search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆன்லைன் கடன் மோசடி"

    • பொதுமக்கள் பலர் கடன் செயலிகளின் மூலம் கடன் பெற்று வருகின்றனர்.
    • இதன் மூலம் புகைப்படங்களை நிர்வாண படமாக மார்பிங் செய்து பணம் கேட்டு மிரட்டும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.

    திருப்பூர்:

    பொதுமக்கள் அவசரத்தேவைக்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ குறிப்பிட்ட செயலிகளின் மூலம் கடன் வாங்க வேண்டாம் என போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். செயலிகளின் மூலம் கடன் வாங்கும்போது கடன் பெறுபவரின் செல்போனில் இருக்கும் தொடர்பு எண்கள், புகைப்படம் மற்றும் தனிப்பட்ட விவரங்களை அந்த செயலிகள் சேகரித்து வைத்துக்கொள்கின்றன.

    மேலும் கடன் பெற்றவர்களின் நண்பர்கள், உறவினர்களின் செல்போனுக்கு கடன் பெற்ற நபர் குறித்து தவறாகவும், ஆபாசமாகவும் குறுஞ்செய்திகளை மோசடி கும்பல் அனுப்புகிறது. இதனால் லோன் செயலிகள் மூலம் கடன் பெறுவோர், பணிபுரியும் இடத்திலும், உறவினர்களிடமும் பல்வேறு அவமானங்களுக்கு உள்ளாக்கப்படுவதுடன் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். எனவே குறிப்பிட்ட லோன் செயலிகள் மூலம் கடன் பெற வேண்டாம் என போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

    இருப்பினும் பொதுமக்கள் பலர் கடன் செயலிகளின் மூலம் கடன் பெற்று வருகின்றனர். இதன் மூலம் புகைப்படங்களை நிர்வாண படமாக மார்பிங் செய்து பணம் கேட்டு மிரட்டும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இதில் திருப்பூர் சென்னிமலைப்பாளையம் அம்பிகைநகரை சேர்ந்த கனகராஜ் (வயது 38) என்பவர் பாதிக்கப்பட்டுள்ளார்.

    இது குறித்து அவர் திருப்பூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். கடந்த 21-ந்தேதி கடன் கொடுக்கும் செயலியை போனில் பதிவிறக்கம் செய்து கடன் கேட்டு விண்ணப்பித்தேன். கடன் கேட்டு ஆதார், பான் கார்டு, புகைப்படம் உள்ளிட்ட விவரங்களை பதிவேற்றம் செய்தேன். பின்னர் ரூ.7ஆயிரம் கடனாக பெற்றேன். இந்த தொகை 28-ந்தேதிக்குள் ரூ.12ஆயிரத்து 566 செலுத்த வேண்டும் என்று அறிக்கை அனுப்பி இருந்தனர். 7 நாட்களுக்கு ரூ.5ஆயிரம் தருகிறேன். அதிகப்படியான வட்டி செலுத்த முடியாது என்று தெரிவித்தேன்.

    அப்போது கடன் வழங்கிய நபர்கள் எனது செல்போனை ஹேக் செய்துள்ளதாக மிரட்டினர். மேலும் நான் வாங்கிய கடனுக்கு ரூ.8ஆயிரம் செலுத்த வேண்டும் என்று கூறியதுடன் எனது புகைப்படத்தை நிர்வாண படமாக மார்பிங் செய்து அனுப்பினர். இதனால் அதிர்ச்சியடைந்த நான் ரூ.8ஆயிரத்தை அனுப்பி விட்டேன்.

    மீண்டும் மார்பிங் செய்த புகைப்படத்தை அனைவருக்கும் அனுப்புவோம் என்று மிரட்டி பணம் கேட்டு வருகின்றனர். எனவே கடன் செயலி மோசடி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூரில் பொதுமக்கள் பலர் கடன் செயலி மோசடி கும்பல் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் போலீசில் புகார் தெரிவிக்காமல் மோசடி கும்பல் கேட்கும் பணத்தை அனுப்பி விடுகின்றனர். எனவே இது போன்ற செயலில் ஈடுபடும் கும்பல் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×