search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கால்நடை நோய்கள்"

    • உதாரணமாக மழை காலங்களில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்புவதை தவிர்க்கலாம்.
    • கொட்டகையை சுற்றி மழை நீர் தேங்காமல் வடிகால் வசதிகளை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.

     பல்லடம்:

    பல்லடம் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. பல்லடம் பகுதி விவசாயிகள் இயற்கை முறையில் பயிர் சாகுபடி செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கால்நடைகளுக்கு அம்மை நோய் தாக்கியுள்ளது.

    எனவே கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள் கால்நடைகளை பராமரித்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசு கால்நடைதுறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இது குறித்து அரசு கால்நடை மருத்துவர் கூறியதாவது:-

    கால்நடைகளை வளர்ப்போர் மழை காலங்களில் பராமரிப்பு முறைகளில் சில மாற்றங்களை செய்து சிறப்பு பராமரிப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டும். உதாரணமாக மழை காலங்களில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்புவதை தவிர்க்கலாம். அவைகளை ஆட்டு பட்டியிலேயே வைத்து உணவாக இலை, தழைகள், காய்ந்த சோளதட்டு உள்ளிட்டவற்றை கொடுக்கலாம். அனைத்து ஆடுகளுக்கும் பட்டியிலேயே வைத்து தீவனம் வழங்க முடியாத சூழ்நிலையில் குறைந்த பட்சம் சினை ஏற்பட்டுள்ள ஆடுகளுக்கும், பாலூட்டும் தாய் ஆடுகளுக்கும் மட்டும் தீவனம் தருவது அவசியம். மழைக்காலம் என்பதால் ஆடுகளின் குளம்புகளில் சேற்றுப்புண் ஏற்படலாம். இதனை தவிர்க்க ஆடுகள் பட்டிக்குள் நுழையும் பகுதியில் ஆடுகளின் குளம்புகள் நனையும்படி பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசலை நிரப்பி வைத்திட வேண்டும்.

    ஆடுகள் தங்கும் ஆட்டுபட்டியை சுற்றி மழை நீர் தேங்கினால் ஈக்கள் மற்றும் கொசுக்கள்உருவாக வாய்ப்புகள் ஏற்படும். இவையே ஆடுகளில் நீல நாக்கு நோய் ஏறபடுத்தும் கிருமிகளை பரப்பும் இடைநிலை காரணிகளாகும். மாடுகளை போலவே ஆடுகளுக்கும் இப்பருவத்தில் குடற்புழு நீக்க சிகிச்சை மருத்துவரின் ஆலோசனையின்பேரில் செய்ய வேண்டும்.மாடுகளை பண்ணை அளவில் வைத்து வளர்ப்போர் மாட்டு கொட்டகைக்குள் மழை நீர் புகாதபடி பார்த்து கொள்ள வேண்டும். கொட்டகையை சுற்றி மழை நீர் தேங்காமல் வடிகால் வசதிகளை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.

    சேறும் சகதியுமாக கொட்டகைக்குள் இருந்தால் மாடுகளின் உடல் நலத்தை பாதிப்பதோடு மாட்டின் பாலின் தரமும் குறைய வாய்ப்புகள் உள்ளது. மேலும் கறவை மாடுகளுக்கு மழைக் காலங்களில் மடி வீக்க நோய் தாக்கும் சூழ்நிலைகள் இருப்பதால் மாடுகளிலிருந்து பால் கறப்பதற்கு முன்னர் மாட்டின் மடியையும், காம்புகளையும் பொட்டாசியம் பர்மாங்கனேட் கரைசல் கொண்டு கழுவி பின்னர் பால் கறக்க வேண்டும். பொட்டாசியம் பர்மாங்கனேட் மருந்து குறைந்த விலையில் கிடைக்கிறது. மாட்டின் கன்றுகளுக்கு கழிச்சல், ரத்தக் கழிச்சல் போன்ற நோய்களிலிருந்து பாதுகாக்க கால்நடை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மருந்துகள் தர வேண்டும். மாடுகளின் தீவனப் பொருட்களான வைக்கோல், கலப்பு தீவனங்கள் போன்றவைகளை மழை நீரிலிருந்து நனையாமல் பாதுகாப்பாக வைக்க வேண்டும். மழைநீரில் இவை நனைவதால் பூஞ்சக்காளான் நச்சு ஏற்படலாம். எனவே பருவகாலங்களில் இதுபோன்ற சிறப்பு பராமரிப்பு முறைகளை மேற்கொண்டு கால்நடைகளை பராமரித்து அம்மை நோய் தடுப்பு நடவடிக்கைகளில் இருந்து அவைகளை பாதுகாத்து கொள்ளலாம் .இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×