search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோவில்"

    • குன்றத்தூரில் நவகிரக ராகு தலங்களில் ஒன்றாக காமாட்சி அம்மன் உடனுறை திருநாகேஸ்வரர் கோவில் உள்ளது.
    • மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தேரோட்டம் நடைபெற்றதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் பங்கேற்றனர்.

    பூந்தமல்லி:

    தெய்வப்புலவர் சேக்கிழார் பிறந்த ஊரான குன்றத்தூரில் நவகிரக ராகு தலங்களில் ஒன்றாக காமாட்சி அம்மன் உடனுறை திருநாகேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரமோற்சவ விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான கோவிலின் பிரமோற்சவ விழா கடந்த மாதம் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது. இதனை தொடர்ந்து தினந்தோறும் சூரிய பிரபை, தங்க முலாம் அதிகார நந்தி சேவை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்று வந்தது.

    பிரமோற்சவ விழாவின் 7-வது நாளான இன்று தேரோட்டம் மிகவும் விமரிசையாக நடைபெற்றது. கோவில் அருகே அலங்கரித்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திருத்தேரை அமைச்சர்கள் சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். இதில் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    குன்றத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷத்துடன் தேரை இழுத்து சென்றனர். பஜார் தெரு, பெரிய தெரு, துலுக்க தெரு என நான்கு மாட வீதிகள் வழியாக தேர் இழுத்துச் செல்லப்பட்டது. பின்னர் கோவில் அருகே தேர் நிறுத்தப்பட்டது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் ஆங்காங்கே கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு குளிர்பானங்கள், மோர் ஆகியவற்றை பொதுமக்கள் வழங்கினர். தேரோட்டத்தையொட்டி அப்பகுதியில் போக்குவரத்து மற்றும் செய்யப்பட்டு இருந்தது.

    கடந்த 2019-ம் ஆண்டு இந்த கோவிலில் கடைசியாக தேரோட்டம் நடைபெற்றது. கொரோனா ஊரடங்கு, கடந்த ஆண்டு கும்பாபிஷேக விழா என்பதால் கடந்த மூன்று ஆண்டுகளாக தேர் திருவிழா நடைபெறாமல் இருந்தது. தற்போது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தேரோட்டம் நடைபெற்றதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் பங்கேற்றனர்.

    ×