search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குளித்து மகிழ"

    • வாழப்பாடி அருகே உள்ள கரியகோவில் தடுப்பணை தொடர் மழையால் நிரம்பியது.
    • பலரும் அங்கு குளித்து மகிழ வருவதால் அந்த பகுதி சுற்றுலா தலமாக மாறியுள்ளது

    சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையம் வட்டம், கல்வராயன் மலைப்பகுதியில் இருந்து வழிந்தோடி வரும் கரியக்கோயில் ஆற்றின் குறுக்கே, பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில், 52.49 அடி உயரத்தில், 190 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில், 188.76 ஏக்கர் பரப்பளவில் கரியக்கோயில் அணை அமைந்துள்ளது.

    இந்த அணையால், பாப்பநாயக்கன்பட்டி, தும்பல், அய்யம்பேட்டை, இடையப்பட்டி, கத்திரிப்பட்டி ஆகிய கிராமங்களில் 3,600 ஏக்கர் விளைநிலங்கள் புதிய ஆயக்கட்டு வாய்க்கால் பாசனம் பெறுகின்றன.

    கரியக்கோயில் ஆற்றின் குறுக்கே பனைமடல், ஏ.குமாரபாளையம், கல்யாணகிரி, கொட்டவாடி கிராமங்களில் பாசன தடுப்பணைகளும், கல்யாணகிரி, கல்லேரிப்பட்டி, ஏத்தாப்பூர் அபிநவம், புத்திரகவுண்டன் பாளையம் கிராமங்களில் ஏரிகளும் அமைந்துள்ளன.

    கல்வராயன் மலைப்பகுதியில் பெய்த மழையால், கடந்த அக்டோபர் 25–ந் தேதி கரியகோயில் அணை நிரம்பியது. அணையின் பாதுகாப்பு கருதி, 50.52 அடியில் 175 மில்லியன் கனஅடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு உள்ளது. அணைக்கு தொடர்ந்து வரும் தண்ணீர் முழுவதும் கரியக்கோயில் ஆற்றில் திறக்கப்பட்டு உள்ளது. இதனால், கடந்த 25 நாட்களுக்கு மேலாக கரியக்கோயில் ஆற்றில், இரு கரையையும் தொட்டபடி வெள்ளம் பாய்ந்து செல்கிறது.

    கடந்த சில தினங்களாக மழையில்லாததால் ஆற்றில் தெளிந்த நீர் வழிந்தோடிச் செல்கிறது. ஓராண்டுக்கு பிறகு கரியக்கோயில் ஆற்றில் தெளிந்த நீர் செல்வதால், ஆற்றில் ஆழம் குறைந்த பகுதிகளிலும், ஏ.குமாரபாளையம், கல்யாணகிரி, கொட்டவாடி தடுப்பணைகளிலும் இளைஞர்கள் குதித்து ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.

    குறிப்பாக, பச்சை பசேலென வயல்வெளிகளுக்கு இடையே ரம்மியமான இயற்கைச் சூழலில் அமைந்துள்ள ஏ.குமாரபாளையம் தடுப்பணையிலும், ஆற்றிலும், பல்வேறு பகுதியைச் சேர்ந்த இளைஞர்களும், இளம்பெண்களும் வந்து நீராடி மகிழ்ந்து செல்கின்றனர். இதனால் இப்பகுதி சுற்றுலாத் தலத்தை போல காட்சியளிக்கிறது.

    ×