search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    அப்படியென்றால் கே.எல்.ராகுலை நீக்க வேண்டுமா..?  பத்திரிகையாளரின் வாயடைத்த சூர்யகுமார் யாதவ்
    X

    அப்படியென்றால் கே.எல்.ராகுலை நீக்க வேண்டுமா..? பத்திரிகையாளரின் வாயடைத்த சூர்யகுமார் யாதவ்

    • ஆசிய கோப்பை தொடரில் கே.எல்.ராகுல் அதிரடியாக ஆடாததால் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
    • சூழ்நிலைக்கு ஏற்ப எந்த இடத்திலும் பேட்டிங் செய்ய தயாராக இருப்பதாக சூர்யகுமார் யாதவ் தகவல்

    துபாய்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி நேற்று ஹாங்காங் அணியை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது. இந்த போட்டியில் ஆதிக்கம் செலுத்திய சூர்யகுமார் யாதவ், 26 பந்துகளில் 6 பவுண்டரி, 6 சிக்சருடன் 68 ரன்கள் விளாசினார். துவக்க வீரர் கே.எல்.ராகுல் வழக்கத்திற்கு மாறாக மெதுவாக ஆடிய நிலையில், சூர்யகுமாரின் அதிரடி, அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது.

    பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கே.எல்.ராகுல் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். ஹாங்காங் அணிக்கு எதிராக 39 பந்துகளில் 36 ரன்கள் அடித்தார். இதனால் அவர் பல விமர்சனங்களை எதிர்கொண்டார். உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்தியா டி20 போட்டிகளில் அச்சமின்றி ஆக்ரோஷமாக விளையாடி தனது பலத்தை நிரூபிக்க முயற்சிக்கும் நிலையில், கே.எல்.ராகுலின் அணுகுமுறை அதற்கு முரணாக இருப்பதாக கருத்துகள் வலம்வந்தன.

    போட்டி முடிந்தபின்னர் செய்தியாளர் சந்திப்பின்போது சூர்யகுமாரின் பேட்டிங் வரிசை குறித்து ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதாவது, டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக, சோதனை முயற்சியின் ஒரு பகுதியாக கேப்டன் ரோஹித் சர்மாவுடன் நீங்கள் துவக்க வீரராக களமிறங்குவீர்களா? என்று அந்த செய்தியாளர் கேட்டார்.

    அப்போது குறுக்கிட்ட சூர்யகுமார் யாதவ், 'அப்படியென்றால் கே.எல்.ராகுலை நீக்க வேண்டும் என விரும்புகிறீர்களா?' என சிரித்துக்கொண்டே எதிர்கேள்வி கேட்டு மடக்கினார்.

    தொடர்ந்து பேசிய சூர்யகுமார் யாதவ், 'அவரும் (ராகுல்) காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பி உள்ளார். அவருக்கும் அவகாசம் தேவை. எங்களுக்கு இப்போது சிறிது அவகாசம் கிடைத்திருக்கிறது. நான் முன்பே கூறியதுபோல், நான் சூழ்நிலைக்கு ஏற்ப எந்த இடத்திலும் பேட்டிங் செய்ய தயாராக இருக்கிறேன். இதை பயிற்சியாளர் மற்றும் கேப்டனிடம் தெரிவித்துள்ளேன். நான் எந்த இடத்தில் விளையாட வேண்டும் என்பதை அவர்கள்தான் உறுதி செய்வார்கள்' என்றார்.

    Next Story
    ×