search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கே.எல்.ராகுல்"

    • முதலில் ஆடிய இந்திய அணி 399 ரன்களை குவித்தது.
    • சுப்மன் கில், ஷ்ரேயஸ் அய்யர் ஜோடி அதிரடியாக ஆடி 200 ரன்கள் சேர்த்தனர்.

    இந்தூர்:

    இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி இந்தூரில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெயிக்வாட், சுப்மன் கில் களமிறங்கினர். அணியின் எண்ணிக்கை 16 ஆக இருக்கும்போது ருதுராஜ் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ஷ்ரேயாஸ் அய்யர் சுப்மன் கில்லுடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    இந்திய அணி 9.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

    சுப்மன் கில், ஷ்ரேயஸ் அய்யர் ஜோடியைப் பிரிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணியினர் திணறினர். இருவரும் கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர்.

    சுப்மன் கில், ஷ்ரேயஸ் அய்யர் ஆகியோர் சதமடித்து அசத்தினர். ஷ்ரேயஸ் அய்யர் 86 பந்துகளில் 3 சிக்சர், 10 பவுண்டரிகள் உள்பட சதமடித்தார். அவர் 105 ரன்னில் அவுட்டானார். இது இவரது 3வது ஒருநாள் சதமாகும்.

    சுப்மன் கில் 92 பந்துகளில் 4 சிக்சர், 6 பவுண்டரி உள்பட சதமடித்து அசத்தினார். அவர் 104 ரன்னில் ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இவர்கள் 200 ரன்கள் குவித்தனர். இஷான் கிஷன் 31 ரன்னில் வெளியேறினார்.

    தொடர்ந்து ஆடிய கேப்டன் கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ் ஜோடியில் சிக்சர், பவுண்டரிகளாக அடித்தனர். ராகுல் அரை சதமடித்து 52 ரன்னில் அவுட்டானார்.

    கேமரூன் கிரீன் வீசிய 43-வது ஓவரில் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து 4 சிக்சர்கள் அடித்து அசத்தினார்.

    இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 399 ரன்களை குவித்தது. சூர்யகுமார் யாதவ் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதையடுத்து, 400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது.

    • கே.எல்.ராகுல் காயத்தில் இருந்து முழுமையாக குணமாகவில்லை என்று தேர்வு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
    • தேர்வின்போது ஒரு வீரர் தகுதியற்றவராக இருந்தால் நீங்கள் அவரை தேர்வு செய்யக்கூடாது.

    புதுடெல்லி:

    இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 6 நாடு கள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது.

    இந்தப் போட்டிக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. காயம் காரணமாக ஆபரேசன் செய்து கொண்ட கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் அணிக்கு தேர்வாகி உள்ளனர். இருவரது உடல் தகுதியை சோதிக்காமலேயே தேர்வானது விமர்சனத்தை ஏற்படுத்தி இருந்தது.

    அதோடு செப்டம்பர் 2-ந் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான போடியில் கே.எல்.ராகுல் ஆடுவது சந்தேகம் என்றும் தேர்வுக்குழு தலைவர் அஜீத் அகர்கர் தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் முழு உடல் தகுதி இல்லாமல் இருக்கும் கே.எல்.ராகுல் ஆசிய கோப்பை அணிக்கு தேர்வு செய்தது ஏன்? என்று முன்னாள் கேப்டனும், முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான கே.ஸ்ரீகாந்த் கடுமையாக சாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    கே.எல்.ராகுல் காயத்தில் இருந்து முழுமையாக குணமாகவில்லை என்று தேர்வு குழுவினர் தெரிவித்துள்ளனர். அப்படி இருக்கும்போது அவரை தேர்வு செய்தது ஏன்? தேர்வின்போது ஒரு வீரர் தகுதியற்றவராக இருந்தால் நீங்கள் அவரை தேர்வு செய்யக்கூடாது. இதுதான் எங்களின் கொள்கையாக இருந்தது.

    தேர்வு செய்யப்படும் நாளில் ஒரு வீரர் உடல் தகுதியுடன் இல்லாவிட்டால் அவரை தேர்வு செய்யக் கூடாது. நீங்கள் அவரை (கே.எல்.ராகுல்) உலக கோப்பைக்கு தேர்வு செய்ய விரும்பினால் அதற்காக மட்டும் தேர்ந்து எடுக்கவும். தேர்வு குழுவினர் விளக்கம் சரியாக இல்லை.

    இவ்வாறு ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

    • இரண்டாவது போட்டியில் பஞ்சாப், லக்னோ அணிகள் மோதுகின்றன.
    • டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    லக்னோ:

    16-வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லக்னோவில் இன்று நடைபெறும் 2வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி, லக்னோ அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல், கைல் மேயர்ஸ் இறங்கினர். இருவரும் இணைந்து சிறப்பான தொடக்கம் கொடுத்தனர்.

    கைல் மேயர்ஸ் 29 ரன்னில் அவுட்டானார். தீபக் ஹூடா 2 ரன்னில் வெளியேறினார். குருணால் பாண்ட்யா 18 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    நிகோலஸ் பூரன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். ஸ்டாய்னிஸ் 15 ரன்னில் அவுட்டானார். கே.எல்.ராகுல் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 74 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்களை சேர்த்தது. இதையடுத்து, 160 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்குகிறது.

    பஞ்சாப் அணி சார்பில் சாம் கர்ரன் 3 விக்கெட்டும், ரபாடா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • ஆசிய கோப்பை தொடரில் கே.எல்.ராகுல் அதிரடியாக ஆடாததால் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
    • சூழ்நிலைக்கு ஏற்ப எந்த இடத்திலும் பேட்டிங் செய்ய தயாராக இருப்பதாக சூர்யகுமார் யாதவ் தகவல்

    துபாய்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி நேற்று ஹாங்காங் அணியை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது. இந்த போட்டியில் ஆதிக்கம் செலுத்திய சூர்யகுமார் யாதவ், 26 பந்துகளில் 6 பவுண்டரி, 6 சிக்சருடன் 68 ரன்கள் விளாசினார். துவக்க வீரர் கே.எல்.ராகுல் வழக்கத்திற்கு மாறாக மெதுவாக ஆடிய நிலையில், சூர்யகுமாரின் அதிரடி, அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது.

    பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கே.எல்.ராகுல் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். ஹாங்காங் அணிக்கு எதிராக 39 பந்துகளில் 36 ரன்கள் அடித்தார். இதனால் அவர் பல விமர்சனங்களை எதிர்கொண்டார். உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்தியா டி20 போட்டிகளில் அச்சமின்றி ஆக்ரோஷமாக விளையாடி தனது பலத்தை நிரூபிக்க முயற்சிக்கும் நிலையில், கே.எல்.ராகுலின் அணுகுமுறை அதற்கு முரணாக இருப்பதாக கருத்துகள் வலம்வந்தன.

    போட்டி முடிந்தபின்னர் செய்தியாளர் சந்திப்பின்போது சூர்யகுமாரின் பேட்டிங் வரிசை குறித்து ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதாவது, டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக, சோதனை முயற்சியின் ஒரு பகுதியாக கேப்டன் ரோஹித் சர்மாவுடன் நீங்கள் துவக்க வீரராக களமிறங்குவீர்களா? என்று அந்த செய்தியாளர் கேட்டார்.

    அப்போது குறுக்கிட்ட சூர்யகுமார் யாதவ், 'அப்படியென்றால் கே.எல்.ராகுலை நீக்க வேண்டும் என விரும்புகிறீர்களா?' என சிரித்துக்கொண்டே எதிர்கேள்வி கேட்டு மடக்கினார்.

    தொடர்ந்து பேசிய சூர்யகுமார் யாதவ், 'அவரும் (ராகுல்) காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பி உள்ளார். அவருக்கும் அவகாசம் தேவை. எங்களுக்கு இப்போது சிறிது அவகாசம் கிடைத்திருக்கிறது. நான் முன்பே கூறியதுபோல், நான் சூழ்நிலைக்கு ஏற்ப எந்த இடத்திலும் பேட்டிங் செய்ய தயாராக இருக்கிறேன். இதை பயிற்சியாளர் மற்றும் கேப்டனிடம் தெரிவித்துள்ளேன். நான் எந்த இடத்தில் விளையாட வேண்டும் என்பதை அவர்கள்தான் உறுதி செய்வார்கள்' என்றார்.

    • பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடுவது எங்களுக்கு உற்சாகமானது.
    • பாகிஸ்தானுக்கு எதிரான தோல்வி இன்னும் வருத்தமளிக்கிறது.

    துபாய்:

    இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 6 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை தொடங்குகிறது. செப்டம்பர் 11 வரை இந்த போட்டிகள் நடைபெற உள்ளது.

    இந்த தொடரில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களம் காண்கிறது. நாளை மறுநாள் இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

    இந்த போட்டி குறித்து இந்திய வீரர் கே.எல்.ராகுல் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

    இந்தியா-பாகிஸ்தான் போட்டியை நாங்கள் எப்போதும் ஆவலுடன் எதிர்நோக்குகிறோம். பெரிய தொடர்களில் மட்டும் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறோம். எனவே, பாகிஸ்தான் போன்ற அணிக்கு எதிராக விளையாடுவது எங்களுக்கு ஒரு உற்சாகமானது. நமக்கும் நாமே சவால் விடும் சிறந்த வாய்ப்பு.

    கடந்த டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தோல்வி அடைந்தது இன்னும் வருத்தமளிக்கிறது. பெரிய போட்டிகளில் விளையாடும்போது ஒவ்வொரு அணியும் பெரிதாக சாதிக்க விரும்புகிறது, துரதிர்ஷ்டவசமாக, அது எங்களுக்கு நடக்கவில்லை. வலுவான பாகிஸ்தானிடம் நாங்கள் ஆட்டமிழந்தோம். எனவே இப்போது அவர்களுக்கு எதிராக மீண்டும் ஒருமுறை விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

    பிற கருத்துக்களுக்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அது உண்மையில் ஒரு வீரரைப் பாதிக்காது, குறிப்பாக விராட் கோலி போன்ற உலகத் தரம் வாய்ந்த வீரர் வெளியில் இருந்து வரும் கருத்தால் பாதிக்கப் படமாட்டார்.

    அவருக்கு ஒரு சிறிய இடைவெளி கிடைத்தது. அவர் தனது விளையாட்டில் கவனம் செலுத்துகிறார். நான் காயமடைந்து 2 மாதங்கள் வீட்டில் இருந்தபோது, ​அவரை (விராட் கோலியை ) டிவியில் பார்த்துக் கொண்டிருந்தேன், அவர் பார்மில் இல்லை என்று நான் உணரவில்லை. இவ்வாறு கே.எல்.ராகுல் கூறினார்.

    • ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதமாக இருந்தது.
    • இந்திய பந்து வீச்சாளர்கள் சரியான முறையில் பந்து வீசினார்கள்.

    ஹராரே: 

    ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அந்நாட்டின் ஹராரே நகரில் நடைபெற்ற முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.

    இந்திய அணியின் வெற்றிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் கே.எல்.ராகுல், ஸ்விங் மற்றும் வேகப் பந்து வீச்சுக்கு சாதமாக ஆடுகளம் இருந்தது என்றார். இந்திய பந்து வீச்சாளர்கள் சரியான முறையில் பந்து வீசியதை பார்க்க சிறப்பாக இருந்தது. ஒவ்வொரு போட்டியிலும் விக்கெட்டுகளை வீழ்த்துவது முக்கியமானது என்று அவர் தெரிவித்தார்.

    நாங்கள் நிறைய கிரிக்கெட் விளையாடுகிறோம், காயங்கள் அதன் ஒரு பகுதியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். நான் களத்தில் இருப்பதால் மகிழ்ச்சியாக இருக்கிறேன். விளையாட்டிலிருந்து விலகி இருப்பது கடினம் என்றும்  அவர் கூறினார். நாங்கள் இந்திய டிரஸ்ஸிங் ரூமுக்கு மீண்டும் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது, நாங்கள் தொடர்ந்து விளையாட விரும்புகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

    • சிகிச்சை முடிந்து அவர் ஓய்வு எடுப்பார் என்றும், அதன் பிறகும் அவர் தேசிய கிரிக்கெட் அகாடமி சென்று உடல்தகுதியை நிரூபிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • கே.எல்.ராகுலுக்கு பதில் மயங்க் அகர்வால் அணியில் இடம்பெறுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

    மும்பை:

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்காக இந்திய அணியின் கேப்டனாக முதலில் நியமிக்கப்பட்ட கே.எல்.ராகுல் இடுப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக வெளியேறினார். இதை தொடர்ந்து டி20 தொடரின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டார்.

    இந்நிலையில் காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் ராகுல் மேல் சிகிச்சைக்காக ஜெர்மனி செல்லவுள்ளார். இதையடுத்து அவர் ஜூலை 1 முதல் தொடங்கவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிகிச்சை முடிந்து அவர் ஓய்வு எடுப்பார் என்றும், அதன் பிறகும் அவர் தேசிய கிரிக்கெட் அகாடமி சென்று உடல்தகுதியை நிரூபிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இங்கிலாந்து தொடரில் அவர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்ட நிலையில், கே.எல். ராகுலுக்கு பதில் புதிய துணைக் கேப்டன் நியமிக்கப்படுவார் என கூறப்படுகிறது. மேலும் கே.எல்.ராகுலுக்கு மாற்று வீரராக மயங்க் அகர்வால் அணியில் இடம்பெறுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

    2022, 2021, 2020, 2018 ஆகிய ஆண்டுகளில் கே.எல். ராகுல் 600 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.
    மும்பை:

    நடைபெற்று வரும் 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் எலிமினேட்டர் சுற்றில் கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ ஜெயண்டஸ் அணி, டூ பிளஸிஸ் தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் மோதியது. 

    இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி ரஜத் படிதாரின் அதிரடி சதத்தால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 207 ரன்கள் குவித்தது. 208 ரன்கள் இமாலய இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வி அடைந்தது. 

    அணியின் வெற்றிக்காக போராடிய கேப்டன் கே எல் ராகுல் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் லக்னோ அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. இருப்பினும் நேற்றைய போட்டியில் 79 ரன்கள் குவித்ததன் மூலம் ராகுல் இந்த சீசனில் 600 ரன்களை கடந்துள்ளார். 15 போட்டிகளில் விளையாடிய அவர் 616 ரன்கள் குவித்துள்ளார். 

    இதன் மூலம் ஐபிஎல் தொடரில் 4 சீசன்களில் 600 ரன்களுக்கு மேல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதற்கு முன் 2021-ஆம் ஆண்டில் 626 ரன்கள், 2020-ஆம் ஆண்டில் 670 ரன்கள் மற்றும் 2018-ஆம் ஆண்டில் 659 ரன்களை கே.எல்.ராகுல் எடுத்துள்ளார். இடையில் 2019-ஆம் ஆண்டும் மட்டும் 593 ரன்கள் எடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் 600 ரன்களை தாண்டும் வாய்ப்பை நழுவ விட்டார்.

    இவருக்கு அடுத்தபடியாக பெங்களூரு அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெயில் 3 முறை 600 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார்.
    ×