search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரட்டைபாதை"

    • குண்டூர்-பிபிநகர் இரட்டை ரெயில் பாதை ரூ.2853.23 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகிறது.
    • தற்போது சென்னையில் இருந்து ஐதராபாத் மார்க்கமாக குண்டூர் வழியாக 3 ரெயில்கள் செல்கிறது.

    சென்னை:

    ரெயில்வே துறையின் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய அமைச்சரவை பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளது.

    சுமார் ரூ.32,500 கோடி மதிப்பீட்டில் ரெயில்வே அமைச்சகம் 7 திட்டங்களுக்கு ஒப்புதல் கொடுத்துள்ளது.

    இதன் மூலம் 9 மாநிலங்களில் 35 மாவட்டங்களில் ரெயில்வே கட்டமைப்பு வசதி விரிவுப்படுத்தப்படுகிறது. இந்திய ரெயில்வேயின் தற்போதைய வலையமைப்பை 2339 கி.மீ. வரை உயர்த்தவும், ஆண்டுக்கு 200 மில்லியன் டன்கள் கூடுதல் சரக்கு போக்குவரத்து, அதிக போக்குவரத்து கொண்ட பகுதிகளில் மிகவும் உள் கட்டமைப்பை மேம்படுத்துதல் போன்ற திட்டங்களுக்கு இதன் மூலம் ஊக்கப்படுத்தப்படுகிறது.

    இந்த திட்டத்தில் ஆந்திர மாநிலம் குண்டூர்-பிபிநகர் 239 கி.மீ நீளமுள்ள ரெயில் பாதை இரட்டை பாதையாக மாற்றப்படுகிறது. இதனால் சென்னை-ஐதராபாத் இடையே 78 கி.மீ பயண தூரம் மிச்சமாகிறது.

    இதே போல் குட்டக்-விழியநகரம் இடையே 3-வது வழிப்பாதை அமைக்கப்படும் பட்சத்தில் இந்த வழித்தடத்தில் ஏற்படும் கால தாமதம் தவிர்க்கப்படுவதோடு சென்னை-கொல்கத்தா இடையே கூடுதல் ரெயில்களை இயக்கவும் உதவுகிறது.

    இதுகுறித்து ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், குண்டூர்-பிபிநகர் இரட்டை ரெயில் பாதை ரூ.2853.23 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் இந்த பாதையில் கூடுதலாக ரெயில்களை இயக்க முடியும்.

    சென்னை-ஐதராபாத் இடையே வந்தே பாரத் ரெயிலையும் இயக்கலாம். இந்த வழித்தடத்தில் ஒரு பாதை கடந்த சில வருடங்களுக்கு முன்பு மின்மயமாக்கப்பட்டது. தற்போது இந்த ஒரு வழிப்பாதையில் ரெயில் போக்குவரத்து அதிகமாக உள்ளது.

    பிபிநகர்-குண்டூர் வழி தடத்தில் ஒரே ஒரு ரெயில் மட்டுமே செல்கிறது. இதன் மூலம் சென்னை செல்லக்கூடிய ரெயில்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கால நேரம் மிச்சமாகிறது என்றார்.

    சென்னை கோட்ட மேலாளர் விஷ்வநாத் கூறும்போது, தெற்கு மத்திய ரெயில்வே இத்திட்டம் குறித்த விரிவான அறிக்கையை சமர்ப்பித்து உள்ளது. இந்த இரட்டை ரெயில் பாதை திட்டம் 2027-28-ல் நிறைவடையும்.

    இந்த வழி திட்டம் இரட்டை பாதையாக மாறும்போது சென்னை-ஐதராபாத் இடையே பயண நேரம் குறைகிறது.

    தற்போது சென்னையில் இருந்து ஐதராபாத் மார்க்கமாக குண்டூர் வழியாக 3 ரெயில்கள் செல்கிறது. விஜயவாடா காழிபேட் வழியாக ஐதராபாத் செல்லும் சேர்மினார் எக்ஸ்பிரசின் பயண நேரம் 12 மணி நேரம் 50 நிமிடங்களாக உள்ளது. இரட்டை வழிப்பாதையாக மாறும்போது இந்த வழித்தடத்தில் 130 கி.மீ வேகத்தில் ரெயில்களை இயக்க முடியும்.

    மேலும் இது ரெயில்கள் தாமதமாக செல்வதையும் குறைக்க உதவும் என்று தெரிவித்தார்.

    இதே போல் ரூ.5 ஆயிரம் கோடி திட்ட செலவில் குட்டக்-விழியநகரம் இடையே 385 கி.மீ தூரத்திற்கு 3-வது வழிப்பாதை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை-கொல்கத்தா வழித்தடத்தில் பயண நேரத்தை குறைக்க உதவுகிறது.

    ×