search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜல்சக்தி அமைச்சகம்"

    நமது நதிகள் அனைத்தும் இதேபோன்று சுத்தமாக இருக்க வேண்டும் என என ஜல் சக்தி அமைச்சகம் கூறி உள்ளது.
    புதுடெல்லி:

    நதிநீரை மாசுபடுத்தாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. எனினும், பெரும்பாலான நதிகளில் கழிவுகளை கலந்து அசுத்தமாக்குவது தொடர்கிறது. நகரங்களின் கழிவுகள் மற்றும் தொழிற்சாலை கழிவுகள் நதிகளில் கலப்பதால் இந்தியாவில் நதிகள் மாசுபடுவதற்கு முக்கிய காரணம். நதிகளை தூய்மைப்படுத்துவதற்காக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில், மேகாலயாவில் உள்ள ஒரு நதியின் தூய்மையை பிரதிபலிக்கும் வகையிலான ஒரு புகைப்படத்தை ஜல் சக்தி அமைச்சகம் டுவிட்டரில் பகிர்ந்துள்ளது. 

    அதில், ‘உலகின் தூய்மையான நதிகளில் இதுவும் ஒன்று. இது இந்தியாவில் உள்ளது. மேகாலயா மாநிலத்தில் உள்ள ஷில்லாங்கிலிருந்து 100 கிமீ தொலைவில் உள்ள உம்ங்கோட் நதி. படகு காற்றில் மிதப்பது போல் தெரிகிறது; தண்ணீர் மிகவும் சுத்தமாக உள்ளது. நமது நதிகள் அனைத்தும் இதேபோன்று சுத்தமாக இருக்க வேண்டும். மேகாலயா மக்களுக்கு நன்றி’ என ஜல் சக்தி அமைச்சகம் கூறி உள்ளது.

    நதியில் செல்லும் படகு

    இந்த புகைப்படம் தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது. நேற்று காலை இந்த புகைப்படம் வெளியிடப்பட்டது. இன்று காலை நிலவரப்படி 19000க்கும் மேற்பட்ட லைக்குகளையும், 3000க்கும் மேற்பட்ட ரீட்வீட்டுகளையும் பெற்றுள்ளது. 

    புகைப்படத்தில் உள்ள அந்த நதியின் தண்ணீர் மிகவும் சுத்தமாகவும், வெளிப்படையாகவும் இருப்பதால், கீழே உள்ள பசுமை மற்றும் கூழாங்கற்கள், சிறிய பாறைகள் தெளிவாகத் தெரிகின்றன. புகைப்படத்தைப் பார்த்த பலர் ஆச்சரியம் அடைந்ததுடன், தங்களால் இதை நம்ப முடியவில்லை என கருத்து பதிவிட்டுள்ளனர். 

    இப்போது உம்ங்கோட் நதியைப் பற்றி ஏராளமான மக்கள் அறிந்திருப்பதால், அதையும் மாசுபடுத்துவதற்கு விரைந்து செல்வார்கள் என்று சிலர் எச்சரிக்கை பதிவை வெளியிட்டுள்ளனர்.

    இதுபோன்று யமுனை நதி எப்போது சுத்தமாகும்? என ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளார். மக்கள்தொகை மிகவும்  குறைவு என்பதால் இந்த அளவுக்கு நதி சுத்தமாக இருப்பதாக ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பெரும்பாலான நதிகள் தூய்மையாக இருப்பதாக ஒருவர் கூறி உள்ளார்.  இது போட்டோஷாப் செய்யப்பட்ட படமாக இருக்கலாம் என்றும் ஒரு நபர் சந்தேகம் எழுப்பியிருக்கிறார். 
    ×