search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்நாடக விவசாயிகள்"

    • போராட்டத்தில் ஈடுபட்ட கர்நாடகா மாநில விவசாயிகள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • சாம்ராஜ்நகர் போலீசார் மறியலில் ஈடுபட்ட 38-க்கும் மேற்பட்ட விவசாயிகளை கைது செய்தனர்.

    தாளவாடி:

    தமிழக நெற்களஞ்சியமான தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் காவிரி நீரை நம்பியே சாகுபடி செய்து வருகிறார்கள்.

    நடப்பு ஆண்டில் கடந்த ஜூன் 12-ம் தேதி டெல்டா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடகா வழங்கவில்லை. இதனால் காவிரி டெல்டா பகுதியில் சாகுபடி செய்திருந்த பயிர்கள் கருகின.

    கடன் வாங்கி சாகுபடி செய்த பயிர்கள் சேதம் அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இதனை அடுத்து காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரை திறந்து விடுமாறு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். மேலும் காவிரி ஆணைய கூட்டத்திலும் தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    காவிரி ஆணைய உத்தரவின்படி கர்நாடகா அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் அரசியல் கட்சிகள், விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் குதித்தனர்.

    இந்நிலையில் இன்று காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறக்க கூடாது என்பதை வலியுறுத்தி கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாய சங்க தலைவர் பாக்யராஜ் தலைமையில் 38-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈரோடு மாவட்டம் தாவாடி அருகே உள்ள தமிழக கர்நாடக எல்லையான புளிஞ்சூர் சோதனை சாவடியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் தங்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர் இல்லாத நிலையில் தமிழகத்திற்கு எப்படி தண்ணீர் திறந்து விட முடியும் என்று கூறி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட கர்நாடகா மாநில விவசாயிகள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து சாம்ராஜ்நகர் போலீசார் மறியலில் ஈடுபட்ட 38-க்கும் மேற்பட்ட விவசாயிகளை கைது செய்தனர். விவசாயிகளின் மறியல் போராட்டத்தால் தமிழக-கர்நாடகா இடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாகனங்கள் இரண்டு புறங்களிலும் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. ஒரு மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து சீரானது.

    ×