search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக நிலங்கள்"

    • குமுளியில் உள்ள கேரள சோதனைச்சாவடி மாதா சிலை அருகில் இருந்தது. படிப்படியாக இது ஆக்கிரமிக்கப்பட்டு கேரள பஸ் நிலையம் அருகே வந்து விட்டது.
    • தமிழக எல்லைப்பகுதிகளில் உள்ள கண்ணகி கோவிலை வழிபடக்கூட கேரள அரசின் அனுமதி பெற வேண்டியது உள்ளது.

    கூடலூர்:

    கேரள மாநிலம் முழுவதும் கடந்த 1-ந் தேதி முதல் டிஜிட்டல் ரீசர்வே செய்து வருகிறது. ஆக்கிரமிப்பு அகற்றம், நிலவரையறை, இடங்களை வகைப்படுத்துதல் ஆகியவற்றுக்காக இப்பணிகளை மேற்கொள்வதாக அம்மாநில முதல்-அமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

    இதற்காக 1500 சர்வேயர்கள், 3200 உதவியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த பணிகளை 4 ஆண்டுகளுக்குள் முடிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மறு அளவீடு செய்ய வேண்டுமானால் முதலில் தமிழக-கேரள எல்லையை அளவிட வேண்டும். அப்போதுதான் மறு அளவீடு முழுமை பெறும்.

    இதனை செய்யாமல் வருவாய் நிலங்களை கேரள அரசு டிஜிட்டல் ரீசர்வே செய்வதால் தமிழகத்தில் 1400 சதுர கி.மீ வனத் தோட்ட பகுதிகளை இழக்கும் நிலை ஏற்படும்.

    கேரளா உருவானபோது எல்லை மறுவரை சரியாக செய்யாததால் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேவிகுளம், பீர்மேடு, உடும்பன்சோலை அருகே உள்ள தமிழக வனப்பகுதிகள் கடந்த 1956-ம் ஆண்டு முதலே அப்பகுதியைச் சேர்ந்தவர்களால் அதிக அளவில் ஆக்கிரமிக்கப்பட்டது.

    பின்னர் அங்கிருந்த வன நிலங்கள் வருவாய் நிலங்களாக பட்டா மாற்றம் பெற்று கேரள நிலங்களாக மாறி விட்டன. இது போன்ற குளறுபடிகளால் தமிழக சர்வே துறையில் தமிழக வன நிலமாக குறிக்கப்பட்டு ஓர் இடம் கேரள வருவாய்த்துறையால் பட்டா நிலமாக வகைபடுத்தப்பட்டுள்ளது.

    இது போன்று எல்லைப்பகுதி நிலங்களில் குளறுபடிகள் அதிக அளவில் நடப்பதால் தமிழக அரசு விழிப்புடன் இருந்து நமது உரிமையை நிலைநாட்ட வேண்டும் என விவசாயிகள் மற்றும் வன ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் தெரிவிக்கையில், இடுக்கி மாவட்டம் உடும்பன் சோலை அருகே உள்ள சாந்தம்பாறை, சின்னக்கானல், பைசன் வேலி, ராஜாகாடு, சதுரங்கபாறை ஆகிய இடங்களில் இருக்கும் தமிழக நிலங்களுக்கு கேரள அரசு இதன் மூலம் நெருக்கடி கொடுக்க வாய்ப்பு உள்ளது.

    குமுளியில் உள்ள கேரள சோதனைச்சாவடி மாதா சிலை அருகில் இருந்தது. படிப்படியாக இது ஆக்கிரமிக்கப்பட்டு கேரள பஸ் நிலையம் அருகே வந்து விட்டது. இதே போல முல்லைக்கொடி, ஆனவச்சால் உள்ளிட்ட ஏராளமான பகுதிகளை இழந்து விட்டோம். தமிழக எல்லைப்பகுதிகளில் உள்ள கண்ணகி கோவிலை வழிபடக்கூட கேரள அரசின் அனுமதி பெற வேண்டியது உள்ளது. இது போன்ற நிலை தொடர்ந்தால் தமிழக நிலங்கள் மேலும் கேரளா வசம் சென்று விடும். ரீசர்வே குறித்து தமிழகத்துக்கு உரிய முறையில் முன்னறிவிப்பு செய்யாமல் கேரள அரசு தன்னிச்சையாக இது போன்ற நடவடிக்கையை மேற்கொண்டு இருப்பதால் தமிழக முதல்-அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர் என்றார்.

    ×