search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓதுவார் நியமனம்"

    • கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தினமும் தீபாராதனை நடக்கும் 4 வேளைகளிலும் அம்மனை புகழ்ந்து பாடும் அபிராமி அந்தாதி மற்றும் தேவாரம் பாடுவதற்கு ஓதுவார் இல்லாத நிலை இருந்தது.
    • கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு என்று தனியாக ஓதுவார் நியமிக்க வேண்டும் என்று பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    கன்னியாகுமரி:

    உலகப்புகழ்பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள். பக்தர்களின் தரிசனத்துக்காக தினமும் அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பகல் 12.30 மணிக்கு அடைக்கப்படுவது வழக்கம்.

    அதேபோல மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு நடை அடைக்கப்படும். இந்த கோவிலில் தினமும் அதிகாலை 6 மணி, காலை 11.30 மணி, மாலை 6.30 மணி மற்றும் இரவு 8 மணி ஆகிய 4 நேரங்களில் அலங்கார தீபாராதனை நடைபெறுவது வழக்கம். இந்த தீபாரதனையின்போது ஓதுவார்கள் அபிராமி அந்தாதி மற்றும் தேவாரம் பாடல்களை பாடுவது வழக்கம். மேலும் புரட்டாசி மாதம் நடைபெறும் நவராத்திரி திருவிழாவின்போது 10 நாட்களும் இரவு 8.30 மணிக்கு பகவதி அம்மன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் வெளி பிரகாரத்தை சுற்றி பவனி வரும்போது 3-வது சுற்றின் இறுதியில் அம்மன் எழுந்தருளி இருக்கும் வாகனத்தின் முன்னால் ஓதுவார்கள் தேவாரம் பாடல்களை பாடியபடி செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் கன்னியாகுமரி பகவதி அம்மன்கோவிலில் ஓதுவாராக பணியாற்றி வந்த பாலசுப்பிரமணிய ஓதுவார் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்று விட்டார். இதனால் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தினமும் தீபாராதனை நடக்கும் 4 வேளைகளிலும் அம்மனை புகழ்ந்து பாடும் அபிராமி அந்தாதி மற்றும் தேவாரம் பாடுவதற்கு ஓதுவார் இல்லாத நிலை இருந்தது.

    அதேபோல புரட்டாசி மாதம் நடைபெறும் நவராத்திரி திருவிழாவின்போது 10 நாட்களும் வாகனத்தின் முன்னால் அம்மனுக்கு தேவாரப் பாடல் பாடுவதற்கு ஓதுவார் இல்லாத நிலை இருந்து வந்தது. அதற்குப் பதிலாக வெளியில் இருந்து வரும் பக்தர்களே அபிராமி அந்தாதி மற்றும் தேவாரப் பாடல்களை பாடி வந்தனர். இது பக்தர்கள் மத்தியில் பெரும் மனவேதனையை ஏற்படுத்தியது.

    எனவே கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு என்று தனியாக ஓதுவார் நியமிக்க வேண்டும் என்று பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத் தொடர்ந்து தமிழக அரசின் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை எடுத்த அதிரடி நடவடிக்கையின் பயனாக குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகம் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு என்று புதிதாக ஒரு ஓதுவாரை நியமிக்க நடவடிக்கை எடுத்தது.

    இதைத்தொடர்ந்து திருச்சி திருவானைக்காவு திருமலை சிவா உய்ய கொண்டான் கோவிலில் கடந்த 10 ஆண்டுளாக ஓதுவராக பணியாற்றி வந்த பிரசன்னா தேவி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு புதிய ஓதுவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு இப்போதுதான் முதல்முறையாக பெண் ஓதுவார் நியமிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். சிவன் கோவில்களில் பணியாற்றும் சிவாச்சாரியார்களை போல் இந்தப் பெண் ஓதுவாரும் நெற்றியில் திருநீர் பட்டை அணிந்து குங்குமம் திலகமிட்டு கழுத்தில் ருத்ராட்சக்கொட்டை மாலை அணிந்து பக்தி பரவசத்துடன் காட்சி அளிக்கிறார்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன்கோவிலில் தீபாராதனை நேரங்களில் இவர் அபிராமி அந்தாதி மற்றும் தேவார பாடல்களை பாடுவது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்து உள்ளது.

    ×