search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீலகிரி வரையாடு"

    • நீலகிரி வரையாடு இனம் அழிந்து வரும் உயிரினம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
    • மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் 3,122 வரையாடுகள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

    அரசு கூடுதல் தலைமை செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

    நீலகிரி வரையாடு மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கே உரிய சிறப்பினங்களில் ஒன்றாகும். இந்த வரையாடு பற்றிய குறிப்புகள் சிலப்பதிகாரம் மற்றும் சீவகசிந்தாமணியில் காணப்படுகின்றன. மேலும் பதினெண்கீழ்க்கணக்கு, திரிகூடராசப்ப கவிராயர் எழுதிய திருக்குற்றால குறவஞ்சி பாடலிலும் வரையாடு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

    நீலகிரி வரையாடு இனம் அழிந்து வரும் உயிரினம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இந்த ஆடு வகைகளை பட்டியலிடப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. உலகளாவிய இயற்கை பாதுகாப்பு நிதிய அறிக்கையின்படி 3,122 வரையாடுகள் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

    மிக பரந்த அளவில் வாழ்ந்து வந்த இந்த வரையாடு இனம், எண்ணிக்கை குறைந்து, அழிவுக்கு ஆளாகுதல், அந்நிய களைச்செடிகளின் ஆக்கிரமிப்பு, காட்டுத் தீ, சுற்றுச்சூழல் உள்ளிட்டவை காரணமாக தற்போது தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்குள் சில வாழ்விட பகுதிகளில் மட்டுமே வாழ்ந்து வருகின்றன.

    தமிழ்நாட்டின் மாநில விலங்கான நீலகிரி வரையாடு இனத்தை பாதுகாக்கவும் அதன் வாழ்விடங்களை மேம்படுத்தவும் இந்தியாவிலேயே முதன்முறையாக நீலகிரி வரையாடு திட்டத்தை அமைத்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இத்திட்டம் 2022 முதல் 2027 வரை ஐந்து ஆண்டுகளில் ரூ.25.14 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

    பல்வேறு உத்திகள் மூலம் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் மூலம் நீலகிரி வரையாடுகள் இனம் அழிவிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்த திட்டத்தின் மூலம் வரையாடுகளின் உண்மையான வாழ்விடங்கள் மீட்கப்பட்டு அவை வாழ ஏதுவான சூழலை உருவாக்கி அவற்றின் எண்ணிக்கை பெருக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×