search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆழிப்பேரலை"

    • தனுஷ்கோடியை ஒரு குட்டி சிங்கப்பூர் என்று செல்லும் அளவுக்கு வர்த்தகம் நடைபெற்று வந்தது.
    • கடந்த 1964 ஆண்டு டிசம்பர் 23-ந்தேதி மிதமான காற்றுடன் கூடிய மழை பெய்துகொண்டிருந்தது.

    ராமேசுவரம்:

    தனுஷ்கோடி... ஆழிப்பேரலை தாக்கி அழிந்ததின் 59 ஆண்டு நினைவு தினம் இன்று. சேதமடைந்த கட்டிடங்கள் நினைவுகளாக காட்சி அளித்துக்கொண்டு இருக்கிறது. தமிழகத்தின் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி என்று இரண்டு கடல் பகுதியை கொண்டது தனுஷ்கோடி துறைமுக நகரம் இலங்கைக்கு மிகவும் குறுகிய தொலைவில் உள்ளது. இதனால் இங்கிருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கினால் அதிகளவில் வருவாய் கிடைக்கும் என்பதால் தனுஷ்கோடியில் துறைமுகம் அமைக்க ஆங்கிலேயர்கள் திட்டமிட்டு துறைமுகம் அமைக்கப்பட்டு தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே இரண்டு கப்பல் போக்குவரத்து 1914 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

    இந்த துறைமுகத்திற்கு அதிகளவில் சரக்கு கொண்டு செல்லும் வகையில் ரெயில் போக்குவரத்தை ஆங்கிலேயர்கள் தொடங்கினர். சென்னையில் இருந்து தனுஷ்கோடிக்கு போட்மெயில் ரெயில் போக்குவரத்து நடைபெற்று வந்தது. தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு இரண்டு கப்பல்கள் இயக்கப்பட்டது. இதனால் தனுஷ்கோடி மிகப்பெரிய அளவில் வர்த்தக துறைமுக நகரமாக மாறியது.

    இந்த பகுதி மக்கள் தனுஷ்கோடியை ஒரு குட்டி சிங்கப்பூர் என்று செல்லும் அளவுக்கு வர்த்தகம் நடைபெற்று வந்தது. இலங்கை வழியாக செல்லும் பயணிகள் தங்களது பணத்தை மாற்றிக்கொள்ளும் வகையில் அலுவலகம், காவல் துறை, சுங்கத்துறை, தபால் அலுவலகம், ரெயில் நிலையம் என பரந்து விரிந்து காணப்பட்ட தனுஷ்கோடி துறைமுக நகரம், ஆழிப்பேரலையில் சிக்கிகொண்டு அழிந்து போகும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

    கடந்த 1964 ஆண்டு டிசம்பர் 23-ந்தேதி மிதமான காற்றுடன் கூடிய மழை பெய்துகொண்டிருந்தது. இரவு 10 மணிக்கு கிராமத்தில் உள்ள பொதுமக்கள் வீடுகளிலும், அரசுத்துறை அதிகாரிகள் என அலுவலகத்திலும் இருந்தனர். காற்றின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க கடலின் சீற்றமும் அதிகமானது. நள்ளிரவு 12.30 மணிக்கு கொட்டித்தீர்த்த மழை சுழன்று அடித்த காற்று கடலில் எழுந்த ஆழிப்பேரலை தனுஷ்கோடியை தாக்கியது. விடியும் என காத்திருந்த மக்கள் அனைவரும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர்.

    அரசுத்துறை கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்தது. மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டதால் அனைத்து அலுவலகங்கள் மற்றும் வீடுகள் கடுமையாக சேதமடைந்தது இரண்டு கிலோ மீட்டர் தொலைவுக்கு தனுஷ்கோடி கடலுக்குள் சென்று விட்டது. 

    ஆழிப்பேரலையில் சிக்கி சின்னாபின்னமான ரெயில்

    ஆழிப்பேரலையில் சிக்கி சின்னாபின்னமான ரெயில்

    பாம்பன் பகுதியில் இருந்து தனுஷ்கோடி நோக்கி வந்த ரெயில் சிக்னல் கிடைக்காமல் இடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பேரலையில் சிக்கி தூக்கி வீசப்பட்ட அந்த ரெயிலில் இருந்த பயணிகள் ஏராளமான பேர் உயிரிழந்தனர். விடிந்தால் 24-ந்தேதி அதிகாலையில் தனுஷ்கோடியில் தாக்கிய புயல் பாம்பன் பாலத்தையும் விட்டு வைக்கவில்லை. 8 இரும்பு கர்டர்களை தூக்கி கடலில் வீசியது. 45 நாட்களுக்கு பின் பாம்பன் பாலம் ரெயில்வே துறையினரால் மீண்டும் சீரமைக்கப்பட்டது.

    தனுஷ்கோடியை புயல் தாக்கியது காலையில் தான் தெரியவந்தது. துறைமுக நகரம் எங்கு பார்த்ததாலும் தண்ணீர் நிறைந்த சிறு சிறு தீவுகள் போல காட்சி அளித்தது. புயலில் சிக்கி உயரிழந்தவர்கள் சடலங்கள் அங்கும் இங்குமாக சிதறிக் கிடந்தது. மரண ஓலங்கள் அழுகை என மனதை தவிக்க வைத்து இன்றுடன் 59 ஆண்டுகள் ஆகிறது.

    இன்றும் தனுஷ்கோடி வரும் சுற்றுலா பயணிகள் ஆழிப்பேரலையின் தாக்கத்தை முழுமையை புரிந்து கொள்ளமுடிகிறது. புகழ் பெற்ற துறைமுக நகரம் தனது அழிவுக்கு பின் பழமையை எடுத்துகாட்டும் விதமாக கட்டிடங்கள் காட்சி அளிக்கின்றது. தனுஷ்கோடிக்கு நேராக வாகனங்கள் வர முடியாது. 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முகுந்தராயர் சத்திரம் வரையில் வாகனங்கள் வந்து விடும். இதன் பின் அங்கிருக்கும் பிரத்யேக வாகனங்கள் மூலம் தனுஷ்கோடிக்கு செல்ல வேண்டும். வழி நெடுகிலும் கடலில் இருந்து மணல் மேடுகளாக காணப்படுகின்றது. கடல் நீரில் தான் இந்த வாகனம் சென்று வருகிறது. பாதுகாப்பற்ற பயணமாக இருந்தாலும் இதை தவிர வேறு வழி கிடையாது. தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆழிப்பேரலையின் கோர தாண்டவத்தை பார்த்து வருகின்றனர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பல கோடி மதிப்பீட்டில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் அரிச்சல்முனை வரை சாலைகள் அமைக்கப்பட்டு பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இதன் பின்னர் தனுஷ்கோடி மற்றும் அரிச்சல்முனை பகுதிக்கு பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆண்டுக்கு 3 கோடி வரை வந்து செல்லுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனைதொடர்ந்து சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களின் அடிப்படை வசதிகளான கழிவறை, வாகன நிறுத்தம், பொதுமக்கள் கடற்கரையோரம் அமர்ந்து பொழுது போக்கிடும் வகையில் இருக்கைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யவும், இடிந்து போன தேவாலயத்தை பழமை மாறாமல் புதுப்பிக்கவும் தமிழ்நாடு அரசு ரூ.5 கோடி நீதி ஒதுக்கீடு செய்து அதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் நிறைவடையும்போது புதுப்பொலிவு பெற்று விடும். மேலும் தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கினால் மீண்டும் தனுஷ்கோடி பிரமாண்ட நகரமாக மாறி விடும் என்ற நம்பிக்கையுடன் இன்றளவும் 200-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் 59 ஆண்டு நினைவுகளுடன் வாழ்ந்து வருகின்றனர்.

    ×