search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கணவர் கொலை வழக்கு"

    கல்பாக்கம் அருகே கணவர் கொலையில் ஜாமீனில் வந்த பெண் உறவினர்களால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    மாமல்லபுரம்:

    கல்பாக்கத்தை அடுத்த ஆயப்பாக்கத்தை சேர்ந்தவர் செல்வம். லோடு ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சந்திரமதி (வயது 25). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

    சந்திரமதிக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆனந்துக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்ததும் செல்வம், மனைவி சந்திரமதியை கண்டித்து வந்தார்.

    கடந்த மார்ச் மாதம் 13-ந் தேதி கூவத்தூர் அருகே செல்வம் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். சந்திரமதியும், கள்ளக்காதலன் ஆனந்தும் சேர்ந்து செல்வத்தை கடத்தி கொலை செய்து இருப்பது தெரிந்தது.

    இந்த வழக்கில் சந்திரமதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 2 மாதத்துக்கு முன்பு சந்திரமதி ஜாமீனில் வெளியே வந்தார்.

    குழந்தைகளை பார்க்க அடிக்கடி கணவர் வீட்டுக்கு வந்தார். இதற்கு அவரது மாமனார், மாமியார் மற்றும் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு வந்தது.

    நேற்று மாலை சந்திரமதி மீண்டும் குழந்தைகளை பார்க்க ஆயப்பாக்கத்துக்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்து நகை மற்றும் உடமைகளை கேட்டு தகராறில் ஈடுபட்டார். இதனை அவரது மாமனார், மாமியார் மற்றும் உறவினர்கள் கண்டித்தனர். இதனால் சந்திரமதிக்கும், உறவினர்களுக்கும் கடும் மோதல் ஏற்பட்டது.

    ஆத்திரம் அடைந்த அவர்கள் உருட்டுக்கட்டையால் சந்திரமதியை சரமாரியாக தாக்கினர். பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார்.

    போலீசார் விரைந்துவந்து உயிருக்கு போராடிய சந்திரமதியை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இரவு பரிதாபமாக இறந்தார்.

    கொலை தொடர்பாக சந்திரமதியின் மாமனார், மாமியார் மற்றும் உறவினர்கள் 10 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். கொலையுண்ட சந்திரமதி கணவரை வெறுத்தாலும் குழந்தைகள் மீது பாசத்தில் இருந்தார். ஜாமீனில் வெளியே வந்த பின் ஆதனூரில் உள்ள பெற்றோர் வீட்டில் தங்கி இருந்தார்.

    அப்போது குழந்தைகளை தன்னுடன் அனுப்ப வேண்டும் என்று கணவர் வீட்டாரிடம் அடிக்கடி கேட்டு இருக்கிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் சமாதானம் பேசி அவரை அனுப்பி உள்ளனர்.

    இந்த நிலையில் சந்திரமதி குழந்தைகளை பார்க்க சென்ற போது கணவரின் உறவினர்களால் அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×