search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேலம் வாலிபர்கள்"

    • தேசிய புலனாய்வு முகமை எஸ்.பி ஸ்ரீஜித் மற்றும் அதிகாரிகள், சஞ்சய் பிரகாஷ், நவீன் சக்கரவர்த்தி ஆகிய 2 பேரையும் ஓமலூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
    • இருவரும் துப்பாக்கி தயாரித்ததற்கு பின்னணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கடந்த மே மாதம் 20-ந் தேதி ஓமலூர் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்த என்ஜினீயர் சஞ்சய் பிரகாஷ், எருமாபாளையம் பகுதியை சேர்ந்த பட்டதாரி நவீன் சக்கரவர்த்தி ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.

    அவர்களிடம் 2 துப்பாக்கிகள் இருந்தது. இதுபற்றி தொடர்ந்து விசாரித்தபோது இருவரும் செட்டிச்சாவடி பகுதியில் தனியாக வீட்டை வாடகைக்கு எடுத்து துப்பாக்கி தயாரித்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.

    மேலும், துப்பாக்கி தயாரித்ததில் தொடர்புடைய, அவர்களின் நண்பரான அழகாபுரத்தை சேர்ந்த கபிலன் என்பவரையும் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதனிடையே இந்த வழக்கு கியூ பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

    பின்னர் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து, என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனிடையே கபிலன் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே சென்றார். பின்னர் சிறையில் உள்ள சஞ்சய் பிரகாஷ், நவீன் சக்கரவர்த்தி ஆகிய 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க, சென்னை பூந்தமல்லியில் உள்ள தனி நீதிமன்றத்தில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மனுதாக்கல் செய்தனர்.

    அவர்கள் 2 பேரையும் 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து 2 பேரிடமும் அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். சேலத்திற்கு ரகசியமாக அழைத்து வந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதற்கிடையில் தேசிய புலனாய்வு முகமை எஸ்.பி ஸ்ரீஜித் மற்றும் அதிகாரிகள், சஞ்சய் பிரகாஷ், நவீன் சக்கரவர்த்தி ஆகிய 2 பேரையும் ஓமலூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து செட்டிச்சாவடியில், துப்பாக்கி தயாரித்த வீட்டையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    இருவரும் துப்பாக்கி தயாரித்ததற்கு பின்னணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணையில் எந்தவித தடை செய்யப்பட்ட அமைப்புடனும், இருவருக்கும் தொடர்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து ஜாமினில் வெளியே சென்ற கபிலனிடமும் போலீசார் விசாரணை நடத்தி முடிவு செய்துள்ளனர். விசாரணைக்கு பின்னர் ஓமலூர் காவல் நிலையத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இருவரையும் சேலத்திற்கு அழைத்து சென்றனர்.

    ×