search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிமங்கலம்"

    குடிமங்கலம் பகுதியில் புதிதாக நடவு செய்யப்பட்டுள்ள தென்னங்கன்றுகள் களைகளின் ஆக்கிரமிப்பால் பலவீனமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
    குடிமங்கலம்:

    உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதிகளில் தக்காளி, பீட்ரூட், சின்னவெங்காயம், காய்கறிப்பயிர்கள், தென்னை விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலையில் விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பது சிரமமாக உள்ளது.  

    களைகளை அகற்றுவதற்கு கூலி ஆட்கள் கிடைக்காததால் களைக்கொல்லிகளை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது அதிலும் விரைவாக கிளைத்து வளர்ந்து பிரதான பயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பார்த்தீனியம் போன்ற களைகளை கட்டுப்படுத்துவது சவாலான விஷயமாகவே உள்ளது. 

    எனவே சில விவசாயிகள் விரைவான பலன் வேண்டி விசைத்தெளிப்பான் மூலம் வீரியமிக்க ரசாயன களைக்கொல்லிகளை பயன்படுத்தி களைகளைக் கட்டுப்படுத்துகின்றனர். இதனால் மண்வளம் பாதிக்கப்படுவதுடன் நிலத்தடி நீர் மாசுபடும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். 

    குடிமங்கலம் பகுதியில் புதிதாக நடவு செய்யப்பட்டுள்ள தென்னங்கன்றுகள் களைகளின் ஆக்கிரமிப்பால் பலவீனமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தென்னங்கன்றுகளை பிளாஸ்டிக் சாக்குகளால் மூடிவிட்டு களைக்கொல்லிகளை தெளிக்கின்றனர். 

    எனவே களைக்கொல்லிகளால் மண்வளம் பாதிக்கப்படாமல் இருப்பதை தடுக்க எளிய முறையில் களைகளை கட்டுப்படுத்தும் வகையில் புதிய யுத்திகளை கண்டுபிடிக்க வேளாண் ஆராய்ச்சியாளர்களை அரசு ஊக்கப்படுத்த வேண்டும்.

    அத்துடன் கூலித் தொழிலாளர்கள் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
    சணப்பு பயிரின் ஆணி வேர்கள் மண்ணில் ஆழத்துக்கு ஊடுருவி நீர் மற்றும் காற்று எளிதில் மண்ணில் புகும்படி செய்கிறது.
    குடிமங்கலம்:

    குடிமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. தென்னை விவசாயம் அதிகளவில் நடைபெற்று வரும் நிலையில் தக்காளி, வெண்டை, கத்தரிக்காய், மிளகாய் உள்ளிட்ட காய்கறி பயிர்களும் கிணற்று பாசனம் மூலம் சாகுபடி செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் விவசாயிகள் மண்ணை வளப்படுத்துவதற்காக பயிர் சாகுபடிக்கு முன் சணப்பை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். சணப்பை காற்றில் உள்ள தழைச்சத்தை தனது வேர் முடிச்சுகளில் உள்ள நுண்ணுயிர்கள் மூலம் சேமிக்கும் தன்மை கொண்டது. 

    விதைத்த 45 நாட்களில் சுமார் 2 மீட்டர் உயரத்திற்கு வேகமாக வளர்ந்து ஏக்கருக்கு 4 முதல் 5 டன் தழை உரத்தையும் சுமார் 15 கிலோ தழைச்சத்து தரும் தன்மையும் கொண்டது. சணப்பு பயிரின் ஆணி வேர்கள் மண்ணில் ஆழத்துக்கு ஊடுருவி நீர் மற்றும் காற்று எளிதில் மண்ணில் புகும்படி செய்கிறது.

    இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறியதாவது:

    தென்னை மரங்களை சுற்றி இரண்டு மீட்டர் தூரத்திற்கு சணப்பை சாகுபடி செய்து வருகிறோம். இதன் காரணமாக தென்னந்தோப்புகளில் மண் பிடிமானம் அதிகமாகி மேல் மண் அரிப்பு தடுக்கப்படுகிறது. சணப்பை மிகவும் வேகமாக வளரும் என்பதால் தென்னை மரங்களை சுற்றி வளரும் களை வளர்ச்சியை கட்டுப்படுத்தி மகசூலை அதிகரிக்க செய்கிறது. 

    சணப்பை மற்ற பயிருடன் உரத்திற்காக போட்டியிடாது வளரும் தன்மை கொண்டது. அனைத்து வகை மண்ணிலும் நன்கு வளரக் கூடியது. இதனால் மண்ணை வளப்படுத்துவதற்காக சணப்பை சாகுபடி செய்கிறோம். மேலும் விவசாய நிலங்களிலும் சணப்பை சாகுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
    குடிமங்கலம் ஒன்றியத்தின் மேற்குப்பகுதியில் துவங்கும் பல்வேறு மழை நீர் ஓடைகள் உப்பாறு ஓடையுடன் இணைகின்றன.
    குடிமங்கலம்:

    கோவை சுற்றுப்பகுதியில் பெய்யும் மழையால் நொய்யல் ஆற்று நீரை ஆதாரமாக கொண்டுள்ள திருப்பூர் சுற்றுப்பகுதி குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. கோவை மாவட்ட எல்லையாக உள்ள செந்தேவிபாளையம் அணைக்கட்டில் இருந்து நீர் ஆதாரம் பெறும் சாமளாபுரம் குளத்துக்கு ராஜவாய்க்கால் மூலம் நீர் வந்து குளம் நிரம்பியுள்ளது. 

    இந்த குளம் நிரம்பிய நிலையில் வெளியேறிய உபரி நீர், ராஜ வாய்க்கால் வழியாக பள்ளபாளையம் குளத்துக்கு செல்கிறது. தற்போது இந்த குளமும் நிரம்பி உபரி நீர் வெளியேறி மீண்டும் நொய்யலுக்கு செல்கிறது.

    நொய்யல் ஆற்றில் மங்கலம் தடுப்பணையில் இருந்து நீர் வரத்து பெறும் சின்னாண்டிபாளையம் குளமும் தற்போது நிரம்பியுள்ளது. திருப்பூர் அடுத்த மாணிக்காபுரம் குளத்துக்கு காசிபாளையம் அணைக்கட்டில் இருந்து வாய்க்கால் மூலம் நீர் செல்கிறது. 

    கடந்த சில நாட்கள் முன் இந்த வாய்க்காலில் நீர் திறக்கப்பட்ட போது வாய்க்கால் பெருமளவு ஆக்கிரமித்து குவிக்கப்பட்டிருந்த குப்பை கழிவுகளால் நீர் செல்வது தடைப்பட்டது. 

    இதில் தற்போது நீர் செல்வதால் இக்குளத்துக்கு தண்ணீர் செல்ல தொடங்கியுள்ளது. நொய்யல் ஆற்றில் அணைமேடு பகுதியில் உள்ள அணைக்கட்டிலிருந்து மண்ணரை குளத்துக்கு நீர் கொண்டு செல்லும் வாய்க்கால் உள்ளது. தற்போது இந்த வாய்க்காலில் கட்டுமான பணி நடைபெறுகிறது. 

    இதனால் இந்த குளத்துக்கு தற்போது நீர் செல்வது தடைபட்டுள்ளது. முன்னர் குளத்தில் தேங்கிய நீர் தற்போது குளத்தில் பாதியளவுக்கு மேல் தேங்கி நிற்கிறது. அவிநாசி வழியாக வரும் நல்லாற்றில் இருந்து நஞ்சராயன்குளம் நீர் ஆதாரம் பெறுகிறது. 

    அவிநாசி சுற்றுப்பகுதியில் பெய்த மழை காரணமாக தற்போது இந்த குளத்துக்கு நீர் வந்து தற்போது குளம் முற்றிலும் நிரம்பி நிற்கிறது. உபரி நீர் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஷட்டர் வழியாக வெளியேற்றப்படுகிறது. திருப்பூரை சுற்றியுள்ள குளங்கள் மழையால் நிரம்பி வரும் நிலையில் நிலத்தடி நீர் ஆதாரம் பெருகும். 

    விவசாய கிணறுகள் மற்றும் பாசனப் பகுதிகளுக்கும் நீர் ஆதாரம் அதிகரித்துள்ளது. இதனால் பல தரப்பினரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் வட்டாரத்தில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. 

    மழைக்காலங்களில் மட்டும் நீரோட்டம் இருக்கும் உப்பாறு ஓடை மட்டுமே அப்பகுதியின் நிலத்தடி நீராதாரமாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் போதிய மழை இல்லாதது  உள்ளிட்ட காரணங்களால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து நீண்ட கால பயிரான தென்னை மரங்களை காப்பாற்ற முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.

    மேலும் நிலத்தடி நீரும் உவர்ப்பாக இருப்பதால் காய்கறி சாகுபடி மேற்கொள்ள முடிவதில்லை. இதனால் பல ஆயிரம் ஏக்கரில் விவசாய சாகுபடி கேள்விக்குறியாக இருந்தது. ஆயிரம் அடி வரை போர்வெல் அமைத்தும் போதிய தண்ணீர் கிடைக்காத நிலை தற்போது மாறி வருகிறது.

    குடிமங்கலம் ஒன்றியத்தின் மேற்குப்பகுதியில் துவங்கும் பல்வேறு மழை நீர் ஓடைகள் உப்பாறு ஓடையுடன் இணைகின்றன. இந்த மழை நீர் ஓடைகள் போதிய பராமரிப்பின்றி முட்காடாக மாறியிருந்தன. பருவமழை காலத்தில் கிடைக்கும் தண்ணீரை தேக்கி வைக்கவும் வழியில்லாத சூழல் இருந்தது.

    இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக  உப்பாறு உட்பட மழை நீர் ஓடைகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டி தண்ணீரை தேக்கி வைத்து நிலத்தடி நீரை மேம்படுத்த அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதன்படி அனிக்கடவு, சிந்திலுப்பு உட்பட பல்வேறு இடங்களில் ஓடையின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பி.ஏ.பி., பாசனத்தில் திருமூர்த்தி அணையிலிருந்து 5 சுற்றுகளாக தண்ணீர் வழங்கப்படுகிறது.

    மேலும் வடகிழக்கு பருவமழையும் தற்போது குடிமங்கலம் வட்டாரத்துக்கு கை கொடுத்துள்ளது. நடப்பு சீசனில் பெய்து வரும் தொடர் மழையால் ஓடைகளுக்கு நீர்வரத்து கிடைத்துள்ளது. உப்பாறு மற்றும் இதர ஓடைகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் நிரம்பியுள்ளன.

    தொடர் மழையால் தடுப்பணைகள் நிரம்பி நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். குடிமங்கலம் ஒன்றியம் அனிக்கடவு சுற்றுப்பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட மழைநீர் ஓடைகள் அமைந்துள்ளன.

    இதில் அதிக நீர் வரத்துள்ள விருகல்பட்டி முதல் அனிக்கடவு வழியாக சிந்திலுப்பு செல்லும் ஓடை தேர்வு செய்யப்பட்டு 6 தடுப்பணைகள் கட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய்து விரைவில் பணிகள் துவங்க உள்ளது. இத்தடுப்பணைகள் கட்டப்பட்டால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதால் அப்பகுதி விவசாயிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
    கால்நடைகளுக்கு ஊசி போடுதல் உள்ளிட்ட சிகிச்சையின்போது அசையாமல் இருப்பதற்காக ஒருவர் பிடித்துக் கொள்ள வேண்டும்.
    குடிமங்கலம்:

    உடுமலை சுற்றுப்பகுதியில் 62 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் உள்ளன. 

    இதற்கென உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றியங்களில் கால்நடை மருத்துவமனைகள், கால்நடை மருந்தகங்கள் மற்றும் கிளை கால்நடை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    அதன்படி ஒவ்வொரு மருத்துவமனை மற்றும் கிளை நிலையங்களுக்கு ஏற்றாற்போல் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாடுகள் மற்றும் ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றன. இதில் மாடுகளுக்கு சிகிச்சையளிப்பது கால்நடை டாக்டர்களுக்கு சவாலாக உள்ளது. 

    ஏனெனில் கால்நடைகளுக்கு ஊசி போடுதல் உள்ளிட்ட சிகிச்சையின்போது அசையாமல் இருப்பதற்காக ஒருவர் பிடித்துக் கொள்ள வேண்டும். இருந்தும் சிகிச்சையின் போது கால்நடைகள் அசைவதால் டாக்டர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது.

    இப்பிரச்சினைக்கு தீர்வு காண நவீன உபகரணங்கள் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கால்நடை டாக்டர்கள் கூறியதாவது:-

    தற்போது, கோமாரி நோய் பரவுவதை தடுக்க தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் கால்நடைகளை அசையாமல் பிடித்தும் கொள்ளும் நவீன உபகரணங்கள் கிடையாது. 

    இதனால் ஊசி செலுத்துவதற்கு நேரம் விரயமாகிறது. பிற மாவட்டங்களில் அவற்றை அசையாமல் பிடித்துக்கொள்ளும் வகையில் நவீன உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

    அதேபோல் திருப்பூர் மாவட்டத்திலும் நவீன உபகரணங்கள் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 
    கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த தொலைநோக்கு அடிப்படையில், நொச்சி செடிகள் வழங்கும் திட்டம் ஊரக வளர்ச்சித்துறையால் அறிமுகப்படுத்தப்பட்டது.
    குடிமங்கலம்:

    உடுமலை சுற்றுப்பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. தொடர்மழையால் கிராம குடியிருப்புகளில் மழை நீர் தேங்கியுள்ளது. நீர் நிலைகளுக்கும் வரத்து கிடைத்துள்ளது. விளைநிலங்கள் மற்றும் ரோட்டோரங்களில் பசுமை திரும்பியுள்ள நிலையில் கொசு உற்பத்தியும் அதிகரித்துள்ளது. 

    டெங்கு காய்ச்சல் தடுப்புக்காக மேற்கொள்ளப்பட்ட பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ள நிலையில் நன்னீர் மற்றும் கழிவு நீரில் உற்பத்தியாகும் கொசுக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
    வழக்கமாக பருவமழை சீசனில் காய்ச்சல் பரவும் வாய்ப்புள்ளது.  

    கொசு உற்பத்தியும் அதிகரித்துள்ளதால் பொதுமக்களுக்கு நோய் பரவல் குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது. கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த தொலைநோக்கு அடிப்படையில், நொச்சி செடிகள் வழங்கும் திட்டம் ஊரக வளர்ச்சித்துறையால் அறிமுகப்படுத்தப்பட்டது. 

    இத்திட்டத்தின் கீழ் நொச்சி செடிகள் உற்பத்தி செய்து கிராமங்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. தற்போது, உடுமலை, குடிமங்கலம் ஒன்றியங்களில் திட்டம் செயல்பாட்டில் இல்லை. இதே போல் குறிப்பிட்ட இடைவெளியில் கிராமங்களில் கொசு மருந்து தெளிக்கும் பணியையும் ஊராட்சி நிர்வாகத்தினர் கண்டு கொள்வதில்லை. 

    இதனால் கிராமங்களில் கொசுத் தொல்லை அதிகரித்து மக்கள் திண்டாடி வருகின்றனர். எனவே சுகாதாரத்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கொசு ஒழிப்பு பணிகளை மீண்டும் தீவிரப்படுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    ×