search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெருக்கடியான நேரங்கள்"

    • பெண்கள் தாங்கள் சந்திக்கும் பிரச்சினையை தடைக்கற்களாக பார்க்கிறார்கள்.
    • மாற்றி சிந்தித்தால் அவை வெற்றி படிக்கட்டுகளாக மாறும்.

    `சிஸ்டம் சரியில்லை...' - இந்த வார்த்தையை வயது பேதமின்றி அனைத்து தரப்பினரும் பயன்படுத்துகிறார்கள். இன்னொரு பக்கம், வாழ்வதற்கான நெருக்கடிகள் மனிதர்களை இயந்திரங்களாக மாற்றிக்கொண்டிருக்கிறது. பெண்களையும் இந்த நெருக்கடிகள் விட்டுவைக்கவில்லை. பல பெண்கள் தாங்கள் சந்திக்கும் பிரச்சினைகளையே தடைக்கற்களாக பார்க்கிறார்கள். கொஞ்சம் மாற்றி சிந்தித்தால் அவைகளே வெற்றிப்படிக்கட்டுகளாக மாறும்.

    தன்னை அறிதல்:

    நம்மால் முன்னேற முடியாமல் போவதற்கு சிஸ்டம் சரியில்லை என்று மட்டுமே சொல்லிக்கொண்டிருக்க முடியாது. மாற்ற வேண்டியது சிஸ்டத்தையா அல்லது நம்மையா என்று கேட்டுப் பாருங்கள். உங்களுக்கே உண்மை புரியும். தன்னிடம் உள்ள `பிளஸ், மைனஸ்' விஷயங்களை மனம் திறந்து ஒத்துக்கொள்ள வேண்டும். பெண்கள் புறக் காரணங்களை ஒதுக்கி விட்டு தன்னிடம் மாற்றிக்கொள்ள வேண்டியவற்றை பட்டியலிட்டு சரி செய்ய வேண்டும்.

    யதார்த்த பார்வை:

    பிரச்சினைகளை அணுகுவதில் ஆண்களை விடப் பெண்கள் உணர்வுப்பூர்வமானவர்கள். அதுவே, அவர்களின் பிரச்சினைக்கான வலியை அதிகரிக்க செய்கிறது. பெண்கள் தாங்கள் எதிர்கொள்ளும் உடல் ரீதியான மாற்றங்களைக்கூட சங்கடங்களோடும், சிரமங்களோடும் எதிர்கொள்வதால் பல தருணங்களில் ஏன் பெண்ணாய் பிறந்தோம் என்று யோசிக்கின்றனர். எந்தப் பெண்ணும் தன் வாழ்வில் ஒருமுறையாவது இப்படி யோசித்திருக்கக் கூடும். இந்த உலகுக்கு ஓர் உயிரை தருவதற்கான கருவறையே, பெண்ணுக்குள் தனக்கான மாற்றங்களை அந்தந்தப் பருவங்களில் ஏற்படுத்திக் கொள்கிறது. தாய்மையின் அற்புதங்களை உணர்ந்த பெண்ணுக்கு வலிகளோ, அது சார்ந்த சிரமங்களோ பெரிதில்லை. எனவே தான் சந்திக்கும் பிரச்சினைகளை பெண்கள் எதார்த்தமாக அணுகலாம்.

    திறனை மேம்படுத்துதல்:

    அலுவலகத்தில் உங்களுக்கான வேலை இலக்கை நிர்ணயிக்கிறார்கள், புதிய வேலைகளை உங்களது தலையில் சுமத்திக்கொண்டே இருக்கிறார்கள் என்றால், சிலருக்கு உடனடியாக டென்சன் தொற்றும். வேலையில் தங்களை கசக்கிப் பிழிவதாக மனம் புலம்பும். இதை நம்மால் சமாளிக்க முடியுமா என்ற அச்சம் எட்டிப்பார்க்கும்.

    அதற்கு இடம் கொடுக்காமல் கொடுக்கப்பட்ட பணிகளுக்கான நேரத்தையும், அதனை நிறைவேற்றுவதற்கான எளிய வழிகளையும் பற்றி சிந்திப்பதன் மூலம் உங்களது வேலைத்திறனை உயர்த்திக்கொள்ள முடியும். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களை எளிதாகக் கடந்துவிட்டால், அதே அலுவலகத்தில் திறமை மிகுந்த ஆளாக நீங்கள் மிளிர்வதை உணரலாம். இதுவே உங்களுக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும். கூடுதல் பெறுப்புகளை மனமுவந்து ஏற்றுக் கொள்ளுவதன் மூலம் தனித்திறன்களையும் மேம்படுத்திக் கொள்ளலாம்.

    சக மனிதரை புரிந்துகொள்ளுதல்:

    திருமணம் பெண்ணின் வாழ்வில் முக்கியமான தருணம். தன் வீட்டில் பெண்ணாக வளர்க்கப்பட்ட செல்ல மகள், புகுந்த வீட்டில் தனக்கான குடும்பத்தின் தலைவியாக பொறுப்பேற்கும் வைபவம். புதிதாக ஒரு குடும்பத்தில் நுழையும்போது எதிர்கொள்ளும் எல்லா விஷயங்களுமே பிரச்சினைகளாகத்தான் தோன்றும். புதிய உறவுகள் வலியுறுத்தும் சிறிய விஷயம் கூட பெரிதாக மனதை காயப்படுத்தும். புதிய மனிதர்களை விருப்பு, வெறுப்புகளுடன் பார்க்காமல், அவர்களை புரிந்துகொள்ள முயற்சிக்கலாம். புதிய உறவுகளைத் தனதாக்கிக்கொள்வதன் வழியாக, பெண் தனக்கான ஓர் அன்புக் கூட்டை உருவாக்க முடியும். பெண்கள் சக மனிதர்களை புரிந்து செயல்படுவதால் வீட்டிலும், வேலையிடத்திலும் பிரச்சினைகளை எளிதாக சமாளிக்க முடியும்.

    இனிக்கும் இல்லம்:

    சில வீடுகளில் தம்பதிகள் எதிரெதிர் துருவங்களாக இருப்பார்கள். எதிர்மறையான விஷயங்களை மட்டுமே பட்டியலிடுவதால் வரும் பிரச்சினைதான் இது. இருவருக்குமான அன்பின் பகிர்வுகளை நினைவு கூருங்கள். அவரவருக்கான சுதந்திர எல்லையை அனுமதித்து, உறவை அழகாக்குங்கள். உங்களைப் பற்றி மட்டுமே சிந்தித்துக்கொண்டிருக்காமல், உங்களது குழந்தைகளுக்கு என்ன செய்யவேண்டும் என்று யோசிக்கத் தொடங்குங்கள். இந்த உலகின் சிறந்த அப்பா, அம்மாக்களாக நீங்கள் மாற வாய்ப்புள்ளது.

    எந்த உறவிலும் மற்றவர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் வழியாக சுமூகமான வாழ்க்கை சூழலை ஏற்படுத்திக் கொள்ளலாம். நெருக்கடியான தருணங்களில் மாற்றி சிந்திப்பதன் வழியாகவே எந்த பிரச்சினையையும் சமாளிக்கும் திறனை வளர்த்துக் கொள்ள முடியும். தடைக்கற்கள் எல்லாம் வெற்றிக்கான படிக்கட்டுகளாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.

    ×