search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காற்றாடி திருவிழா"

    • நமது நாட்டின் தேசியக் கொடியின் மூவர்ண நிறத்திலான பலூன் பறக்கவிடப்பட்டது.
    • 3 நாட்கள் நடத்தப்படும் காற்றாடி திருவிழா, இன்றும், நாளையும் சங்குத்துறை கடற்கரையில் நடக்கிறது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட நிர்வாகமும் மாவட்ட சுற்றுலா துறையும் இணைந்து சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கன்னியாகுமரியில் முதல் முறையாக காற்றாடி திருவிழாவை நடத்தின. சூரிய அஸ்தமன காட்சி முனைய பகுதியில் நடந்த இந்த நிகழ்ச்சியை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

    இந்த காற்றாடி திருவிழாவில் தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் உள்பட பல்வேறு வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் வட மாநிலங்களை சேர்ந்த காற்றாடி இயக்குவர்கள் பல வண்ண காற்றாடிகளை பறக்க விட்டனர். முதலில் வாழ்க தமிழ் என்ற வாசகத்துடனான காற்றாடி பறக்க விடப்பட்டது. அதன்பிறகு நமது நாட்டின் தேசியக் கொடியின் மூவர்ண நிறத்திலான பலூன் பறக்கவிடப்பட்டது. தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட காற்றாடிகள் பறக்க விடப்பட்டு வானத்தில் வர்ணஜாலங்கள் காட்டின.

    புலி உருவங்களுடன் கூடிய காற்றாடி, கார்ட்டூன் தொடர்களில் வரும் ஸ்பான்ஜ் பாப் உருவ காற்றாடி, சோட்டா பீம், டோலு-போலு, சுட்கி, பாலகணேசா, யானை, அசோக சக்கர வடிவிலான காற்றாடி என பலவித காற்றாடிகள் விண்ணில் பறக்க விடப்பட்டன. இதனை சுற்றுலா பயணிகளும் மாணவ-மாணவிகளும் கண்டு ரசித்தனர்.

    தாய்லாந்து நாட்டை சேர்ந்த பெக்கி என்பவர் தனது குழுவினருடன் தங்கள் நாட்டின் பிரபலமான கார்ட்டூன் பொம்மை உருவ காற்றாடியை பறக்க விட்டனர். அவர் கூறுகையில், கன்னியாகுமரி கடற்கரை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இந்தியாவில் 2-வது முறையாக காற்றாடி திருவிழாவில் பங்கேற்கிறோம் என்றார்.

    குஜராத் மாநிலத்தை சேர்ந்த மேகுல் படக் கூறுகையில், கன்னியாகுமரி மிகவும் அருமையான சுற்றுலா தலம். இந்த காற்றாடி திருவிழா, சுற்றுலா வளர்ச்சிக்கு மிகவும உறுதுணையாக இருக்கும். நான் 2007-ம் ஆண்டு முதல் காற்றாடிகளை பறக்க விட்டு வருகிறேன். இந்தோனேசியாவில் உலக அளவிலான காற்றாடி கண்காட்சியில் நான் காற்றாடி பறக்க விட்டபோது, நமது பிரதமரும், இந்தோனேசியா பிரதமரும் பார்வையிட்டனர் என்றார்.

    கன்னியாகுமரியில் காற்று பலமாக வீசியதால், காற்றாடிகளை கட்டுப்படுத்துவதில் சிரமமான நிலை நிலவியதாக காற்றாடி திருவிழாவின் ஒருங்கிணைப்பாளர் பெனடிக்ட்சா வியோ தெரிவித்தார். உலக அளவிலான காற்றாடி திருவிழா, ஏறத்தாழ 50, 60 இடங்களில் நடக்கிறது. இதில் பிரான்ஸ், இத்தாலி நாடுகளில் நடப்பது தான் பெரிய திருவிழா ஆகும். கன்னியாகுமரியில் முதல் முறையாக காற்றாடி திருவிழா நடைபெற்றுள்ளது. காற்றாடிகள் தயாரிக்க ரூ.1 லட்சத்துக்கு மேல் ஆகிறது என்றும் அவர் கூறினார்.

    3 நாட்கள் நடத்தப்படும் காற்றாடி திருவிழா, இன்றும், நாளையும் சங்குத்துறை கடற்கரையில் நடக்கிறது. மதியம் 2 மணி முதல் இரவு 7 மணி வரை நடக்கிறது.

    தொடக்க விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் பட்டம் பறக்கவிட்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில்:-

    கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சர்வதேச அளவில் காற்றாடி திருவிழா 3 நாட்கள் நடக்கிறது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கன்னியாகுமரி மேம்படுத்தப்பட்டு வருகிறது. விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கும் திருவள்ளுவர் சிலைக்கும் இடையே ரூ.37 கோடி செலவில் கண்ணாடி இழையினால் ஆன கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கப்படுகிறது என்றார்.

    ×