search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நருஹிட்டோ"

    ஜப்பான் நாட்டின் 125-வது மன்னர் அகிஹிட்டோ வயோதிகம், உடல் நலக்குறைவு ஆகிய காரணங்களால் இன்று பதவி விலகினார். அவரது மகன் நருஹிட்டோ நாளை புதிய மன்னராக அரியணை ஏறுகிறார். #Akihito #Naruhito
    டோக்கியோ:

    ஜப்பான் நாட்டின் 125-வது மன்னரான அகிஹிட்டோ (வயது 85) வயோதிகம், உடல் நலக்குறைவு ஆகியவற்றின் காரணமாக பதவி விலக விருப்பம் தெரிவித்தார். ஜப்பானில் கடந்த 200 ஆண்டுகளில் எந்த மன்னரும் பதவி விலகியதாக சரித்திரம் இல்லை. அங்கு கடைசியாக 1817-ம் ஆண்டு, கொகக்கு என்ற மன்னர்தான் பதவி விலகி உள்ளார். அதன்பின்னர் யாரும் பதவி விலகியது இல்லை.
     
    பதவி விலகுவதற்கான விதிகளும் சட்டத்தில் இல்லை என்பதால், மன்னர் பதவி விலகுவதற்கான மசோதா கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, மன்னர் பதவி விலகுவதற்கான நடைமுறைகள் தொடங்கியது.



    மன்னர் அகிஹிட்டோ 2019-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி பதவி விலக உள்ளதாக பிரதமர் ஷின்சோ அபே கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்தார். அகிஹிட்டோ பதவி விலகும் தேதியை முடிவு செய்வதற்காக நடத்தப்பட்ட இம்பீரியல் கவுன்சில் சிறப்பு கூட்டத்தில் ஒரு மனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

    மன்னர் பதவி விலகல் மற்றும் புதிய மன்னர் முடிசூட்டும் விழா ஆகிய நிகழ்வுகளை மக்கள் கொண்டாடும் வகையில் அரசு ஏற்பாடுகள் செய்யும் என்றும் பிரதமர் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், டோக்கியோ நகரில் உள்ள இம்ப்ரியல் அரண்மனையில் மன்னர் அகிஹிட்டோ முடிதுறக்கும் விழா நிகழ்ச்சிகள் உள்நாட்டு நேரப்படி இன்று மாலை 5 மணியளவில் (இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணி) தொடங்கியது.

    இந்நிகழ்ச்சியில் தொலைக்காட்சி மூலம் ஜப்பானிய மக்களிடையே பேசிய மன்னர் அகிஹிட்டோ, ’இந்த நாட்டின் மன்னராக எனது கடமைகளை நான் இன்றுடன் நிறைவு செய்கிறேன். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் உங்கள் மன்னராக அரியணை ஏறிய நான் மக்களுடைய நம்பிக்கை மற்றும் மரியாதையுடன் எனது கடமைகளை சரிவர நிறைவேற்றி இருக்கிறேன். இதற்கான அதிர்ஷ்டம் பெற்றவனாக என்னை கருதுகிறேன்.

    என்னை ஏற்றுகொண்டு ஆதரவளித்த மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டார். ஜப்பான் மற்றும் உலகம் முழுவதும் வாழும் மக்களின் எதிர்கால அமைதி மற்றும் மகிழ்ச்சிக்காக உளப்பூர்வமாக பிரார்த்திக்கிறேன் என்றும் அவர் பிரார்த்தனை செய்தார்.



    சம்பிரதாயப்படி இன்று மாலையுடன் அவர் பதவி விலகினாலும் நள்ளிரவுவரை ஜப்பானின் மன்னராக அவர் நீடிப்பார்.

    அகிஹிட்டோவின் மூத்த மகனான பட்டத்து இளவரசர் நருஹிட்டோ (வயது 59) நாளை காலை 10.30 மணியளவில் அந்நாட்டு மன்னராக முடிசூட்டப்படுவார். அப்போது மன்னர் அகிஹிட்டோ அமர்ந்த  ‘கிறிசாந்தமம்’ அரியணையும் நருஹிட்டோவிடம் ஒப்படைக்கப்படும்.

    புதிய மன்னர் பதவியேற்கும் வைபவத்துக்காக ஜப்பான் வரலாற்றில் முதன்முறையாக 10 நாட்கள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை பதவியேற்கும் புதிய மன்னர் நாட்டு மக்களுக்கு ஆற்றும் சிறப்புரையில் சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #Akihito #Naruhito
    ×