search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுற்றுச்சூழல் பாதிக்கப்பு"

    • வெள்ளை கற்கள் வெட்டி எடுக்கப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என குற்றச்சாட்டு எழுந்தது.
    • இதனால் வெள்ளை கற்கள் வெட்டி எடுக்க கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டது.

    சேலம்:

    சேலம் அருகே உள்ள கருப்பூர், வெள்ளக்கல்பட்டி, டால்மியா போர்டு பகுதியில் மத்திய, மாநில அரசுக்கு சொந்தமான வெள்ளை கற்கள் வெட்டி எடுக்கும் தொழிற்சாலை இயங்கி வந்தது. இங்கு வெள்ளை கற்கள் வெட்டி எடுக்கப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் வெள்ளை கற்கள் வெட்டி எடுக்க கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டது.

    இதைத்தொடர்ந்து வெள்ளை கற்கள் வெட்டி எடுப்பது நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் வெள்ளக்கல்பட்டி, பாம்பன் கரடு, செங்கரடு, செட்டிச்சாவடி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் வெள்ளை கற்கள் வெட்டி எடுத்து கடத்திச்சென்று விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. மேலும் வெள்ளை கற்கள் வெட்டி எடுக்க ரூ.500 முதல் ரூ.800 வரை சிலர் கூலி கொடுத்து ஆட்களை அழைத்து வந்து இரவில் வெட்டுகிறார்கள்.

    பின்னர் டிராக்டர்கள் மற்றும் சிறிய லாரிகளை கொண்டு வந்து வெள்ளை கற்களை கடத்தி சென்று விடுகிறார்கள். 1 டன் வெள்ளை கற்கள் ரூ.4 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. இவை சானிடரிவேர்ஸ், டைல்ஸ் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.

    சேலம் மாமங்கம் அருகே உள்ள மலைகளை குடைந்து வெள்ளை கற்கள் வெட்டி கடத்தப்படுவது வாடிக்கையாக உள்ளது. நேற்று நள்ளிரவில் மீண்டும் வெள்ளை கற்கள் வெட்டி கடத்துவதற்காக கடத்தல் கும்பல் அங்கு சென்றுள்ளது அப்போது வெள்ளை கற்கள் கடத்துவதில் 2 கும்பல்களிடையே மோதல் ஏற்பட்டது. அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

    இதுபற்றி அறிந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக அங்கு சென்று பார்த்தனர். அப்போது வெள்ளைக்கற்கள் கடத்தல் கும்பலை பொதுமக்கள் தட்டிச்கேட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் கற்களால் சரமாரியாக தாக்கியதோடு அவர்களது இருசக்கர வாகனத்தையும் கடத்தல் லாரியை கொண்டு சேதப்படுத்தினர். பின்பு பொதுமக்களின் வாகனங்களுக்கு கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் தீவைத்து அட்டகாசம் செய்தனர்.

    கடத்தல் கும்பல் தாக்கியதில் பிரசாத், ஸ்ரீனிவாசன் கார்த்திக், பூபதி உள்ளிட்ட சிலர் காயம் அடைந்தனர். அவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதுபற்றி சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதை அறிந்த கடத்தல் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடினர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தப்பி ஓடிய கடத்தல் கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ×