search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அவ்வை"

    • சங்க இலக்கிய நூல்களாகிய அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை போன்றவற்றில் அவ்வையார் எழுதியதாக 69 பாடல்கள் உள்ளன.
    • இதில் புறப்பாட்டு33; அகப்பாட்டு 26. இவை அத்தனையும் ஒரே அவ்வை எழுதியதுதானா?

    பொதுவாக அவ்வையை ஒற்றைத் தோற்றமுடைய ஒரே நபரென நாம் எண்ணுகிறோம். ஆனால் தமிழ்ப் பரப்பில் எட்டு அவ்வையார்கள் இருந்ததாக ஒரு நூலில் படித்த ஞாபகம். இப்படித்தான் அகத்தியர் பற்றி ஒரு பாடல் எழுத எண்ணிய போது... மொத்தம் 36 அகத்தியர்கள் கிடைத்தனர்.

    அதுபோலவே அவ்வையாரிலும் பலர் உண்டு. அதைக்கால வரிசையோடு நிறுவுகிற நூல் ஏதேனும் இருக்கிறதா என்பது தெரியவில்லை. சில அவ்வைகளை இங்கே நினைவூட்ட விரும்புகிறேன்.

    1. முருகன் என்னும் செவ்வேள் முதற்சங்கக் காலத்தவன் எனின்... முருகன், "சுட்டபழம் வேண்டுமா சுடாதபழம் வேண்டுமா?" எனக் கேட்ட அவ்வைதான் முதல் அவ்வையாக இருக்கக்கூடும். இவளது காலம் இந்தச் சம்பவம் எப்போது நடந்ததாக வரலாறு முடிவெடுக்கிறதோ அந்தக் காலம்.

    2. திருவள்ளுவர் காலத்தில் அவரது உறவினளாக ஒரு அவ்வை இருந்திருக்கிறாள். அடியளவு கருதி திருக்குறளைச் சங்கப் புலவர்கள் ஏற்க மறுத்தபோது, அவள்தான் வள்ளுவருக்காக வக்காளத்து வாங்கி அந்நூலை அறங்கேற்றம் செய்திருக்கிறாள். அப்படியும் "உறுதிபொருள் நான்கின் ஒன்று குறைகிறதே" என வம்புக்கு வந்த புலவர்களை அமைதிப்படுத்தவே அவள் 'வீட்டுப்பால்" என்னும் நூலை செய்தாள். அது 'அவ்வை குறள்' என்னும் பெயரில் கிடைக்கிறது. இது ஒருஅவ்வை.

    3. சங்க இலக்கிய நூல்களாகிய அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை போன்றவற்றில் அவ்வையார் எழுதியதாக 69 பாடல்கள் உள்ளன. இதில் புறப்பாட்டு33; அகப்பாட்டு 26. இவை அத்தனையும் ஒரே அவ்வை எழுதியதுதானா?

    4. "மூவர் கோவையும் மூவிளங் கோவையும்

    பாடிய என்தன் பனுவல் வாயால்

    எம்மையும் பாடுக என்றனீர் யானிங்கு

    எங்கணம் பாடுகேன் நுமையே?"

    எனப் பாடிய அவ்வையின் காலம் தெளிவாகத் தெரிகிறது. இவள் கபிலர் காலத்தில் வாழ்ந்தவள். சேர, சோழ, பாண்டிய மன்னர்களை ஒரே மேடையில் சந்தித்தவள் இவள்தான்.

    5. அதியமான் நெல்லிக்கனி கொடுத்த அவ்வை ஒருத்தி இருக்கிறாள். அவள் மேற்சொன்ன கபிலர் காலத்து அவ்வையாக இருக்கலாம்.

    6. கம்பர், புகழேந்தி, ஒட்டக்கூத்தர் காலத்தில் ஒருஅவ்வை உண்டு. 'கூழுக்குப் பாடியஅவ்வை' இவளா? 8,10.12 ஆம் நூற்றாண்டுகளில் (சற்று முன்பின்னாக) மூன்று அவ்வைகள் இருந்திருக்கலாம்.

    7. அவ்வை என்றாலே நினைவுக்கு வரும் நூல்கள் ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி. இவையாவும் ஒரே காலத்தில் ஒரே அவ்வையால் எழுதப்பட்டனவா?

    8.விநாயகர் அகவல், அசதிக்கோவை, பந்தனந்தாதி போன்ற நூல்கள் அவ்வை பெயரில் உள்ளது. 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் கூட அவ்வை பெயரில் ஆள் இருந்திருக்கிறார்கள்.

    எனவே அவ்வை என்பவர் ஒருவரன்று. ஒரே பெயரில் வாழ்ந்த வெவ்வேறு காலத்தவர்.

    -பாவலர் வையவன்

    ×