search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சர்வதேச முனையம்"

    • இந்திய விமான நிலைய ஆணையம், சென்னை விமான நிலையத்தில், உள்நாட்டு விமான முனையத்தை விரிவுபடுத்த திட்டமிட்டு உள்ளது.
    • குடியுரிமைச் சோதனை அறைகள், சுங்கச் சோதனை பிரிவு அறைகள் ஆகியவை அகற்றப்பட்டு உள்நாட்டு முனையமாக மாற்றப்படும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த சர்வதேச விமான முனையம் கடந்த 7-ந்தேதி முதல் முழு அளவில் இயங்கத் தொடங்கியது.

    இதனால் ஏற்கனவே சர்வதேச விமான முனையமாக செயல்பட்டு வந்த, டெர்மினல்-3, மற்றும் டெர்மினல்-4 ஆகியவை கடந்த 10-ந் தேதியில் இருந்து, முழுமையாக மூடப்பட்டு உள்ளது. அடுத்த சில வாரங்களில், டெர்மினல்-3 (டி3)யை இடிக்கும் பணி தொடங்க இருக்கிறது. அது முழுமையாக இடிக்கப்பட்ட பின்பு, சென்னை விமான நிலையத்தின் 2-ம் கட்ட கட்டுமான பணி விரைவில் தொடங்க உள்ளது.

    இதற்கிடையே சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் தற்போது, பயணிகள் போக்குவரத்து, விமான சேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால் தற்போதைய உள்நாட்டு விமான நிலையத்தில், இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் கூடுதல் உள்நாட்டு விமான சேவைகள் இயக்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன.

    இதையடுத்து இந்திய விமான நிலைய ஆணையம், சென்னை விமான நிலையத்தில், உள்நாட்டு விமான முனையத்தை விரிவுபடுத்த திட்டமிட்டு உள்ளது.

    சென்னை விமான நிலையத்தில், ஏற்கனவே சர்வதேச முனையமாக செயல்பட்ட டி3 புதிய முனையம் கட்டுமான பணிக்காக, இடிக்கும் நிலையில் உள்ளது. ஆனால் டி4 முனையம் புதிதாகக் கட்டப்பட்ட கட்டிடம் என்பதால் நல்ல நிலையில் காணப்படுகிறது. எனவே டி 4 முனையத்தை இடிக்காமல் புதிய உள்நாட்டு முனையமாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.

    இதைத்தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் தற்போது மூடப்பட்டு உள்ள பழைய சர்வதேச முனையமான டி3, டி4 ஆகியவற்றில், உள்ள குடியுரிமைச் சோதனை அறைகள், சுங்கச் சோதனை பிரிவு அறைகள் ஆகியவை அகற்றப்பட்டு உள்நாட்டு முனையமாக மாற்றப்படும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.

    அடுத்த ஓரிரு மாதங்களில் இப்பணிகள் நிறைவடைய உள்ளது. அதன் பின்பு வருகிற செப்டம்பர் மாதத் தில் இருந்து சென்னையில் உள்நாட்டு விமான நிலையம் இரு பகுதிகளாக இயங்க திட்டமிடப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இப்போது உள்நாட்டு முனையமாக உள்ள டி1 முனையத்தில், ஏர் இந்தியா, விஸ்தாரா, ஸ்பைஸ்ஜெட், ஏர் ஏசியா, ஆகாஷா, அலையன்ஸ் ஏர், ட்ரூ ஜெட் உள்ளிட்ட விமான நிறுவ னங்களின் உள்நாட்டு விமான சேவைகளையும், புதிதாக உருவாக்கப்படும் டி 4 உள்நாட்டு முனையத்தில், இண்டிகோ ஏர்லைன்ஸ் உள்நாட்டு விமானங்களையும் இயக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.

    இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, சென்னை உள்நாட்டு விமான நிலையம், இரு பகுதிகளாக பிரிக்கப்படுவதால், சென்னையில் இருந்து கூடுதலாக உள்நாட்டு விமான சேவைகள் இயக்கப்படும். மேலும் பயணிகளுக்கும் தாராளமாக இட வசதி கிடைக்கும். விமான நிலையத்தில் நெரிசல்கள் குறையும் என்றனர்.

    ×