search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூறைக்காற்றுடன்"

    ஆத்தூர், மேட்டூரில் சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது. இதனால் தென்னை மரம் விழுந்து மின்கம்பம் சாய்ந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொது மக்கள் வெளியில் நடமாட முடியாமல் தவித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலை முதலே மாவட்டம் முழுவதும் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது. மாலை 7 மணி அளவில் சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளான ஆத்தூர், மேட்டூர் எடப்பாடி, தம்மம்பட்டி, சங்ககிரி உள்பட பல பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை கொட்டியது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    ஆத்தூர் சுற்று வட்டார பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த கன மழையால் வாழை மற்றும் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஆத்தூர் கோட்டை பகுதியில் இன்று காலை தென்னை மரம் சாய்ந்து மின் கம்பியில் விழுந்தது. இதனால் அருகில் இருந்த மின் கம்பம் சாய்ந்தது. இதனை கவனித்த அந்த பகுதியில் நின்ற மக்கள் அலறி அடித்த படி ஓட்டம் பிடித்தனர்.

    மேட்டூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்றிரவு சுமார் 2 மணி நேரம் கன மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. கோடை காலத்தில் பெய்த இந்த மழை விவவாய பயிர்களுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சேலம் மாநகரில் அஸ்தம் பட்டி, அம்மாப்பேட்டை, ஜங்சன், கொண்டலாம்பட்டி உள்பட பல பகுதிகளில் இரவு 7 மணிக்கு தொடங்கிய மழை ஒரு மணி நேரம் பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது. இதனால் கடந்த சில நாட்களாக புழுக்கத்தில் தவித்த மக்கள் நிம்மதியாக தூங்கினர்.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக ஆத்தூரில் 63 மி.மீ. மழை பெய்துள்ளது. மேட்டூர் 45.2, எடப்பாடி 19, தம்மம்பட்டி 16, சங்ககிரி 15.4, வீரகனூர் 11, சேலம் 10.3, பெத்தநாயக்கன் பாளையம் 8, ஓமலூர் 3, ஏற்காடு 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 191. 9 மி.மீ. மழை பெய்துள்ளது. இன்றும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.

    ×