search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கையேந்திபவன்"

    • தற்போது தெருவுக்கு தெரு கையேந்திபவன்கள் முளைத்து வருகின்றன.
    • கையேந்திபவன்கள் களைக்கட்டுவதால் ஓட்டல்கள் ஓரங்கட்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    சென்னை :

    சென்னையில் தங்கி பணிபுரியும் இளைஞர்கள், வேலை தேடி வருவோர்களின் பசியை போக்க அதிகம் கை கொடுப்பது கையேந்திபவன் என்று அழைக்கப்படும் சாலையோர தள்ளுவண்டி உணவு கடைகள். குறைந்த விலையில் வயிறு நிறைவதால் இந்த கடைகளில் எப்போதும் கூட்டம் அலைமோதுகிறது. இங்கு சுடச்சுட தயாரிக்கப்படும் உணவு வகைகளின் மசாலா மணத்துக்கு பலரும் மனம் மயங்கி விடுகின்றனர். எனவே பணக்காரர்களும் கையேந்திபவன் பக்கம் வந்தால் காரை ஓரமாக நிறுத்திவிட்டு விரும்பிய உணவு வகைகளை ருசித்துவிட்டு செல்கின்றனர்.

    சென்னை தரமணி, பெருங்குடி போன்ற ஐ.டி. நிறுவனங்கள் அமைந்துள்ள இடங்களில் உள்ள கையேந்திபவன்களில் 'டிப்-டாப்' உடை அணிந்து என்ஜினீயர்கள் மெய்மறந்து சாப்பிடுவதை பார்க்கலாம். ஸ்டார் ஓட்டல்களில் கிடைக்கும் சிக்கன் கபாப் போன்ற உணவு வகைகளும் சாலையோர உணவு கடைகளின் மெனு பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

    சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ள உணவு பிரியர்கள், சாலையோர கடைகளின் உணவு வகைகளை தூர்வாரி, அதன் சுவை ஆஹா... ஓஹோ... என்று நாவில் எச்சில் ஊரும் வகையில் வீடியோக்கள் வெளியிடுவதால், அந்த கடையை தேடிச்சென்று கண்டுபிடித்து சாப்பிடுவதையும் பலர் வழக்கமாக வைத்துள்ளனர்.

    ஓட்டல்களில் ஆர்டர் செய்யப்படும் உணவுகளை வீடு தேடிச்சென்று கொடுக்கும் ஊழியர்களும் கையேந்திபவனிலேயே சரணாகதி அடைகின்றனர்.

    சாலையோர உணவு கடைகளில் தரமான பொருட்களை பயன்படுத்த மாட்டார்கள். சுத்தம், சுகாதாரமாக சமைக்க மாட்டார்கள். இந்த உணவை சாப்பிட்டால் உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் போன்ற விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும் மக்களின் படையெடுப்பால் ஓட்டல்களை ஓரங்கட்டும் வகையில் சென்னையில் புற்றீசல் போன்று கையேந்திபவன்கள் பெருகி வருகின்றன.

    சென்னை தியாகராயநகர் பகுதியில் அமைந்துள்ள கையேந்திபவன் உணவின் ருசிக்கு தொழில் அதிபர்களும் அடிமையாகி உள்ளனர். இந்த கடையின் வாடிக்கையாளரான தொழிலதிபர் ஸ்டாலின் சின்னத்துரை கூறியதாவது:-

    ஒரு நாள் தொழில் நிமித்தமாக வெளியே சென்றுவிட்டு இரவு நேரத்தில் காரில் வீடு திரும்பி கொண்டிருந்தேன். அப்போது தியாகராயநகரில் உள்ள சாலையோர கையேந்திபவன் உணவு கடையில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    இவ்வளவு பேர் சாப்பிடுகிறார்களே, நாமும் சாப்பிட்டு ருசி எப்படி இருக்கிறது? என்று பார்க்கலாம் என்று சாப்பிட்டேன். சுடச்சுட இட்லி, தோசை போன்ற உணவு வகைகளும், ஆம்லெட், ஈரல், சிக்கன் போன்ற 'சைடீஸ்' வகைகளும் நாவிற்கு சுவையாக கிடைத்தது. இதையடுத்து அவ்வப்போது காரில் வந்து இந்த கடையில் சாப்பிட்டு செல்வேன்.

    எனக்கு தொழில் முறையாக அறிமுகமான தொழிலதிபர்களுக்கு நட்சத்திர ஓட்டலில் விருந்து கொடுப்பது வழக்கம். அவர்களிடம் இந்த கையேந்திபவனின் சுவை பற்றி தெரிவித்தேன். அவர்களும் சாப்பிட்டுவிட்டு இந்த கடையின் வாடிக்கையாளராகி விட்டனர். குறைந்த விலையில் நல்ல முறையில் உணவு வகைகள் கிடைப்பதால் கையேந்திபவன்கள் வரவேற்பை பெற்றுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னை தியாகராயநகர் பகுதியை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர்கள் தேன்மொழி, ஐஸ்வர்யா, ரோஷி ஆகியோர் கூறியதாவது:-

    இந்த சாலையோர உணவு கடையில் திருவிழா கூட்டம் போன்று எப்போது மக்கள் கூட்டம் இருக்கும். எனவே ஒரு நாள் சாப்பிட வேண்டும் என்று நாங்கள் நினைத்திருந்தோம். அதன்படி சாப்பிட வந்தோம். சூடாகவும், சுவையாகவும் அனைத்து உணவுகளும் கிடைத்தன. ருசி சூப்பராக இருந்ததால் உணவை மிச்சம் வைக்காமல் சாப்பிட்டோம். இனி அடிக்கடி சாப்பிட வரலாம் என்று முடிவு செய்திருக்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    சென்னை பெருங்குடியில் உள்ள ஐ.டி.நிறுவன ஊழியர் கோகுல்நாதன்:-

    எனது சொந்த ஊர் திருவண்ணாமலை. நான் இங்குள்ள மேன்ஷனில் தங்கி பணியாற்றி வருகிறேன். 3 வேளையும் உணவு வெளியே சாப்பிட்டு வருகிறேன். ஓட்டல்களில் தினமும் சாப்பிட்டால் உணவுக்கே பெருந்தொகை செலவிட நேரிடும்.

    ஆனால் கையேந்திபவன்களில் குறைந்த விலைக்கு வயிறார உணவு வகைகள் கிடைக்கிறது. எனவே 3 வேளையும் கையேந்திபவனில் சாப்பிட்டு பசியை போக்கிக்கொள்கிறேன். வாய்க்கு ருசியாக உணவு கிடைப்பதுடன் உடல் ஆரோக்கியத்துக்கும் உகந்ததாக உள்ளது. வீட்டு சாப்பாடு போன்று சுவை இருப்பதால் உடலும், மனமும் ஏற்றுக்கொள்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    துரைப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஐ.டி. நிறுவன ஊழியர் பாலகணேஷ்:-

    நான் கையேந்திபவன் உணவு பிரியர். வீட்டில் சாப்பிடுவது போன்ற உணர்வு கிடைக்கிறது. நம் கண்முன்னே டிபன் வகைகளை செய்து பரிமாறுகிறார்கள். ஓட்டல்களில் தனி அறையில் எவ்வாறு உணவு தயார் செய்யப்படுகிறது? என்பதை நேரில் பார்க்க முடிவதில்லை.

    கையேந்திபவன்களில் சுடச்சுட ஆவிப்பறக்க எல்லா உணவு வகைகளும் கிடைப்பதால் ருசியாக இருப்பதுடன், செரிமான பிரச்சினை, வயிற்று வலி போன்ற தொல்லைகளும் ஏற்படுவது இல்லை. ஓட்டலைவிட குறைந்த விலையில் வயிறார உணவு கிடைப்பதும் கையேந்திபவன்களின் தனி ஸ்பெஷலாக உள்ளது. மேலும் உணவுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு பசியுடன் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை. ஜி.எஸ்.டி. வரி பெயரில் நம்மிடம் இருந்து கூட்டணம் வசூலிக்கப்படுவது இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னை பெருங்குடி-கந்தன்சாவடி சாலையில் தள்ளுவண்டி மூலம் சிற்றுண்டி கடை நடத்தி வரும் தம்பதியர் பாலசுப்பிரமணியன்-மீனாள்:-

    எங்களது சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் தொண்டைமான் ஆகும். இப்பகுதியில் 4 ஆண்டுகளாக உணவு கடை நடத்தி வருகிறோம். நாங்கள் 2 பேரும் தினமும் அதிகாலை 2 மணிக்கு எழுந்து சமையல் வேலையை தொடங்குவோம்.

    சமையலுக்கு எல்லாம் தரமான காய்கறி, மளிகை பொருட்களை மட்டும் பயன்படுத்துகிறோம். தினமும் 7 லிட்டர் எண்ணெய் பயன்படுத்துகிறோம். காலை 7 மணி முதல் காலை 10.30 மணி வரை டிபன் கிடைக்கும். எங்கள் கடையில் செட்டிநாடு ஸ்டைலில் உணவு சுவையாகவும், சுகாதாரமாகவும் இருப்பதால்தான் ஐ.டி. ஊழியர்கள் உள்பட பலதரப்பட்ட மக்களும் ஆசையுடன் வந்து விரும்பி சாப்பிட்டு செல்கின்றனர். வாடிக்கையாளர்கள் என்ன சாப்பிட்டார்கள் என்று அவர்களே சொல்வார்கள். நாங்கள் கணக்கு போட்டு தொகையை சொன்னவுடன், இன்ப அதிர்ச்சி அடைவார்கள். நிறைய சாப்பிட்டும் குறைவான பணம் மட்டும் வருவதால் வயிறு மட்டுமின்றி மனநிறைவுடன் மகிழ்ச்சியுடன் செல்கிறார்கள்.

    தற்போது எங்கள் கடைக்கு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் வடமாநில இளைஞர்கள் 3 பேரை வேலைக்கு அமர்த்தி உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    கொரோனா காலக்கட்டத்தில் வேலையிழந்த பலரின் பார்வை கையேந்திபவன் தொழில் மீது திரும்பியதே இந்த தொழில் பெருகி வருவதற்கான காரணங்களில் ஒன்றாக கூறப்படுகிறது.

    தெருவுக்கு தெரு முளைக்கும் கையேந்திபவன்களால் ஓட்டல்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஓட்டல் அதிபர்கள் சங்கம் கவலையை வெளிப்படுத்தி உள்ளது.

    கையேந்திபவன்கள் களைக்கட்டுவதால் ஓட்டல்கள் ஓரங்கட்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு ஓட்டல் அதிபர்கள் சங்கத்தின் கவுரவ தலைவர் வசந்தபவன் எம்.ரவி 'தினத்தந்தி' நிருபரிடம் கூறியதாவது:-

    தற்போது தெருவுக்கு தெரு கையேந்திபவன்கள் முளைத்து வருகின்றன. இதனால் ஓட்டல் தொழிலுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நஷ்டத்தை சமாளிக்க முடியாமல் பெரிய ஓட்டல்கள் மூடப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    கையேந்திபவன்களுக்கு வாடகை கிடையாது. ஜி.எஸ்.டி. வரி இல்லை. வருமான வரி கட்டுவது இல்லை. திறந்தவெளியில் கடைகளை நடத்துவதால் உணவுப் பொருட்கள் மீது தூசு கழிவுகள் படிந்து மக்கள் நோய்வாய் படும் நிலை உள்ளது.

    ஓட்டல்களில் உணவின் தரம் சரியாக இருக்கிறதா? என்று ஆய்வு செய்யும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கையேந்திபவன்களை கண்டுகொள்வதில்லை.

    வெளிநாடுகளில் அரசு நிலத்தில் 'புட்கோட்' (உணவுக்கூடங்கள்) அமைப்பதற்கு இடம் ஒதுக்கி தருகிறார்கள். எவ்வாறு கடையை நடத்த வேண்டும்? என்பது குறித்து பயிற்சி அளிக்கிறார்கள். கடைகளுக்கு வாடகை மட்டும் வசூலித்து கொள்கிறார்கள். அதுபோன்ற நடைமுறைகள் இங்கும் வர வேண்டும்.

    ஓட்டல்கள் மூலம் அரசுக்கு வரி வருவாய் சென்றுக்கொண்டிருக்கிறது. கையேந்திபவன் ஆதிக்கத்தால் பொதுமக்களுக்கு உடல்நலக் குறைபாடு உண்டாகுகிறது. அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே கையேந்திபவன்களை முறைப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×