search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்"

    • திண்டுக்கல் கோட்டை மாரியம்மன், அபிராமி அம்மன், மலையடிவாரம் சீனிவாசபெருமாள், தாடிக்கொம்பு சவுந்திரராஜபெருமாள் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது.
    • திருப்பாவை மற்றும் திருவெம்பாவை பாடல்கள் பாடப்பட்டதுடன் அம்மனின் போற்றிபாடல்களும் பாடப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

    திண்டுக்கல்:

    தனுர்மாதம் எனப்படும் மார்கழி மாதத்தில் 30 நாட்களும் அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். குறிப்பாக அதிகாலையில் நடக்கும் திருவிளக்கு வழிபாட்டில் ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொள்வது வழக்கம். இதற்காக அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனி கோவிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அதனைதொடர்ந்து 4.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி நடைபெற்றது. அதன்பிறகு காலசந்தி, சிறுகாலசந்தி மற்றும் விழா பூஜைகள் நடைபெற்றது.

    இந்த பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். சபரிமலை சீசனை முன்னிட்டு அய்யப்ப பக்தர்களும் அதிகளவில் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன், அபிராமி அம்மன், மலையடிவாரம் சீனிவாசபெருமாள், தாடிக்கொம்பு சவுந்திரராஜபெருமாள், ஆர்.எம்.காலனி வெக்காளியம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது. சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது.

    கொட்டும் பனியையும் பொருட்படுத்தாது பக்தர்கள் அதிகளவில் கலந்து கொண்டனர். பெரும்பாலான கோவில்களில் திருப்பாவை மற்றும் திருவெம்பாவை பாடல்கள் பாடப்பட்டதுடன் அம்மனின் போற்றிபாடல்களும் பாடப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

    மார்கழி மாதம் முழுவதும் இந்த பூஜைகள் நடைபெறும் என்பதால் பூக்கள் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனையும் அதிகளவில் நடைபெற்றது.

    ×