search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ்"

    சித்தூரில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆதரவாளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியதாக ஏற்பட்ட தகராறு காரணமாக சந்திரகிரி எம்எல்ஏ கைது செய்யப்பட்டார்.
    சித்தூர்:

    சித்தூர் சந்தைப்பேட்டையில் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த சிலர் மடிக்கணினி மூலம் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் அங்கிருந்த பொதுமக்களிடம், நீங்கள் யாருக்கு வாக்களிக்கப் போகிறீர்கள்? எனக் கேட்டுள்ளனர். அதற்கு பொதுமக்கள், நாங்கள் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க உள்ளோம், என சிலர் தெரிவித்துள்ளனர்.

    அவ்வாறு தெரிவித்தவர்களின் பெயர்களை தெலுங்கு தேசம் கட்சியினர் வாக்காளர் பட்டியலில் இருந்து உடனே நீக்கியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மண்டல தலைவர்கள் நரேஷ்ரெட்டி, கேசவரெட்டி, பிரகாஷ்ரெட்டி ஆகிய 3 பேரும் தெலுங்கு தேசம் கட்சியினரிடம் இருந்து மடிக்கணினியை பறித்துக்கொண்டு சித்தூரில் இருந்து ஒரு காரில் புறப்பட்டு, பாகாலா சென்றனர். பின்னர் அங்கிருந்து திரும்பி காரில் சித்தூரை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

    சித்தூர் பி.சி.ஆர். கல்லூரியை அடுத்த ஒரு சர்க்கிள் அருகில் காரில் வந்தபோது, சித்தூர் 1-டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சித்தூர் 2-டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடகுமார் மற்றும் போலீசார் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மண்டல தலைவர்கள் 3 பேரை தடுத்து நிறுத்தி, கைது செய்தனர். அவர்களிடம் இருந்த மடிக்கணினியை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான 3 பேரை சித்தூர் போலீஸ் பயிற்சி மைதானத்தில் தங்க வைத்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சந்திரகிரி தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கர்ரெட்டி இரவு 11 மணியளவில் சித்தூர் போலீஸ் பயிற்சி மைதானம் அருகில் வந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். கைதான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மண்டல தலைவர்கள் 3 பேரை உடனே விடுதலை செய்ய வேண்டும், இல்லையெனில் அவர்களை எங்களிடம் காண்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

    தகவலை கேள்விப்பட்ட சித்தூர் தெலுங்கு தேசம் கட்சியினர் சம்பவ இடத்துக்கு வந்து, எம்.எல்.ஏ.வுக்கு எதிராக கோ‌ஷமிட்டு அவர்களும் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுப்ரஜா, தெலுங்கு தேசம் கட்சியினரை சமரசம் செய்து, அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு உத்தரவிட்டார்.

    அதைத்தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சியினர் கலைந்து சென்றனர். பின்னர் பாஸ்கர்ரெட்டி எம்.எல்.ஏ.வை கைது செய்து, ஒரு வேனில் ஏற்றி திருத்தணி வழியாக கொண்டு சென்று, சத்தியவேடு கிளை சிறையில் அடைத்தனர்.

    பாஸ்கர்ரெட்டி கைதான தகவல் அறிந்ததும், அவருடைய மனைவி லட்சுமி சித்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தார். போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு 500-க்கும் மேற்பட்ட பெண் ஆதரவாளர்களுடன் தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    கைதான எனது கணவர் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மண்டல தலைவர்கள் 3 பேரை விடுதலை செய்ய வேண்டும், கணவர் எங்கு உள்ளார்? என எங்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

    இதையடுத்து எம்.எல்.ஏ.வின் மனைவி லட்சுமி உள்பட 500க்கும் மேற்பட்ட பெண் ஆதரவாளர்களை போலீசார் கைது செய்தனர். எம்.எல்.ஏ. மனைவியை யாதமரி கிளை சிறைக்குக் கொண்டு சென்று அடைத்தனர். 500-க்கும் மேற்பட்ட பெண் ஆதரவாளர்களை சித்தூரில் உள்ள ஒரு கல்யாண மண்டபத்தில் தங்க வைத்து, பின்னர் விடுவித்தனர். இந்தச் சம்பவத்தால் சித்தூரில் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது. #tamilnews
    ×