search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிதி நிறுவன ஏஜெண்டு தற்கொலை"

    • பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை வளையத்தில் இருக்கும் நிதி நிறுவன இயக்குனர்கள் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.
    • அச்சமடைந்த முதலீட்டாளர்கள் பணம் வழங்காதது குறித்து ஏஜெண்டு வினோத்குமாரிடம் தொடர்ந்து பணம் கேட்டுள்ளனர்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரராகவன்-இந்திரா தம்பதியரின் மகன் வினோத்குமார் (வயது 28). இவர் வேலூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தற்போது மோசடி புகாரில் சிக்கியுள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். மேலும் ஏஜெண்டாக இருந்து வந்துள்ளார்.

    இவர் தனது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் என சுமார் 30-க்கும் அதிகமான நபர்களிடமிருந்து சுமார் ரூ.50 லட்சத்திற்கும் அதிகமாக பணத்தை பெற்று மாத வட்டி தரும் அந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.

    கடந்த இரண்டு மாதங்களாக முதலீட்டாளர்களுக்கு வட்டி பணம் கிடைக்கவில்லை. நிதி நிறுவன உரிமையாளர்கள் வீடு மற்றும் ஏஜெண்டுகள் வீடுகளில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தியதில் நிதி நிறுவன அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளது. காட்பாடியில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

    தற்போது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை வளையத்தில் இருக்கும் நிதி நிறுவன இயக்குனர்கள் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் அச்சமடைந்த முதலீட்டாளர்கள் பணம் வழங்காதது குறித்து ஏஜெண்டு வினோத்குமாரிடம் தொடர்ந்து பணம் கேட்டுள்ளனர்.

    இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான வினோத்குமார் நேற்று முன்தினம் இரவு வீட்டில் கயிறால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்த தகவல் அறிந்த திருவலம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், முதலீட்டாளர்களுக்கு பதில் சொல்ல முடியாத விரக்தியில் வினோத்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    போலீசார் வினோத்குமார் எழுதி வைத்த கடிதத்தையும் பறிமுதல் செய்தனர். அந்த கடிதத்தில், நிதி நிறுவனத்தின் உரிமையாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பான்கார்டு எண்ணை குறிப்பிட்டு, இவர்களின் பெயரில் இயங்கும் நிதி நிறுவனத்தில் என்னிடம் கேட்ட நபர்களுக்கு முதலீடு செய்து கொடுத்துள்ளேன். இப்போது அவர்கள் இல்லை என்பதால் எனது மற்றும் என்னை சார்ந்தவர்களின் பணத்தை திருப்பி வாங்கி தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    நான் கொடுத்த பணத்தின் ஆவணங்கள் அனைத்தும் எனது ஆன்லைன் புக்கில் உள்ளது.

    என்னை நம்பியவர்களுக்கு எனது முடிவிலாவது பணம் கிடைக்கட்டும். அனைத்து ஆவணங்களும் எனது பேங்கில் உள்ளது.

    போலீஸ் இவர்களை பிடித்து அனைவரின் பணத்தையும் வாங்கி தர வேண்டும்.

    முதலீடு செய்த அனைவரும் அந்நிறுவனத்திடம் பணத்தை வாங்கிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். கடிதத்துடன் செல்பி எடுத்த பின் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    வினோத்குமாரின் வீட்டில் இருந்த பாண்டு பத்திரங்கள், லேப்டாப் உள்ளிட்ட ஆவணங்களை காட்பாடி இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன் தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

    முதலீட்டாளர்கள் தற்கொலை போன்ற விபரீத செயல்களில் ஈடுபட வேண்டாம் என போலீசார் வலியுறுத்தி உள்ளனர்.

    • பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனையை தொடர்ந்து பணம் கட்டியவர்கள் வினோத்குமாரை தொடர்பு கொண்டு பணத்தை திரும்ப கேட்டதாக கூறப்படுகிறது.
    • இதனால் வினோத்குமார் மனமடைந்த நிலையில் காணப்பட்டார்.

    வேலூர்:

    வேலூரைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவனம் வட தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கிளைகளை தொடங்கியது. மேலும் டெல்லியிலும் இந்த நிதி நிறுவனத்திற்கு கிளை உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிதி நிறுவனத்தின் தலைமை அலுவலகம் காட்பாடியில் இயங்கி வருகிறது.

    பங்குசந்தையில் முதலீடு செய்வதாக கூறி பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தைகளைக் கூறி கோடிக்கணக்கான ரூபாய் பொதுமக்களிடமிருந்து வசூல் செய்துள்ளனர். ரூ.1 லட்சம் பணம் கட்டினால் மாதம் தோறும் ரூ.8000 வட்டி தருவதாக கூறி பண வசூல் செய்துள்ளனர்.

    இந்த நிதி நிறுவனத்தில் முக்கிய வி.ஐ.பி.கள், அரசியல் பிரபலங்கள், அரசு அதிகாரிகள், போலீசார் என பல்வேறு தரப்பினரும் முதலீடு செய்துள்ளனர். ஏஜெண்டுகள் மூலம் இந்த நிதி நிறுவனத்தில் பணம் வசூல் செய்துள்ளனர் மேலும் அந்த ஏஜெண்ட் மூலமே வாடிக்கையாளர்களுக்கு பணம் வட்டியாகவும் தரப்பட்டுள்ளது.

    நேற்று முன்தினம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் காட்பாடி விஜி ராவ்நகரில் உள்ள நிதி நிறுவன அதிபர்கள் வீடுகளில் சோதனை நடத்தினர். இதேபோல வேலூர் சத்துவாச்சாரி அரக்கோணம் ஆற்காடு காஞ்சிபுரம் திருவண்ணாமலை உள்பட 21 இடங்களில் நிதி நிறுவன கிளை மற்றும் அதனோடு தொடர்புடையவர்கள் வீடுகளில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து தனியார் நிறுவன அலுவலகங்கள் திறக்கப்படாமல் உள்ளன. பணம் கட்டியவர்கள் தொடர்பு கொண்டு பணத்தை திரும்ப கேட்டு வருகின்றனர்.

    காட்பாடி அருகே உள்ள சேவூர் கிராமத்தை சேர்ந்த வீரராகவன் என்பவரது மகன் வினோத்குமார் (வயது 28). இவர் காட்பாடி காந்தி நகரில் உள்ள தனியார் நிதிநிறுவன தலைமை அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார். மேலும் இவர் நிறுவனத்திற்கு ஏஜெண்டாகவும் செயல்பட்டுள்ளார். அவர் மூலம் சிலர் நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தியுள்ளனர்.

    தற்போது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனையை தொடர்ந்து பணம் கட்டியவர்கள் வினோத்குமாரை தொடர்பு கொண்டு பணத்தை திரும்ப கேட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் வினோத்குமார் மனமடைந்த நிலையில் காணப்பட்டார்.

    இந்த நிலையில் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    காட்பாடி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நிதி நிறுவன அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்ட நிலையில் அதன் ஏஜெண்டு ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பணம் கட்டியவர்கள் மேலும் கலக்கமடைந்துள்ளனர்.

    ×