search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குரங்கணி காட்டுத்தீ"

    • குரங்கணி மலைப்பகுதியில் தற்போது வறண்ட சீதோஷ்ணம் நிலவி வருகிறது.
    • கொடைக்கானல் மேல்பள்ளம், பி.எல்.செட் பகுதியிலும் 2 வது நாளாக காட்டுத்தீ பற்றி எரிகிறது.

    கொடைக்கானல்:

    தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில் தற்போது வறண்ட சீதோஷ்ணம் நிலவி வருகிறது. இதனால் இப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. குரங்கணி மலைப்பகுதியில் புலியூத்து முதல் குரங்கணி மலைத்தொடரில் ஹெவிகுண்டு என்னும் வனப்பகுதியில் 6 கி.மீ தூரத்துக்கு காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது.

    இதனால் 20க்கும் மேற்பட்ட வனத்துறை பணியாளர்கள் காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தபோதும் காற்றின் வேகம் அதிகரிப்பாலும், போதிய தீயணைப்பு உபகரணங்கள் இல்லாததாலும் தீயை அணைக்க முடியாமல் திணறி வருகின்றனர். இதனால் அரியவகை மூலிகைகள் மற்றும் மரங்கள் எரிந்து சேதமாகி வருகிறது.

    பற்றி எரியும் காட்டுத்தீயால் இப்பகுதியில் உள்ள மா, இலவம் மரங்கள், பாக்கு மரங்கள் போன்றவை பாதிக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கோடை காலங்களில் இது போல் வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீ இப்பகுதி மக்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இதன் அருகே உள்ள கொலுக்கு மலையில் கடந்த 3 வருடத்துக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.

    அது போன்ற சூழல் ஏற்படுவதற்குள் தீயை அணைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக காட்டுத்தீ பரவும் காலங்களில் நவீன உபகரணங்கள் அல்லது ஹெலிகாப்டர் உதவியுடன் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதே போல் கொடைக்கானல் மேல்பள்ளம், பி.எல்.செட் பகுதியிலும் 2 வது நாளாக காட்டுத்தீ பற்றி எரிகிறது. இதனால் இங்குள்ள காட்டெருமைகள், காட்டுப்பன்றிகள் போன்ற வன விலங்குகள் இடம்பெயர்ந்து அருகில் உள்ள பெரும்பள்ளம், வடகவுஞ்சி, பேத்துப்பாறை, வெள்ளப்பாறை போன்ற பகுதிகளுக்கு செல்கின்றன. வடகவுஞ்சி வனப்பகுதியில் பரவிய காட்டுத்தீயை வனத்துறையினர் பழங்குடியினர், வேட்டை தடுப்பு காவலர்கள் உதவியுடன் கட்டுப்படுத்தினர். வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதாலும் வறண்ட பகுதியில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதாலும் காட்டுத்தீ தொடர்ந்து வருகிறது. எனவே தீயை கட்டுபடுத்தும் முயற்சியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    ×