search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீர்ச்சத்தை பராமரிக்கும்"

    • நிறைய தண்ணீர் பருகுவது தான் நீரேற்றத்தை தக்கவைக்க சிறந்த வழி.
    • தர்பூசணி சாப்பிடுவதும் கூடுதல் நன்மை பயக்கும்.

    கோடை காலத்தின் முன்னோட்டமாக வெயிலின் உக்கிரம் இப்போதே அதிகரிக்கத் தொடங்கி விட்டது. உடல் உஷ்ணத்திற்கு ஆளாகாமல் நீர்ச்சத்தை பராமரிக்க வேண்டியது முக்கியமானது. நிறைய தண்ணீர் பருகுவது தான் நீரேற்றத்தை தக்கவைக்க சிறந்த வழி என்றாலும், தர்பூசணி சாப்பிடுவதும் கூடுதல் நன்மை பயக்கும்.

    ஏனெனில் தர்ப்பூசணியில் 92 சதவீதம் நீர் இருக்கிறது. உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கவும் உதவும். நீரிழப்பையும் தடுக்கும். தர்ப்பூசணியில் லைகோபீன், ஆன்டி ஆக்சிடென்டுகள், வைட்டமின்கள் ஏ,சி, பொட்டாசியம் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. இதில் கலோரியும் குறைவு. அதனால் உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

    இந்த பழத்தை உண்டால் பசியும் கட்டுப்படும். நீண்ட நேரம் வயிறு நிறைந்திருக்கும் உணர்வையும் தரும். தர்ப்பூசணியில் நைட்ரிக் ஆக்சைடு உற்பத்திக்கு உதவும் அமினோ அமிலமான சிட்ரூலின் உள்ளது. ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவும். உடலில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவி புரியும். தர்ப்பூசணியை அப்படியே சாப்பிடுவது நல்லது. ஜூசாகவும் தயாரித்து பருகலாம்.

     நிறைய பேர் தர்ப்பூசணி பழத்தை துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் சேமித்து வைத்து சாப்பிடுவார்கள். அப்படி செய்தால் அதன் ஊட்டச்சத்து மதிப்பு குறைவதற்கு வழிவகுத்துவிடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

    இதுதொடர்பாக அமெரிக்க வேளாண்மைத்துறை நடத்திய ஆய்வில், குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படும் தர்ப்பூசணியை விட அறை வெப்பநிலையில் வைக்கப்படும் தர்ப்பூசணியில் அதிக சத்துக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் துண்டுகளாக வெட்டப்பட்ட தர்ப்பூசணியையும் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால் பாக்டீரியாக்கள் வளரும் இடமாக அது மாறிவிடும். தர்ப்பூசணியை இன்னும் குளிர்ச்சியாக சாப்பிட விரும்பினால் ஸ்மூத்தி, மில்க் ஷேக் வடிவில் ருசிக்கலாம்.

    ×