search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தகவல்கள் திருட்டு"

    • மோசடியில் ஈடுபட்ட 7 பேரிடமிருந்தும் ஆதார் கார்டுகள், 13 செல்போன்கள் 3 லேப்டாப்கள் மற்றும் திருடப்பட்ட டேட்டா ஆவணங்கள் உட்பட பல பொருட்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
    • டெல்லியில் பணியாற்றும் 35 ஆயிரம் அரசு ஊழியர்களின் தனிநபர் விவரங்களையும் விற்பனை செய்ய தயாராக இருந்துள்ளனர்.

    திருப்பதி:

    நாடு முழுவதும் 16 கோடியே 80 லட்சம் பேரின் செல்போன் எண்கள், இ-மெயில் ஐடி, முகவரி, அவர்களின் வங்கிக்கணக்கு விவரங்கள் உட்பட எல்லா தகவல்களையும் திருடி, சைபர் கிரைம் மோசடியில் கும்பல் ஈடுபடுவதாக தெலுங்கானா போலீசாருக்கு தெரியவந்தது.

    இதையடுத்து, டேட்டா திருட்டு மற்றும் டேட்டா விற்பனை ஆகியவை தொடர்பாக, ஐதராபாத்தில் உள்ள சைபராபாத் பகுதி குற்றத்தடுப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து, 7 பேர் கும்பலை கைது செய்தனர்.

    அவர்கள் 7 பேரும், டேட்டா மார்க் இண்டஸ்ட்ரி, குளோபல் டேட்டா இன்டக்சன், எம்எஸ் டிஜிட்டல் க்ரோ ஆகிய பெயர்களில் 3 நிறுவனங்களை உருவாக்கி, அவற்றின் மூலமாக ராணுவ அதிகாரிகளின் தனிப்பட்ட விவரங்கள், பொதுமக்களின் செல்போன் எண்கள், பொதுமக்களின் பான் கார்டு விவரங்கள், அரசு ஊழியர்களின் விவரங்கள், பொதுமக்களின் டிமேட் கணக்கு விவரங்கள், வங்கிகளின் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு விவரங்கள் உட்பட பல விவரங்களை திருடி, சைபர் கிரைம் மோசடியில் ஈடுபடுபவர்களுக்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலும், தாங்கள் திருடிய பல நபர்களின் தனிப்பட்ட தகவல்களை 140 வகையாக பிரித்து, யாருக்கு எது தேவை என்று பட்டியலிட்டு, இந்த கும்பல் விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது.

    இந்த மோசடியில் ஈடுபட்ட 7 பேரிடமிருந்தும் ஆதார் கார்டுகள், 13 செல்போன்கள் 3 லேப்டாப்கள் மற்றும் திருடப்பட்ட டேட்டா ஆவணங்கள் உட்பட பல பொருட்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

    இந்த மோசடி தொடர்பாக, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த குமார் நித்திஷ் பூஷன் மற்றும் பூஜா பால், சுஷில் தோமோர், அத்துல் பிரதாப் சிங், முஸ்கான் ஹசன், சந்தீப் பால், ஜியாவுக் ரஹ்மான் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து சைபராபாத் போலீஸ் ஆணையர் ஸ்டீபன் ரவீந்திரா கூறியதாவது :-

    தனி நபரின் விவரங்கள் மட்டுமல்லாது, நாட்டின் பாதுகாப்புக்கே கேடு விளைவிக்கும் வகையில் இந்திய ராணுவத்தில் பணியாற்றும் 2½ லட்சம் பேரின் முழு விவரங்களையும் சைபர் கிரைம் குற்றவாளிகள் திருடி உள்ளனர்.

    காப்பீடு மற்றும் வங்கி கடனுக்காக விண்ணப்பித்த 4½ கோடி பேரின் தனிநபர் விவரங்களும் இதில் அடங்கும். பல கோடி பேரின் சமூக வலைதள ஐடி, பாஸ்போர்ட், ஆதார், பான் எண் விவரங்களும் திருடப்பட்டுள்ளன. ஒரு அரசு வங்கியில் கடனுக்காக விண்ணப்பித்தவர்களின் விவரமும் சைபர் முழு கிரைம் குற்றவாளிகளின் கைகளுக்கு போயுள்ளது. அந்த வங்கியில் பணியாற்றும் ஒரு சிலரும் இதற்கு உறுதுணையாக இருந்துள்ளனர்.

    டெல்லியில் பணியாற்றும் 35 ஆயிரம் அரசு ஊழியர்களின் தனிநபர் விவரங்களையும் விற்பனை செய்ய தயாராக இருந்துள்ளனர்.

    நாம் தேவையில்லாமல் நமது முழு விவரங்களையும் யாருக்கும் கொடுக்கக் கூடாது.

    இது தொடர்பாக டெல்லி, மும்பை நகரங்களைச்சேர்ந்த கைதான கும்பலிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×