search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாங்குநேரி பள்ளி"

    • 50-க்கும் மேற்பட்டோர் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர்.
    • பள்ளி நிர்வாகத்தின் இந்த திடீர் அறிவிப்பால் 9-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் 10-ம் வகுப்பு வேறு பள்ளியில் சேர்வது மிகவும் கடினம்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா வெங்கட்ராயபுரம் பகுதியில் கடந்த 1990-ம் ஆண்டு நடுநிலைப்பள்ளி ஒன்று தொடங்கப்பட்டது. இந்த பள்ளியில் வெங்கட்ராயபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 1990-களில் பஸ் போக்குவரத்து உள்ளிட்டவைகள் இல்லாத நேரத்திலும், அந்த பள்ளியில் 10-க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வந்துள்ளனர்.

    இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான தேர்வுகள் முடிந்து விட்ட நிலையில் பள்ளியில் போதுமான நிதி இல்லை எனக் கூறி அடுத்த ஆண்டு முதல் பள்ளி செயல்படாது என பள்ளி நிர்வாகத்தின் மூலம் மாணவர்களிடம் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த ஊர் மக்கள் மற்றும் பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து பள்ளியை நிறுத்தக்கூடாது. தொடர்ந்து செயல்படுவதற்கு தங்களால் இயன்ற நிதியை தருகிறோம் என தெரிவித்த நிலையிலும் பள்ளி செயல்படாது என அறிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் ஊர் பொதுமக்கள் மற்றும் பழைய மாணவர்கள், தற்போது படிக்கும் மாணவர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில் அவர்கள், நடுநிலை பள்ளியாக இருந்த இந்த பள்ளி தற்போது உயர்நிலைப் பள்ளியாக செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 80-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்போது படித்து வருகின்றனர். சுமார் 34 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நிலையில் பள்ளி நிர்வாகத்தின் இந்த திடீர் அறிவிப்பால் 9-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் 10-ம் வகுப்பு வேறு பள்ளியில் சேர்வது மிகவும் கடினம். எனவே இந்த பள்ளியை தொடர்ந்து நடத்த வேண்டும். அரசு இந்த பள்ளியை கையகப்படுத்தி அரசு பள்ளியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை அதில் முன் வைத்துள்ளனர். இதற்கிடையே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து மனு அளிக்க முடியாத சூழல் காரணமாக கலெக்டர் அலுவலகம் முன்பிருந்த பெட்டியில் தங்களது கோரிக்கை மனுவை போட்டு சென்றுள்ளனர். 

    ×