search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைதிகள் வார்டன்கள் மோதல்"

    • வார்டன்களுக்கும், கைதிகளும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.
    • காயம் அடைந்த கைதிகள் 7 பேர் ஜெயில் வளாகத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கோவை:

    கோவை மாநகரின் மத்தியில் மத்திய ஜெயில் செயல்பட்டு வருகிறது. இந்த ஜெயிலில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 2500-க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

    இங்கு தடையை மீறி புகையிலை பொருட்கள், கஞ்சா, செல்போன் உள்ளிட்டவை பயன்படுத்தப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

    இதனை தொடர்ந்து சிறைத்துறை அதிகாரிகள் ஜெயிலில் அடிக்கடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இருந்த போதிலும் அவை பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிகிறது.

    இதனால் தினமும் ஜெயிலில் உள்ள அத்தனை வளாகங்களிலும் அங்கிருக்கும் வார்டன்கள் அனைவரும் ரோந்து செல்வது வழக்கம்.

    அதன்படி இன்று காலை ஜெயிலில் பணியில் இருந்த 2 வார்டன்கள் மத்திய ஜெயிலில் உள்ள வால்மேடு என அழைக்கப்படும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள பிளாக்கில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    ஒவ்வொரு அறையாக சென்று சோதனை செய்தனர். அப்போது ஒரு அறையில் இருந்த 3 பேர், எந்நேரமும் எங்களிடமே வந்து சோதனை செய்கிறீர்களே என கேட்டு சோதனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் வார்டன்களுக்கும், கைதிகளும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இவர்களது சத்தம் கேட்டு சக வார்டன்கள் ஓடி வந்தனர். மேலும் ஏராளமான கைதிகளும் திரண்டு விட்டனர்.

    கைதிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டு, வார்டன்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி தகராறு செய்தனர். இருதரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றவே ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டு தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது.

    கைதிகளில் சிலர் மரங்களின் மீது ஏறி அமர்ந்துகொண்டு இதுபோன்று தொல்லை கொடுத்தால் கைகளை அறுத்து கொள்வோம் என கூறி கைகளை அறுத்து மிரட்டல் விடுத்தனர். மேலும் சில கைதிகள் வார்டன்களை தாக்கினர். இதில் மோகன்ராஜ், பாபு ஜான், விமல்ராஜ், ராகுல் ஆகிய 4 வார்டன்களும் காயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்ததும் சிறைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் அடைந்த 4 வார்டன்களையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பினர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் காயம் அடைந்த கைதிகள் 7 பேர் ஜெயில் வளாகத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வார்டன்கள், கைதிகள் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சிறைத்துறை டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம் விசாரணை நடத்தி வருகிறார்.

    ×