search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலைஞர் நூற்றாண்டு நூலகம்"

    • கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை கடந்த ஜூலை மாதம் 15ம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
    • பள்ளி, கல்லூரிகளில் இருந்தும் மாணவர்கள் இந்த நூலகத்தை பார்வையிடுவதற்காக அழைத்து வரப்படுகின்றனர்.

    மதுரை மாநகரில் புது நத்தம் சாலையில் ரூ.218 கோடியில் 8 தளங்களுடன் அதிநவீன வசதிகள் கொண்ட நூலகத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கடந்த ஜூலை மாதம் 15ம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    இதைத் தொடர்ந்து இந்த நூலகம் செயல்பட தொடங்கியுள்ளது. தினமும் ஏராளமானோர் நூலகத்திற்கு வந்து பார்வையிட்டு செல்கின்றனர். பள்ளி, கல்லூரிகளில் இருந்தும் மாணவர்கள் இந்த நூலகத்தை பார்வையிடுவதற்காக அழைத்து வரப்படுகின்றனர்.

    இந்நிலையில், மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறக்கப்பட்டு இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இதுகுறித்து, "இதுவரை இந்த நூலகத்திற்கு 2 லட்சத்து 41,314 வாககர்கள், மக்கள், மாணவர்கள் வருகை தந்து பயனடைந்துள்ளதாக" பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் வெளியிட்டுள்ளார்.

    • சுற்றுலா செல்வது போல் குடும்பம், குடும்பமாக நூலகத்திற்கு வரத்தொடங்கினர்.
    • முன்னதாக நூலகத்தை பார்வையிட வருகை தரும் வாசகர்களை கவரும் வகையில் இனிப்பு மற்றும் மலர் கொடுத்து வரவேற்றனர்.

    மதுரை:

    மதுரையில் புதுநத்தம் சாலையில் ரூ.216 கோடி மதிப்பீட்டில், 2 லட்சத்து 13 ஆயிரத்து 334 சதுர அடி கட்டப்பட்ட அதிநவீன வசதிகளுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை நேற்று தமிழக முதலமைச்சர் மு.கஸ்டாலின் திறந்து வைத்தார்.

    அப்போது அவர் பேசுகையில், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த இந்த மாமதுரையில் சங்ககால இலக்கியங்களை சாமானியருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் சங்கத் தமிழ் இயற்றிய மாமதுரையில் நூலகம் வைக்காமல் வேறு எங்கு வைக்க முடியும்.

    கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை பொறுத்தவரை குழந்தைகள், மாணவர்கள், போட்டித் தேர்வர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் பயன்பெறக் கூடிய வகையில் ஆறு தளங்கள் மூன்று லட்சம் புத்தகங்களைப் பெற்றிருக்கக்கூடிய இந்த நூலகத்திற்கு அறிவுத் தேடலுடன் நீங்கள் வரும்போது உங்களை அன்போடு வரவேற்க தலைவர் கலைஞரே சிலை வடிவமாக இங்கே காட்சியளித்துக் கொண்டிருக்கிறார் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

    அதனைத் தொடர்ந்து நூலகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. மதுரையில் பொழுது போக்கு இடங்கள் என ஏராளம் இருந்தபோதிலும், விடுமுறை தினமான இன்று அதிக கூட்டம் திரண்டது கலைஞர் நூலகத்திற்குத் தான். சுற்றுலா செல்வது போல் குடும்பம், குடும்பமாக நூலகத்திற்கு வரத்தொடங்கினர். ஆறு தளங்களை கொண்ட நூலகத்தை பொது மக்கள், மாணவ, மாணவிகள் பலரும் ஆர்வத்துடன் வந்து கூட்டம் கூட்டமாக வந்து பார்வையிட்டு வருகின்றனர்

    முன்னதாக நூலகத்தை பார்வையிட வருகை தரும் வாசகர்களை கவரும் வகையில் இனிப்பு மற்றும் மலர் கொடுத்து வரவேற்றனர். "காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது" என்ற வாசகம் வரவேற்பு அறையில் பொறிக்கப்பட் டுள்ளது. தரைத்தளத்தில் உள்ள கலைக்கூடத்தில் மதுரையில் பண்டைய கால வரலாற்றை நினைவுபடுத் தும் வகையில் திருமலை நாயக்கர் மஹால், விளக்குத் தூண், மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு நுழைவு வாயில், வைகை ஆற்றின் தரைப்பாலம், யானைமலை, அமெரிக்கன் கல்லூரி, காந்தி மியூசியம், 1930 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கழுகுப் பார்வை படம், தெப்பக்குளம், யானைக்கல், மதுரை தினசரி சந்தை, தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகளான தப்பாட்டம், பரதநாட்டியம், பொய்க்கால் குதிரை, கரகாட்டம் ஒயிலாட்டம், மயிலாட்டம், தெருக்கூத்து, புலியாட்டம், உள்ளிட்ட பல்வேறு புகைப்படங்களின் தொகுப்பு கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் பண்டைய கால கல்வெட்டுக்கள் தமிழ் ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் கீழடி, பொருநை அகழ்வாராய்ச்சிகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

    முதல் தளத்தில் மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில் தனிப்பரிவு செயல்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் நூல்களை பார்வையிட வசதியாக சக்கர நாற்காலிகள் தயார் நிலையில் உள்ளது.

    முதல் தளத்தில் குழந்தைகள் பிரிவு உள்ளது. குழந்தைகள் பயன்படுத்தக்கூடிய விளையாட்டு பொருட்கள், புத்தகங்கள் ஆகியவை அடுக்கி வைக்கப்பட்டுள் ளது. தற்போது பார்வையிட மட்டுமே அனுமதி வழங்கப் பட்டுள்ளது. புத்தகங்கள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்ட பின்னர் பொது மக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படுவர்.

    நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்கள் பிரிவு இரண்டாம் தளத்தில் செயல்படுகிறது. தினசரி, வார, மாத, நாளிதழ்கள் கட்சிக்கு வைக்கப்பட்டுளது. முதல் தளத்தில் கலைஞர் பிரிவு செயல்படுகிறது. இரண்டாவது தளத்தில் தமிழ் நூல்கள் பிரிவும், மூன்றாவது தளத்தில் ஆங்கில நூல்கள் பிரிவும் செயல்படுகிறது. இதில் பல்லாயிரக்கணக் கான நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து நூலகத்தை பார்வையிட வந்த பார்வையாளர் கூறியதாவது:-

    தமிழகத்தை பொறுத்தவரை சென்னை அண்ணா நூலகத்திற்கு அடுத்தபடியாக மதுரையில் இந்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மாநகராட்சி வளாகம் மற்றும் காந்தி மியூசியம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திறந்த வெளியில் அமர்ந்து படித்து வந்தனர்.

    தற்போது கலைஞர் நூலகத்தில் அமைதியான சூழ்நிலையையும், தோட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளதால் கலைஞர் நூலகத்தை பயன்படுத்தி ஏராளமானோர் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு பதவிகளில் இடம் பிடிப்பார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றார்.

    நூலகத்திற்கு வந்த இளம்பெண் ஒருவர் கூறுகையில், எத்தனையோ பழமையான நூலகங்களுக்கு சென்றிருக்கிறோம். ஆனால் இப்படி ஒரு பிரமாண்டமான நூலகத்தை வாழ்நாளில் பார்த்ததில்லை. இது ஒரு நூலகம் போல் தெரிவதைவிட, ஒரு சர்வதேச அரங்கிற்குள் நுழைவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

    தொலைக்காட்சிகளிலும், சினிமாக்களிலும் மட்டுமே பார்த்து வியந்த ஒரு கல்வி களஞ்சியமாக திகழும் நூலகத்தில் எங்கள் காலத்தில் நேரில் பார்த்து, பயன் அடைந்தது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் என்றார்.

    காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நூலகம் திறந்து இருக்கும். பொங்கல் பண்டிகை, குடியரசு தினம், தமிழ் புத்தாண்டு, ரம்ஜான், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, தீபாவளி, கிறிஸ்துமஸ் ஆகிய பண்டிகை தினங்களில் நூலகம் செயல் படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அறிவுக்களஞ்சியமாக திகழும் இந்த நூலகம் வருங்காலத்தில் நிச்சயம் புரட்சியை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. 

    ×