search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உப்புக்கழிவு"

    திருப்பூரில் சாய நீரில் இருந்து உப்புக்கழிவு அற்ற சுத்திகரிப்பு முறை திட்டம் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கே.சி.கருப்பணன், ஓ.எஸ்.மணியன், உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் குப்பாண்டம்பாளையத்தில் உள்ள சின்னக்கரை பொதுக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில், உப்புக்கழிவு அற்ற சுத்திகரிப்பு முறை திட்டம் ரூ.8 கோடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. சாயக்கழிவுநீரில் உப்பை பிரித்தெடுத்த பின்பு அதில் எஞ்சியுள்ள கழிவு உப்பில் இருந்து சோடியம் சல்பேட் மற்றும் சோடியம் குளோரைடு உப்புகளை தனித்தனியாக பிரித்து எடுத்து அவற்றை மறு உபயோகத்துக்கு பயன்படுத்தும் வகையில் இந்த திட்டம் உள்ளது. இதன் தொடக்க விழா நேற்று மதியம் சுத்திகரிப்பு நிலைய வளாகத்தில் நடைபெற்றது.

    விழாவுக்கு தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தலைமை தாங்கி பேசும்போது, சாயக்கழிவு நீரில் இருந்து சோடியம் சல்பேட், சோடியம் குளோரைடு ஆகியவற்றை பிரித்தெடுக்கும் முறை திருப்பூரில் தொடங்கப்பட்டுள்ளது. மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் குழுவினர் ஆலோசனை நடத்திய பிறகு அரசு அனுமதியுடன் இந்த உப்புகளை வெளிமாநிலங்களுக்கு விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

    விழாவில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசியதாவது:-

    உலக ஜவுளி கண்காட்சி கோவையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். தமிழக ஜவுளி தொழில் பற்றி உலக நாடுகள் அறிந்து கொள்ளும் வகையிலும், சந்தைப்படுத்தவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பூஜ்ய நிலை சுத்திகரிப்பு தொழில்நுட்பம் மூலமாக திருப்பூரில் உள்ள சாயப்பட்டறை உரிமையாளர்கள் சாயக்கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து வருகிறார்கள்.

    சாயக்கழிவுநீரில் சோடியம் சல்பேட் மற்றும் சோடியம் குளோரைடு உப்பு இரண்டும் சேர்ந்து திடக்கழிவுகளாக பொதுக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் டன் கணக்கில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. தற்போது செயல்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்தால் சோடியம் சல்பேட், சோடியம் குளோரைடு ஆகியவற்றை தனித்தனியாக பிரித்து அவற்றை விற்பனை செய்யும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 1 லிட்டர் உப்புக்கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய 18 காசு செலவாகிறது. இதில் உப்புகளை விற்பனை செய்வதன் மூலம் 15 காசு திரும்ப கிடைத்து விடுகிறது. 3 காசு மட்டுமே செலவாகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்தி மாசு இல்லாத திருப்பூரை உருவாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், கைத்தறி மற்றும் துணி நூல் துறை இயக்குனர் முனியநாதன், மாசுகட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் மற்றும் செயலாளர் சேகர், கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி, எம்.எல்.ஏ. கரைப்புதூர் நடராஜன், முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், சின்னக்கரை பொதுக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய நிர்வாக இயக்குனர் சண்முகசுந்தரம், துணை தலைவர் முருகநாதன், திருப்பூர் சாயப்பட்டறை உரிமையாளர்கள் சங்க தலைவர் நாகராஜன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். 
    ×