search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இள வயது கோடீசுவரர்"

    • தற்போது அம்பானிக்கு 66 வயது; அதானிக்கு 61 வயது
    • 10,000 கோடியை எண்ணில் குறிப்பிட்டால் 10க்கு பின் 10 பூஜ்யங்கள்

    இந்திய மக்கள் தொகையில் பொருளாதார ரீதியாக இந்தியர்களில் பெரும்பான்மையானவர்கள் நடுத்தர மற்றும் அதற்கும் கீழ் உள்ள பிரிவுகளில்தான் வாழ்கின்றனர்.

    குறைந்த அளவே பெரும் பணக்காரர்கள் உள்ள நம் நாட்டில், பல கோடிகளுக்கு அதிபதிகள் என்றால் உடனே நினைவுக்கு வருவது, முகேஷ் அம்பானி மற்றும் கவுதம் அதானி ஆகியோரின் பெயர்கள்தான்.

    ஆனால், தற்போது அம்பானிக்கு 66 வயதும், அதானிக்கு 61 வயதும் ஆகிறது.

    என்னதான் முயன்றாலும் 50 வயதை கடந்த பிறகுதான் கோடீசுவரராக ஒருவர் உருவாக முடியும் எனும் நம்பிக்கை மக்களிடையே உள்ளது.

    ஆனால், இந்த எண்ணத்தை தகர்க்கும் வகையில், 27 வயதே ஆன பேர்ல் கபூர் (Pearl Kapoor) என்பவர் ரூ.9840 கோடி ($1.2 பில்லியன்) - கிட்டத்தட்ட 10,000 கோடி - நிகர மதிப்புடன், இந்தியாவின் இள வயது கோடீசுவரர் ஆக உருவெடுத்து சாதனை படைத்துள்ளார்.

    பேர்ல் கபூர், கடந்த 2023 மே மாதம், சைபர் 365 (Zyber 365) எனும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் வெப்3-இயக்கும் இயங்குதள முறைமை (Web3-driven operating system) ஒன்றை துவங்கினார்.

    இங்கிலாந்து தலைநகர் லண்டனை தலைமையகமாக கொண்டு இயங்கும் "சைபர் 365" நிறுவனத்திற்கு குஜராத் மாநில அகமதாபாத் நகரிலும் கிளை உள்ளது.

    ரூ.9840 கோடி ($1.2 பில்லியன்) மதிப்பிடப்பட்டுள்ள சைபர் 365, "அதிவேகமாக வளர்ந்து வரும் யூனிகார்ன்" ($1 பில்லியனுக்கு அதிகமான மதிப்புடைய நிறுவனம்) எனும் அந்தஸ்தை எட்டியுள்ளது.

    சைபர் 365 நிறுவனத்தின் 90 சதவீத பங்குகள், பேர்ல் கபூர் வசம் உள்ளது.

    ஸ்டார்ட்-அப் நிறுவனமாக தொடங்கப்பட்ட சைபர் 365 நிறுவனத்திற்கு, முதல் நிலை நிதி ஈர்ப்பில், இவரது திறமையில் நம்பிக்கையுள்ள "எஸ்ஆர்ஏஎம் & எம்ஆர்ஏஎம்" (SRAM & MRAM) எனும் குழுமத்திலிருந்து $100 மில்லியனுக்கு மேல் முதலீடு கிடைத்தது.

    வெப்3 தொழில்நுட்பம் எனும் உயர் மென்பொருள் கட்டமைப்பின் முன்னோடி என கருதப்படும் பேர்ல் கபூர், லண்டன் நகரின் குயின் மேரி பல்கலைக்கழகத்தில் நிதித்துறையில் முதுநிலை பட்டம் பெற்றவர்.

    தனது எதிர்கால திட்டங்கள் குறித்து பேர்ல் கபூர், "அதிவிரைவாக வளரக்கூடிய ப்ளாக்செயின், செயற்கை நுண்ணறிவு மற்றும் சைபர்பாதுகாப்பு ஆகிய அனைத்தும் ஒருங்கிணைந்து குலோபலைசேசன் 3.0 எனும் புதிய காலகட்டத்திற்கு மக்களை அழைத்து சென்று அவர்கள் வாழ்வை வலுப்படுத்த போகிறது" என்கிறார்.

    10,000 கோடியை எண்ணில் குறிப்பிட்டால் 10க்கு பின் 10 பூஜ்யங்கள் வரும்.

    "சைபர் நிறுவனம்" தொடங்கி 10க்கு பின் "10 சைபர்" அளவிற்கு சொத்து சேர்த்து வியக்க வைக்கிறார் என சமூக வலைதளங்களில் பேர்ல் கபூரை பாராட்டுகிறார்கள்.

    ×