடைபெற்ற உச்சக்கட்ட தாக்குதல் தொடர்பாக பேசியுள்ளான்.

    சுமார் 18 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில் பகோவ்ஸ் போரை குறிப்பிடும் பாக்தாதி, ‘கடவுள் எங்களை புனிதப்போருக்கு கட்டளையிட்டான். ஆனால், வெற்றிக்கு கட்டளையிடவில்லை. இந்த போரில் எங்களுக்கு ஏற்பட்ட உயிழப்புகளுக்கு தொடர்ச்சியாக பழிவாங்குவோம்' என குறிப்பிட்டுள்ளதாக ஈராக் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #ISchief  #AbuBakralBaghdadi 
    ×