search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைகளில் வளைகாப்புகளும்"

    • விஜயநகர பேரரசு கால அடுக்கு நிலை நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டது.
    • இந்த நடுகற்களை இன்றும் வெளியூரைச் சேர்ந்தவர்கள் வழிபட்டு வருவதாக இந்த கிராமத்தினர் கூறினார்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே பிள்ளை யார்குளம் கிராமத்தில் பழமை யான சிலைகள் இருப்பதாக நாகரத்தினம் அங்காளம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வரலாற்றுத் துறை மாணவர்களான கவுதம், மலைமுத்து, பால கிருஷ்ணன், காளிமுத்து, தர்மராஜா போன்றோர் கண்டறிந்து கல்லூரியின் வரலாற்றுத் துறை உதவிப்பேரா சிரியர்களான தாமரைக்கண்ணன், ராஜபாண்டி ஆகியோருக்கு கொடுத்த தகவலின்படி பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர் ஸ்ரீதர் உதவியுடன் நேரில் சென்று கள மேற்பரப்பாய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த சிலைகள் 500 வருடங்களுக்கு முற்பட்ட விஜயநகரப் பேரரசு கால அடுக்கு நிலை நடுகற்கள் என்பது தெரியவந்தது. இதுகுறித்து மேலும் அவர்கள் கூறியதாவது:-

    அடுக்கு நிலைநடுகல்: இந்த வகை நடுகற்கள் போரில் ஈடுபட்டு இறந்தவர்களின் தியாகத்தைப் போற்றி அவர்கள் எந்த படைப்பிரிவினை சேர்ந்தவர் எவ்வாறு இறந்தார் என்ற விபர குறிப்போடு எடுக்கப்படும் ஒரு நடுகல் மரபாகும். இந்த அடுக்கு நிலை நடு கற்களை கொய்சாளர்கள் பின்பற்றும் கலைப் பணியாகும். தமிழகத்தில் விஜயநகரப் பேரரசு காலம் தொடங்கிய போது இந்த கலைபாணியும் வந்திருக்க வேண்டும். தற்போது நாங்கள் கண்டறிந்த அடுக்கு நிலை நடுகற்கள் பிள்ளை யார்குளம் கிராமத்தில் மூன்று கற்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் ஒரு சதிகல்லும், வில்வீரன் சிற்பமும் இடம்பெற்றுள்ளன.

    அடுக்குநிலை நடுகல் ஒன்று: இங்கு காணப்படும் அடுக்கு நிலை நடுகல் 5 அடி உயரமும் இரண்டடி அகலமும் முக்கால் அடி தடிமனும் கொண்ட பலகைக்கல்லில் புடைப்புச் சிற்பமாக செக்கப்பட்டுள்ளது.

    இந்த கல்லில் 3 புறம் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் முதல் பக்கத்தில் பல்லக்கில் ஒருவர் வணங்கியபடி அமர்ந்துள்ளார். இரு பல்லக்குத்தூக்கிகள் பல்லக்கை சுமந்தவாறு செதுக்கப்பட்டுள்ளது. இவர் அரசருக்கு இணையானவராக கருதலாம். இதற்கு கீழ் அடுக்கில் ஒருவர் காளை மீது அமர்ந்து முரசுகொட்டும்படி சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. காளைமீது அமர்ந்து முரசு ஒலிக்கும் சிற்பம் மிகவும் அபூர்வமான ஒன்றாகும். காளையின் கழுத்தில் மணிகள் இடம்பெற்றுள்ளது. நன்கு நீண்ட வளைந்த கொம்புகளும் காணப்படு கிறது. காளையின் முன்பாக இருவர் எக்காளம் கொண்டு ஒலி எழுப்பியவாறு செல்லும்படி சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. இந்த நடுகல்லில் இரண்டாவது பக்கத்தில் மேலிருந்து கீழாக 5 அடுக்குகளாக சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.

    முதல் அடுக்கில் வில்வீரன் ஒருவன் வில்லில் அம்பை வைத்து எய்யுமாறு செதுக்கப்பட்டுள்ளது. வில்லிற்க்கு மேலும் கீழுமாக இரண்டு மாடுகள் இடம்பெற்றுள்ளன. இவற்றைப் பார்க்கும்போது இவ்வீரன் வாழ்ந்த காலத்தில் எதிரி நாட்டினர் தனது நாட்டு ஆநிரைகளை கவர்ந்து சென்றிருக்க வேண்டும் அதனை மீட்க சென்ற வில்வீரன் அப்போரில் இறந்திருக்க வேண்டும்.

    இதன் காரணமாக நடுகல் எடுத்திருக்கிறார்கள் என்று கூறலாம். இதற்கு கீழ் உள்ள அடுக்கில் குதிரை வீரன் குதிரையில் வாளேந்தியபடி வடிக்கப்பட்டுள்ளது. இந்த அடுக்கிற்கு கீழ் மூன்று அடுக்குகள் இடம் பெறுகின்றன. அவற்றில் கீழே வீரர்கள் ஊன்றிய வாளை பிடித்தபடியும் அருகில் அவர்களது மனைவிகள் நின்றபடியும் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. மூன்றாவது பக்கம் 5 அடுக்குகளாக சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. முதல் அடுக்கில் குதிரைவீரன் வாளேந்தியபடியும் அதற்கு முன்பு மூன்று வீரர்கள் வணங்கியபடியும் மூவரின் காலடியில் வாள்கள் ஊன்றியபடியும் செதுக்கப்பட்டுள்ளது.

    2-வது அடுக்கில் ஒரு யானையில் அங்கு சத்துடன் ஒருவர் அமர்ந்திருக்க பின்னால் ஒருவர் வாளேந்தியபடி அமர்ந்திருக்கிறார். யானைக்கு முன்பு மூன்று வீரர்கள் வணங்கியபடியும் வாள்கள் அவரவர் அருகே செதுக்கப்பட்டுள்ளது. மூன்றாவது அடுக்கில் இருந்து ஐந்தாவது அடுக்கு வரை குதிரைவீரர்கள் வாளேந்தியபடியும் அவர்க ளுக்கு முன்பாக 3 வீரர்கள் வணங்கியபடி நிற்க போர்வாள்கள் அவரவர் அருகே செதுக்கப்பட்டுள்ளது.

    இவற்றைப் பார்க்கும் போது குதிரைப்படையிலும், யானைப்படையிலும் உள்ள வீரர்கள் இறந்ததன் காரணமாக இந்த நடுகல் எடுத்திருக்கலாம்.

    அடுக்கு நிலை நடுகல் இரண்டு: இந்த கல்லில் இரண்டு அடுக்கு சிற்பங்கள் காணப்படுகின்றன. இந்த கல் நான்கு அடி உயரமும் இரண்டடி அகலமும் ஒரு அடி தடிமனும் கொண்ட பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப் பட்டுள்ளது. முதல் பக்கத்தில் முதல் அடுக்கில் கிருஷ்ணர் புல்லாங்குழல் வாசிக்க இரு மாடுகள் இசையில் மயங்கி அருகில் நிற்கும்படியும் கிருஷ்ணரின் மேற்கரங்களில் சங்கும் சக்கரமும் இடம்பெற்றுள்ளது. அடுத்த கீழ் அடுக்கில் இரு ஆண்கள் வழங்கியபடியும் ஒரு பெண் அருகில் நிற்கும்படியும் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது பக்கத்தில் மேலடுக்கில் கருடன் நின்ற கோளத்தில் பாம்பை பிடித்தபடி சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் அடுக்கில் இருவர் வழங்கியபடி சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.

    அடுக்கு நிலை நடுகல் மூன்று: இந்த நடுகல் நான்கடி உயரமும் ஒரு அடி அகலமும் கொண்ட பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று அடுக்குகளாக சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. ஒன்பது வீரர்களில் ஒருவரை தவிர அனைவரும் வணங்கியபடி சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. ஒருவர் மட்டும் வாளேந்தியபடி செதுக்கப்பட்டுள்ளது. இந்த நடுகல்லும் போரில் இறந்த வீரர்களுக்கு எடுக்கப்பட்ட நினைவு அடுக்கு நிலை நடுகல்லாகும்.

    வில்வீரன்சிற்பம்: இந்த சிற்பம் இரண்டரை அடி உயரத்துடன் காணப்படுகிறது. வீரன் ஒருவன் இடதுபுறம் சரிந்த கொண்டையுடன் மார்பில் ஆபரணங்களுடனும் முதுகுப்புறம் அம்புரான் கூட்டினை தாங்கியபடியும் இடது கையில் வில்லினை பிடித்தபடியும் வலது கையில் அம்பினை எய்யும் நிலையில் இருக்கும்படி சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. சதிகல்: இங்கு ஒரு சதிகல்லும் காணப்படுகிறது. இந்த கல் மூன்றடி உயரமும் இரண்டடி அகலமும் கொண்ட பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இதில் வீரன் ஒருவன் சற்றே மேல் நோக்கிய கொண்டையுடன் நீண்ட காதுகளில் காதணியும், மார்பில் ஆபரணங்களும், கைகளில் வளைகாப்புகளும், இடையில் இடைக்கச்சையும் காலில் வீரக்கழலையும் அணிந்தபடி நின்ற கோலத்தில் சிற்பம் வணங்கியபடி செதுக்கப்பட்டுள்ளது. வலது கையின் இடையில் போர்வாள் மேல் நோக்கி செதுக்கப்பட்டுள்ளது. அருகில் அவரது மனைவி மலர் செண்டுடன் நின்ற கோலத்தில் சிறப்பாக வடிக்கப்பட்டுள்ளது. தனது கணவன் உயிரிழந்த துக்கம் தாளாமல் கணவனின் சுதையில் தனது உயிரை துச்சமென எண்ணி உடன்கட்டை ஏறி உயிர் துறந்ததன் நினைவாக இந்த நடுகல் எடுத்திருக்கலாம்.

    செங்கல் கட்டுமானம்: மேற்கண்ட சிற்பங்கள் காணப்படும் இடத்தில் ஒரு பழமையான செங்கல் கட்டுமானம் காணப்படுகிறது. விஜயநகர பேரரசு காலத்தில் மேற்கண்ட நடு கற்கள் எடுத்து வழிபட்டு வந்துள்ளனர் என்பதற்கு ஆதாரமாக கட்டுமான சுவர்கள் காணப்படுவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இங்கு காணப்படும் சிற்பங்க ளைப் பார்க்கும்போது விஜயநகர பேரரசு காலத்தில் இந்த பகுதியில் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அவர்களின் படைப் பிரிவு களில் இருந்துள்ளனர் என்பது தெளிவாகிறது. மேலும் இந்த நடுகற்களை இன்றும் வெளியூரைச் சேர்ந்தவர்கள் வழிபட்டு வருவதாக இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர் என்று அவர்கள் கூறினார்.

    ×