search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தக்காளி வரத்து அதிகரிப்பு"

    • தற்போது மழை ஓய்ந்த நிலையில் தக்காளி விளைச்சல் நன்றாக உள்ளது. இதனால் அய்யலூர் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது.
    • தக்காளி பெட்டி ரூ.150 வரை விலைபோனது. ஆனால் தற்போது ரூ.100க்கு விலை கேட்பதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே அய்யலூரில் தக்காளிக்கென பிரத்யேக சந்தை உள்ளது. வடமதுரை, அய்யலூர், மோர்பட்டி, தீத்தாகிழவனூர், செங்குறிச்சி, பாலார்தோட்டம், நடுப்பட்டி, கல்பட்டிசத்திரம் மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் தக்காளி பயிரிட்டுள்ளனர்.

    இந்த தக்காளிகளை அய்யலூர் மார்க்கெட்டுக்கு கொண்டு வருகின்றனர். சென்னை, தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட வெளிமாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் மொத்தமாக தக்காளிகளை கொள்முதல் செய்கின்றனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு தக்காளி வரத்து குறைந்ததால் ஒரு கிலோ ரூ.100 வரை சென்றது. இதனால் நடுத்தர, ஏழை எளிய குடும்பத்தினர் சிரமம் அடைந்தனர். மேலும் விவசாயிகளுக்கும் பெரிய லாபம் கிடைக்கவில்லை.

    தற்போது மழை ஓய்ந்த நிலையில் தக்காளி விளைச்சல் நன்றாக உள்ளது. இதனால் அய்யலூர் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. கடந்த வாரம் 14 கிேலா கொண்டா தக்காளி பெட்டி ரூ.150 வரை விலைபோனது. ஆனால் தற்போது ரூ.100க்கு விலை கேட்பதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    இது குறித்து அவர்கள் கூறுகையில், தக்காளி விலை அதிகரித்தபோதும் விவசாயிகளுக்கு விலை கிடைப்பதில்லை. இடைத்தரகர்களே அதிகளவில் லாபம் பார்க்கின்றனர். விலை குறையும் பட்சத்தில் பறிப்பு கூலிக்கு கூட பணம் கிடைப்பதில்லை. இதனால் பெரும்பாலான விவசாயிகள் தக்காளிகளை செடியிலேயே விட்டு விடுகின்றனர்.

    இப்பகுதியில் தக்காளி பதப்படுத்தும் கிட்டங்கி மற்றும் சாஸ் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையாகும். எனவே அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    ×