search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனியார் தொண்டு நிறுவனம்"

    • தேசிய மகளிர் ஆணையம், தேசிய குழந்தைகள் நல ஆணையம் தாமாக முன்வந்து காப்பகத்தில் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
    • தனியார் தொண்டு நிறுவன காப்பகத்தில் இருந்த 5 பேர்கள் நேற்று இரவு திடீரென்று அங்கிருந்து தப்பி சென்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலபுலியூர் கிராமத்தில் அன்புஜோதி ஆசிரமம் இயங்கி வந்தது.

    இங்கு பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து மனித உரிமை ஆணையம் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு காப்பாக நிர்வாகி ஜுபின் பேபி, அவரது மனைவி மரியா ஜுபின் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து 9 பேரை கைது செய்தனர். காப்பகத்தில் இருந்து 143 பேர் மீட்கப்பட்டனர்.

    இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். தேசிய மகளிர் ஆணையம், தேசிய குழந்தைகள் நல ஆணையம் தாமாக முன்வந்து காப்பகத்தில் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் அன்புஜோதி ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்டவர்கள் கடலூர் வன்னியர் பாளையம் மற்றும் வண்ணாரப்பாளையத்தில் உள்ள தனியார் தொண்டு நிறுவன காப்பகத்தில் பாதுகாப்பு கருதி தங்க வைக்கப்பட்டனர்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வன்னியர் பாளையத்தில் பாதுகாப்பாக வைக்கப் பட்டிருந்த 4 பேர்கள் அங்கிருந்து தப்பித்து சென்றனர். இதில் 3 பேர்களை போலீசார் தீவிர தேடுதலுக்குப் பின்பு பிடித்தனர்.

    இந்நிலையில் வண்ணாரப்பாளையம் தனியார் தொண்டு நிறுவன காப்பகத்தில் இருந்த 5 பேர்கள் நேற்று இரவு திடீரென்று அங்கிருந்து தப்பி சென்றனர். அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் அந்த நபர்களை சென்று பார்த்தபோது கடந்த முறை 4 நபர்கள் தப்பித்தது போல் இவர்களும் ஜன்னல் வழியாக பெட்ஷீட்டை கட்டி தப்பி சென்றது தெரிய வந்துள்ளது.

    இவர்கள் மேற்கு வங்காளம், கேரளா, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

    இவர்கள் ரெயில் மற்றும் பஸ் மூலமாக வெளியூர்களுக்கு சென்றார்களா? அல்லது வேறு பகுதியில் சுற்றித் திரிகிறார்களா? என்பது குறித்து போலீசார் மற்றும் தனியார் தொண்டு நிறுவன ஊழியர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 5 பேர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் அந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு உரிய முறையில் போலீசார் தகவல் அளித்துள்ளனர்.

    இது மட்டுமின்றி கடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதி முழுவதும் போலீசார் மற்றும் தனியார் தொண்டு நிறுவன ஊழியர்கள் தீவிரமாக தேடி வருகிறார்கள். அன்பு ஜோதி ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்டு கடலூர் தனியார் காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த 4 பேர் ஏற்கனவே தப்பி சென்ற சம்பவத்தை தொடர்ந்து தற்போது 5 பேர் தப்பி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

    ×