search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்டெய்னர் லாரிகள்"

    • கண்டெய்னர் லாரிகள் அனைத்தும் கடந்த சில நாட்களாக மஞ்சம்பாக்கத்தில் உள்ள லாரிகள் நிறுத்தும் யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
    • லாரி டிரைவர்கள் 75 கண்டெய்னர் லாரிகளையும் திருவொற்றியூர் பகுதியில் உள்ள லாரி நிறுத்தத்திற்கு கொண்டு சென்றனர்.

    கொளத்தூர்:

    மாதவரம் அடுத்த மஞ்சம்பாக்கம் 200 அடி சாலையில் சி.எம்.டி.ஏ லாரி நிறுத்தம் உள்ளது.

    சென்னை துறைமுகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய கண்டெய்னர் லாரிகளும், வெளி மாநிலத்தில் இருந்து துறைமுகத்திற்கு செல்ல வேண்டிய கண்டெய்னர் லாரிகளும் இங்கு நிறுத்தி செல்வது வழக்கம். சுமார் 500-க்கும் மேற்பட்ட கண்டெய்னர் லாரிகள் எப்போதும் அங்கு நிறுத்தப்பட்டு இருக்கும்.

    இந்த நிலையில் நாக்பூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இருந்து வெடிபொருள் தயாரிக்கும் மூலப்பொருட்களை கப்பல் மூலம் வெளிநாட்டிற்கு அனுப்புவதற்காக 75 கண்டெய்னர் லாரிகளில் அவை கொண்டு வரப்பட்டு இருந்தன.

    இந்த கண்டெய்னர் லாரிகள் அனைத்தும் கடந்த சில நாட்களாக மஞ்சம்பாக்கத்தில் உள்ள லாரிகள் நிறுத்தும் யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இந்த கண்டெய்னர் லாரிகளில் சுமார் 600 டன் வரை வெடிபொருள் தயாரிக்கும் மூலப்பொருட்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

    இதுபற்றி அறிந்த அப்பகுதி மக்கள் சிலர், இந்த லாரிகளால் அபாயம் இருப்பதாகவும், உடனடியாக வெடிபொருள் தயாரிக்கும் மூலப்பொருட்களுடன் நிற்கும் லாரிகள் அனைத்தையும் வேறு இடத்துக்கு மாற்றக்கோரி மாதவரம் பால் பண்ணை போலீசில் புகார் தெரிவித்தனர்.

    உதவி கமிஷனர் தட்சிணா மூர்த்தி, இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் வெடிபொருள் மூலப்பொருளுடன் நிறுத்தப்பட்ட லாரிகள் அனைத்தையும் அப்புறப்படுத்தி முறையான பாதுகாப்பு உள்ள பகுதிகளில் நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.

    இதைத்தொடர்ந்து லாரி டிரைவர்கள் 75 கண்டெய்னர் லாரிகளையும் திருவொற்றியூர் பகுதியில் உள்ள லாரி நிறுத்தத்திற்கு கொண்டு சென்றனர்.

    இதுகுறித்து அந்த லாரி டிரைவர்கள் கூறும்போது, கடந்த 4 வருடங்களாக நாக்பூர், ஹைதராபாத், ஒடிசா, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இதுபோன்ற வெடிபொருள் மூலப்பொருட்கள் கண்டெய்னர் லாரி மூலம் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக கப்பலில் ஏற்றி அனுப்பப்பட்டு வருகிறது. இந்த மூலப்பொருளால் எந்த அச்சமும் கிடையாது என்றனர்.

    ×