search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு பஸ் கண்டக்டர் பலி"

    • செட்டிசாவடி அருகே உள்ள பசவக்கல் பஸ் நிறுத்தம் என்ற இடத்தில் காலை 9 மணி அளவில் பஸ் வந்தபோது நாய் ஒன்று சாலையின் குறுக்கே திடீரென ஓடியது.
    • நாய் மீது மோதாமல் இருக்க வேண்டி டிரைவர் சீனிவாசன், பஸ்சை இடதுபுறமாக திருப்பி பிரேக் போட்டார்.

    சேலம்:

    சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஏற்காடு அடிவாரம் அருகே உள்ள செட்டிசாவடி பகுதிக்கு அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    வழக்கம்போல் இன்று காலை சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து அரசு டவுன் பஸ் ஒன்று அஸ்தம்பட்டி, கோரிமேடு வழியாக செட்டிசாவடி பகுதிக்கு சென்றது. பின்னர் அங்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு, பஸ் புறப்பட்டு சேலம் பழைய பஸ் நிலையம் நோக்கி வந்தது.

    இந்த பஸ்சை டிரைவர் சீனிவாசன் ஓட்டினார். கண்டக்டர் ராஜேந்திரன் (வயது 54) பயணிகளிடம் டிக்கெட் எடுத்துவிட்டு பஸ்சுக்குள் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்ததால் பஸ் முன்பகுதி படிக்கட்டில் நின்று கொண்டிருந்தார்.

    செட்டிசாவடி அருகே உள்ள பசவக்கல் பஸ் நிறுத்தம் என்ற இடத்தில் காலை 9 மணி அளவில் பஸ் வந்தபோது நாய் ஒன்று சாலையின் குறுக்கே திடீரென ஓடியது. இதனால் நாய் மீது மோதாமல் இருக்க வேண்டி டிரைவர் சீனிவாசன், பஸ்சை இடதுபுறமாக திருப்பி பிரேக் போட்டார்.

    அப்போது பஸ் முன்பக்க படிகட்டில் நின்று கொண்டிருந்த கண்டக்டர் ராஜேந்திரன் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவர், பின்தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதை கண்டு பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக கீழே இறங்கி அவரை காப்பாற்ற முயன்றபோது, அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.

    இதையடுத்து கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, ராஜேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பலியான கண்டக்டர் ராஜேந்திரனுக்கு சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள அத்தனூர் பகுதி ஆகும். அங்கு அவருடைய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ராஜேந்திரன் இறந்த தகவல் குறித்து அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்த அவர்கள், ராஜேந்திரன் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    இந்த விபத்து சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×